என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

5 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் - கடன்காரர்களிடம் வலுக்கட்டாய வசூலுக்கு 3 ஆண்டு சிறை
- தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது.
- வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும்.
சென்னை:
மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கவர்னரிடம் இருந்த 10 மசோதாக்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதேபோல் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து வருகிறார். அந்த அடிப்படையில் கடந்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அவருக்கு அனுப்பட்டு இருந்த மசோதாக்களில் 5 மசோதாக்களுக்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார்.
அதில் 2 மசோதாக்கள் மிக முக்கியமானது ஆகும். முதலாவது, தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (கடும் வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டம்) 2025. இந்த சட்டத்தின்படி கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது.
மேலும் அவர்களுக்கு இடையூறு, வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகுமிடங்களில் பின்தொடர்தல், அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக்கொள்ளுதல், அவரது வீடு, வசிக்குமிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்குச் செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குற்றமாக கருதப்படும்.
இந்த குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். வெளி ஏஜென்சிகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108-ம் பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும். அதாவது அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த மசோதா, குறிப்பாக ஏழை தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் மீது நடக்கும் இந்த கொடுமைகளை நிறுத்த தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டாவது மசோதா, தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அதில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி இனி உயிரி-மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) முறையற்று குவித்து பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்துவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும். எனவே மருத்துவ கழிவுகளை இனி கண்டபடி கொட்டக்கூடாது. முறைப்படி அகற்ற வேண்டும்.
இதுதவிர தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்ட மசோதா ஆகியவற்றுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.






