ED வழக்கு - துரை தயாநிதியை விடுவிக்க கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர்.துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி கூறினார்.
ED வழக்கு - துரை தயாநிதியை விடுவிக்க கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது.

இதில் தொடர்புடைய ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மதுரை மாவட்ட சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கில் இருந்து மன ரீதியான உடல்நல பிரச்சனை காரணமாக தன்னை விடுவிக்க கோரி துரை தயாநிதி தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலை குறித்து உறுதி செய்ய வேண்டுமென நீதிபதியிடம் முறையிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com