என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நம் வெற்றித் தலைவர் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை.
    • நெடுஞ்சாலையோரங்களில் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது.

    சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க. பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க.வை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காயமடைந்த முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

    இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை.

    நம் வெற்றித் தலைவர் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

    குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது.

    இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான்‌ எடுத்து கொண்டு இருக்கிறார்.
    • பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மூலம் கோப்புகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் இதுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் உயர்கல்வித்துறை செயலாளரும் கவர்னரை சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை வைக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. காத்துக் கொண்டிருக்கிறோம். அழைக்கும் பட்சத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் அவசியம், இதனால் பயனடையும் மாணவர்கள் குறித்து கருத்துக்களை எடுத்துரைப்போம். தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

    கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான் எடுத்து கொண்டு இருக்கிறார். அந்த முயற்சி, தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உயர் கல்வித்துறையை உச்சத்துக்கு கொண்டு செல்வோம்.

    தி.மு.க. தான் திராவிட பற்று-தமிழ் பற்று கொள்கையில் பின் வாங்காமல் உள்ளது. பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.

    17 மாநிலங்களில் ஆளுகிற பா.ஜ.க மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க செய்கிற அநீதியை கண்டிக்கிற ஒரே ஒற்றைத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதை எல்லாம் விரைவில் உடைத்து எரிந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ.உடன் இருந்தார்.

    • பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் எஸ்.ஆர் நகர் வடக்கு பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் தொல்லை அதிகரிப்பதுடன் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று ஏராளமான பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடை அமைந்துள்ள வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நொய்யல் புது சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்டு தங்களுக்கு இந்த கடை வேண்டாம் என மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

    பொதுமக்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் திருப்பூர் எஸ்.ஆர். நகர் பகுதியில் சிலர் கடையை வைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொது மக்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்டு வருகிறார்கள். புதிதாக வரும் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கடந்தாண்டு அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது.
    • இந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேசவமணி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. 2014 ஆம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும், அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இருப்பினும் கடந்த ஆண்டு புதிய தேரோட்டமும், திருவிழாவும் நடைபெற்றது. கடந்தாண்டு அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த அதிக நபர்களை கூட்டிச்சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் பேரின் வளத்தை பிடித்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு-பிரச்சனையும் உருவானது.

    இந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்க படக்கூடாது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே கோவில் தேரோட்ட நிகழ்வில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைத்து தரப்பு சமூக மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி கோவில் நிகழ்வுகளிலும் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. கண்டதேவி கோவிலை பொறுத்தவரை ஒவ்வொரு சமூகத்திற்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சாதிய பாகுபாடு பார்ப்பது கிடையாது அனைவரும் சமமே என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தமிழகத்தில் எங்குமே சாதிய வேறுபாடுகள் இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியுமா? அரசின் நிலைப்பாடு அரசியலுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சொல்லலாம். நீதிமன்றத்தில் இது போன்று சொல்ல முடியாது. தமிழகத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் சாதிய பாகுபாடும் உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் கண்டதேவி கோவில் விவகாரத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

    • புதிய இடத்தில் கட்டப்படும் பள்ளிக்கு ரோட்டில் இருந்து செல்ல பாதை வசதி இல்லாமல் இருந்தது.
    • டாக்டர் வைரவனின் செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி இருந்தது. 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி பல்வேறு சிறப்புகளை கொண்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பள்ளி உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே புதிய இடம் பார்த்து பள்ளி கட்டிடம் கட்ட அரசு இடம் தேர்வு செய்தது. ஆனால் அரசு தேர்வு செய்யப்பட்ட இடமானது மாணவ-மாணவிகள் சென்று வர பாதுகாப்பானதாக இல்லை. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அந்த இடம் நிராகரிக்கப்பட்டது.

    பின்னர் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து இந்த ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால கிருஷ்ணனிடம் சென்று தங்களுக்கு பள்ளி கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற அவர் தனது 2 ஏக்கர் நிலத்தினை பள்ளிக்கு தானமாக வழங்கினார். தற்போது அந்த இடத்தில் புதிய கட்டிட கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை முதல் தரை தள பணிகள் முடிவுற்று உள்ளது.

    இந்நிலையில் புதிய இடத்தில் கட்டப்படும் பள்ளிக்கு ரோட்டில் இருந்து செல்ல பாதை வசதி இல்லாமல் இருந்தது. பள்ளி அருகே சிவகங்கை மாவட்டம் கல்லலை சேர்ந்த டாக்டர் வைரவன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை பாதைக்காக பெற பொதுமக்கள் எண்ணினர்.

    டாக்டர் வைரவன் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். அவரை சந்தித்த ஊர்மக்கள் பள்ளிக்கு பாதைக்காக நிலம் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    அவர் சிறிதும் யோசிக்காமல் கல்விக்காக தனக்குரிய இடத்தை தர சம்மதம் தெரிவித்து உடனடியாக பள்ளி பகுதியில உள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலம் பாதைக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். டாக்டர் வைரவனின் இந்த செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    அரசு பள்ளியின் பாதைக்காக நிலம் தந்த டாக்டர் வைரவனை பள்ளி தலைமையாசிரியர் செல்வி, உதவி தலைமை ஆசிரியர் முத்துபாண்டி, ஆசிரியைகள் அமுதநாயகி, சாந்தினி கலைச்செல்வி, சந்திரா, பிரியா, ஜெயஜீவா, வழக்கறிஞர் துரை பாண்டியன், பள்ளி அலுவலக பணியாளர் அலியார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

    டாக்டர் வைரவன் வழங்கிய 20 சென்ட் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது. டாக்டர் வைரவன் ஏற்கனவே தனது சொந்த ஊரான கல்லலில் உள்ள பள்ளிக்கு ஸ்மாட் வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரும்பாலான கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர்.
    • சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் தி.மு.க. தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரை முருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தி.மு.க.வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் அதிகாரமிக்க பதவியாகும்.

    தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும்.

    கருணாநிதி, தி.மு.க. தலைவராக இருந்த கால கட்டத்தில் அவருக்கு பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன், பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியும் பக்கபலமாக இருந்தனர்.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சிக்கு தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீனியர் அமைச்சர் என்ற முறையில் துரைமுருகனை பொதுச்செயலாளர் ஆக்கினார்.

    கருணாநிதி காலத்து மரபை மீறாமல், பொதுக்குழு, செயற்குழு அறிவிப்புகளும், நிர்வாகிகள் நீக்கம், நியமனம் உள்ளிட்ட தகவல்களும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில்தான் வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக தற்போது இளைஞரணி செயலாளராக உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் அதிக செல்வாக்கு உள்ளது.

    அதனால் பெரும்பாலான கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர். மூத்த நிர்வாகியான அமைச்சர் துரைமுருகன் இப்போது அண்ணா அறிவாலயத்திற்கு தினமும் வருவதில்லை. ஏதாவது முக்கிய ஆலோசனை நடைபெறும் பட்சத்தில் வந்து செல்கிறார்.

    சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இதில் துரை முருகனுக்கு கொஞ்சம் மனவருத்தம் உண்டு என்று கட்சியினர் பரவலாக பேசுகின்றனர்.

    தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் துரைமுருகன் இடம் பெறவில்லை. இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த குழுதான் முக்கிய முடிவுகள் குறித்து பரிந்துரைத்து வருகிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் துரைமுருகன் பெயரளவில் பொதுச் செயலாளராக இருப்பதாகவும் அவருக்கு அந்த அளவுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

    தி.மு.க. விதிப்படி புதிய தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் 2027-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    அந்த தேர்தலில் துரைமுருகன் விடுவிக்கப்பட்டு அந்தப் பதவிக்கு டி.ஆர்.பாலு அல்லது கே.என்.நேரு பொதுச்செயலாளராக வருவார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. இந்த சூழலில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ள நிலையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது போக போகத் தான் தெரியவரும்.

    • தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
    • தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.

    சேலம்:

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,

    அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.

    பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா கூட்டணி கருவே உருவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகளை உடைத்து அங்கிருந்து பல கட்சிகள் எங்களுக்கு வருவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்களும் சொல்கிறார்கள்.

    தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கூட்டணியும் இவ்வளவு நாள் நீடித்தது கிடையாது.

    இந்த கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. 2 பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க. கூட்டணி ஒரு போதும் உடையாது.

    தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.

    முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க. முருகன் மாநாட்டால் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. நெருக்கடி நிர்பந்தத்தின் பேரில் அ.தி.மு.க. வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மடியில் கனம் இருந்ததால் பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை.
    • சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 2014-15 முதல் 2024-25 வரை ரூ.2,533 கோடியும், (ஆண்டுக்கு ரூ.230 கோடி) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

    இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை. இது அவர்களது 1952 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைகளுக்காக, பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும்?

    சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் முக்கியமான மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன். செம்மொழி தகுதி பெற்ற அனைத்து மொழிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்டவர் கவியரசர் கண்ணதாசன்.
    • கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

    கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

    காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலைப் படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
    • சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    மணலி புதுநகரை அடுத்த வெள்ளிவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 64). இவர் விச்சூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி காலை 9 மணியளவில் கம்பெனியின் மெயின் கேட்டை மூடும்போது எதிர்பாராத விதமாக கேட் அடியோடு சரிந்து குமாரசாமி மேல் விழுந்தது.

    இதைப்பார்த்த அருகில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து கேட்டுக்குள் சிக்கிய குமாரசாமியை வெளியே எடுத்தனர். இதில் கால், மார்பு பகுதியில் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த குமாரசாமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.
    • குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை முதல் இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வருவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவி மற்றும் புலி அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2 முறை பயன்படுத்திய பின்னர், 3-வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலை ஏற்பட்டது.
    • புழல் சிறையில் உள்ள பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் எனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை உள்ளது எனக்கூறி ஜாமின் வழங்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார். 'தீங்கிரை' என்ற படத்திற்காக பிரசாத் தனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டி இருந்தது. பணத்தைக் கேட்கும் போதெல்லாம் பிரசாரத் கொக்கைன் வாங்கித் தருவார். 2 முறை பயன்படுத்திய பின்னர், 3-வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலை ஏற்பட்டது. வேறொரு வழக்கில் பிரசாத்தை கைது செய்வதற்கு முன்பு கால் கிலோ கொக்கைன் தந்ததாக ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், 8 முறை போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் பப்-ல் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி என மொத்தம் 5 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் பிரசாத் உள்ளார்.

    புழல் சிறையில் உள்ள பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்பின் இவ்வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டலாம் என கூறப்படுகிறது. 

    ×