என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்ட மசோதா"

    • தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது.
    • வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும்.

    சென்னை:

    மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கவர்னரிடம் இருந்த 10 மசோதாக்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதேபோல் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து வருகிறார். அந்த அடிப்படையில் கடந்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அவருக்கு அனுப்பட்டு இருந்த மசோதாக்களில் 5 மசோதாக்களுக்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார்.

    அதில் 2 மசோதாக்கள் மிக முக்கியமானது ஆகும். முதலாவது, தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (கடும் வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டம்) 2025. இந்த சட்டத்தின்படி கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது.

    மேலும் அவர்களுக்கு இடையூறு, வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகுமிடங்களில் பின்தொடர்தல், அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக்கொள்ளுதல், அவரது வீடு, வசிக்குமிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்குச் செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குற்றமாக கருதப்படும்.

    இந்த குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். வெளி ஏஜென்சிகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108-ம் பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும். அதாவது அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த மசோதா, குறிப்பாக ஏழை தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் மீது நடக்கும் இந்த கொடுமைகளை நிறுத்த தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இரண்டாவது மசோதா, தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அதில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி இனி உயிரி-மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) முறையற்று குவித்து பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்துவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

    வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும். எனவே மருத்துவ கழிவுகளை இனி கண்டபடி கொட்டக்கூடாது. முறைப்படி அகற்ற வேண்டும்.

    இதுதவிர தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்ட மசோதா ஆகியவற்றுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    • 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.
    • வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    சென்னை:

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததன் மூலம் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.

    மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில், 37 மாற்றுத்திறனாளிகளும் வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம்.
    • சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது.

    டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    • ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன.
    • விளக்கங்கள் பெற நேரம் எடுக்கும் என்பதால், ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய மந்திரி அஜய் குமார் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது:-

    2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரப்பெற்ற 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 24 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் இருந்து வரப்பெற்ற 23 மசோதாக்கள், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

    2014- 2022 காலகட்டத்தில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன. இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

    மசோதாக்கள் தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆராயும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கங்கள் மற்றும் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இதுபோன்று ஆலோசனை செயல்முறை, கருத்துகள் மற்றும் விளக்கங்களைப் பெறுவதற்கு நேரம் எடுக்கும். எனவே, ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
    • ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரியை உயர்த்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டது.

    அதன்படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள். பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    வாகனங்களுக்கான வரியை உயர்த்தி சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வாகனங்களுக்கான புதிய வரி நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 20 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு வருடத்துக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்கு உள்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8.25 சதவீதமும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 10.25 சதவீதமும், ஓராண்டு முதல் 2 ஆண்டுக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8 சதவீதமும், ரூ.1லட்சத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 10 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ் நாள் வரி அதன் விலைக்கு ஏற்ப 6 சதவீதம் முதல் 9.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    2 ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட புதிய கார்களுக்கு வாழ்நாள் வரி 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு 20 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி ரூ.5 லட்சத்துக்கு கார் வாங்கினால் ரூ.60 ஆயிரம் வாழ்நாள் வரியும், ரூ.1 லட்ச த்துக்கு மோட்டார்சைக்கிள் வாங்கினால் ரூ.10 ஆயிரம் வாழ்நாள் வரியும் செலுத்த வேண்டும்.

    சரக்கு வாகனங்களில் சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் கிலோ முதல் 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ரூ.3100 வரை எடைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு உள்ளது.

    வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகங்களில், 35 பேர் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான காலாண்டு வரி ரூ,4,900 ஆகும். 35 பேருக்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    டிரெய்லர் வாகனங்களுக்கு ஏற்றப்படும் எடையின் அளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் 4 பேர் பயணிக்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது.

    கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.15 ஆயிரம், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்கக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஓட்டுனர் சேர்த்து 7 முதல் 13 பேர் வரை ஏற்றக் கூடிய ரூ.5 லட்சத்துக்கு உள்பட்ட புதிய சுற்றுலா சீருந்துகளுக்கான வாழ்நாள் வரி அதன் விலையில் 12 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 20 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ×