என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஐஐடியில் உயர்கல்வி... பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்
- நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
- மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது கட்ட விழா இன்று நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள சேலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையாக த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
அப்போது பேசிய விஜய், ராஜேஸ்வரி வீட்டில் மின்சாரம் கூட இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து உள்ளார். அவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை. கண்டிப்பாக ஆவீங்க. என்னுடைய wishes. all th best என்று கூறி அவருக்கு பேனாவை பரிசளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாணவி ராஜேஷ்வரி, நான் எப்படி படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று எல்லோரும் பார்த்து இருப்பீங்க. நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு சந்தோஷமாக இருக்கு. நீங்களும் என்னை மாதிரி ஆக வேண்டும் என்றால் அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டும்தான் அதை விட்டுறாதீங்க. all the best girls என்று கூறினார்.
சாரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. சார் எனக்கு cash கொடுத்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம். சாருக்கு ஒரு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டி, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார். மேலும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி உள்ளார்.