என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வைகை அணையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
    X

    வைகை அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    வைகை அணையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

    • இன்று முதல் 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 900 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
    • தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 45,041 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதாலும், பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 61.22 அடியை எட்டியது.

    அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன், கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 900 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், மீதமுள்ள 75 நாட்களுக்கும் தண்ணீரின் இருப்பை பொறுத்து முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 45,041 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதற்காக அணை திறக்கப்படும் மதகு பகுதியில் அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த தேன்கூடுகளை தீயணைப்பு துறையினர் மூலம் அகற்றினர். அணைக்கு 1230 கனஅடி நீர் வருகிறது. 3841 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2131 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1622 கனஅடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 128.40 அடியாக உள்ளது. அணையில் 4352 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின்உற்பத்தி 118 மெகாவாட்டில் இருந்து 144 மெகாவாட் உற்பத்தி அதிகரித்துள்ளது. 4 ஜெனரேட்டர்களில் தலா 36 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    வீரபாண்டி 2.2, போடி 0.8, உத்தமபாளையம் 3.4, கூடலூர் 2.4, பெரியாறு அணை 24.4, தேக்கடி 19.8, சண்முகாநதி 2.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×