என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.
    • சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 26-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மந்திர உச்சாடனங்களும், பக்தி பாடல்களும் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.

    சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியானம் மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் தியானலிங்க வாசல் திறந்தே இருக்கிறது. இதை உணர்த்தும் விதமாக பல்வேறு மதங்களின் சின்னங்களை தாங்கிய 'சர்வதர்ம ஸ்தம்பம்' எனும் தூண் தியானலிங்க வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஆண்டுதோறும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைபெறுகிறது. 

    இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு, ஈஷா பிரம்மச்சாரிகளின் "ஆஉம் நமசிவாய" மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடகம்' எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, கிருத்தவ பக்தி மற்றும் சூஃபி பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் பாடினர். பின்னர் புகழ்பெற்ற 'தேவார பதிகங்களை' மயிலை சத்குரு நாதன் அவர்களும், 'ருத்ர-சமக வேத பாராயணத்தை' சிதம்பரம் கோவில் தீட்சிதர்களும் அர்ப்பணித்தனர். அடுத்ததாக 'செரா மே' என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் 'புத்த மந்திர உச்சாடனம்' மற்றும் 'இஷால் முராத்தின்' இஸ்லாமிய அர்பணிப்பும் நடைபெற்றது.


    அதனைத் தொடர்ந்து குருத்வாரா சிங் சபா சார்பில் 'குருபானி பாடல்கள்', சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்தி பாடல்கள், '

    நிஷாமி குஷ்ரூ சகோதரர்களின் 'சூஃபி பாடல்கள்' மற்றும் 'ஏடாகூடம் இசைக்குழு'வின் சார்பில் 'கிருத்தவ பக்தி பாடல்களும்' பாடப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்ட 'தீட்சை' எனும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சக்தி வாய்ந்த ஆன்மீக செயல்முறைகள், சிறப்பு நாத ஆராதனை, குரு பூஜை மற்றும் இசை அர்ப்பணிப்புகள் நடைபெற்றன. இறுதியாக சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியோடு இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்கு பிறகு சத்குருவால் 1999-ஆம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை.
    • மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு?

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கேள்விக்கு, "நாங்கள் தெளிவாக எங்களின் அறிக்கையில் சொல்லிவிட்டோம். எங்களை விட பொதுமக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.

    தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களையும் இழித்து பேசியதை வேடிக்கை பார்த்ததைத் திமுக மட்டுமில்ல, தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கண்டனத்தை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நீங்களே பார்க்கலாம். ஒரு சொல்லும் சரி, ஒர் ஆயிரம் சொல்லும் சரி உணர்ச்சி உள்ளவர்களுக்கு உறைக்கும்" எனப் பதில் அளித்தார்.

    இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்கிற கேள்விக்கு "மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு? இதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இதை புறக்கணித்துவிட்டார்கள். நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் சேர்த்து விட்டார்கள்" எனப் பதில் அளித்தார்.

    • ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.
    • ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குசாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மூர்த்தி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    'ஒரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.

    வரக்கூடிய ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.

    அடுத்த நாள் அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பேரணியாகச் சென்று இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடக்கி வைக்க இருக்கிறோம்.

    அதை தொடர்ந்து ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குசாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை வாக்குச்சாவடி முகவர்கள், தகவல் தொழில்நுட்ப துறை முகவர்கள், மற்ற அணிகளாக இளைஞர் அணி, மகளிரணி போன்றவற்றின் நிர்வாகிகள், கிளை கழகத்துடைய நிர்வாகிகள் ஒவ்வொரு பூத்-களிலும் இருக்கக்கூடிய வீடுகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 நிமிடம் அமர்ந்து, அங்கே இருக்கும் வாக்காளர் பெருமக்களில் 30% நம்முடைய கழகத்தில் இணையகூடிய வகையில் அரசியல் பணியாற்றச் சொல்லியிருக்கிறோம்.

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அத்தனை வாக்காளர்களையும் சந்தித்து மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய அழைப்பு விடுக்கப்போகிறோம். இதன் இன்னொருகட்டமாக, ஏறத்தாழ 2 கோடி பேரை நமது கழகத்தின் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நமது கழகத்தின் முக்கிய திட்டங்களை விளக்கி, இந்த நான்கு ஆண்டு ஆட்சி சாதனைகளை அவர்கள் இடத்தில் எடுத்து சொல்லி, டிஜிட்டலாக அவர்கள் ஒரு செயலியின் மூலமாகவும், ஒரு படிவம் மூலமாகவும் அவர்களை இணைக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்லும் அளவில் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்கள் நடைபெற இருக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் எந்த ஒரு அரசியல் சூழ்நிலையிலும் மதங்களையோ, சாதிகளையோ அவற்றுக்கெல்லாம் மாறுபட்டு எப்போதும் ஒரணியில் நின்று அரசியல் கருத்துகளை எடுத்துரைப்பார்கள்.

    தமிழ்நாடு எந்த ஒரு சவாலையும் எதிர்க்கொள்கிற போது, அது ஒரணியில் திரண்டு நிற்பதுதான் தமிழ்நாட்டிற்குரிய இயற்கையான பண்புக்கூறு என்பதை மனதில் வைத்து, இந்த 'ஓரணியில் தமிழ்நாடு' என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் அவர்கள் 1 ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    • மத்திய கொள்முதல் முகமைகள் தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்த மாம்பழங்களை கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும்.
    • மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி-யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது.

    மத்திய கொள்முதல் முகமைகள் தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்த மாம்பழங்களை கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி-யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் தரக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வழிகாட்டுதல்கள் வழங்கவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    • மதுரை பசுமலை உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ராகவேந்திரா நகர், தானதத்து ரோடு, விவாபா அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை பசுமலை உபமின் நிலையத்தில் நாளை (25-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பைபாஸ் ரோடு பகுதி, இராம் நகர் 1 முதல் 7 வரை, துரைசாமி நகர் 1 மற்றும் 2- வது குறுக்கு தெரு, வானமாமலை நகர் 1 முதல் 3-வது தெரு வரை, முத்துபாண்டி நகர், அனீஸ் கான்வென்ட் ஏரியா,

    விந்தியாசல் அபார்ட்மென்ட், ஜெய் நகர் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 4-வது தெரு வரை, சுரேந்தர் நகர் 1 முதல் 4-வது தெரு வரை கற்பகநகர், சிவசக்தி நகர், சாய்பாபா கோவில், ராஜம் நகர், மீனாட்சி நகர், கே.கே.கார்டன், திருவள்ளுவர் விரிவாக்கம், ராகவேந்திரா நகர், அசுவதா பள்ளி, தானதத்து ரோடு, விவாபா அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை மதுரை மேற்கு செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    • சமீபத்தில் அமித் ஷா, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.
    • ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.

    தமிழகத்தை பிடிக்கப்போவதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முட்டாள் என திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ. ராசா பேசியதாவது:-

    * சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டு காலம் இருக்கும் எனச் சொல்ல முடியாது.

    * இந்திரா காந்தி மறைந்தபோது ஆட்சி மாறியது.

    * எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்ற போது மாறியது.

    * 2ஜி 1.76 லட்சம் கோடி ஊழல் எனச் சொன்னார்கள். அப்போது ஆட்சி மாறியது.

    * ஜனநாயகத்தில் நாம் செய்த சாதனைகள் மற்றும் தலைவர்கள் ஆளுமையோடு நிற்காது. எதிரிகள் வெவ்வேறு வடிவில் வருவார்கள்.

    * சமீபத்தில் அமித் ஷா, மதுரைக்கு வந்திருந்தார். அப்போது டெல்லியை பிடித்துவிட்டோம். ஹரியானாவை பிடித்துவிட்டோம். மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.

    * முட்டாள்... முட்டாள்... டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன். ஹியானாவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. மகாராஷ்டிராவில் தோற்கடித்தது தனி மனிதனை. ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.

    இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.

    • கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடங்களில் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கப்பட்டு வந்தன.
    • தற்போது 9 பெட்டிகள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    9 பெட்டிகளாக இருந்த புறநகர் மின்சார ரெயில்கள் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது.

    கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    • திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது.
    • இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

    சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.

    அதேவேளையில் நிஷா பானு வழங்கிய தீர்ப்பியில் இருந்து முரண்படுவதாக மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி கூறினார். இதனால் 3ஆவது நீதிபதிக்கு கொண்டு செல்ல தலைமை நீதிபதிக்கு இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளனர்.

    • கொகோ என்கிற தாவரத்தில் இருந்துதான் கொக்கையின் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது.
    • கொக்கைன் போதைப்பொருளை மூன்று விதமாக பயன்படுத்துகிறார்கள்.

    தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை இவர் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது பின்னணியில் இருப்பவர்களை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.

    இந்த இரண்டு போதைப்பொருள்களும் சென்னை மாநகரில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

    சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் மதுவுடன் கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்கள் இரண்டுமே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

    இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட இந்த இரண்டு போதைப்பொருட்களும் சென்னை மாநகரத்தில் எப்படி ஊடுருவி வருகின்றன?

    அவற்றின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கொகோ என்கிற தாவரத்தில் இருந்துதான் கொக்கையின் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. கொக்கைன் இலைகளை பறித்து நன்றாக காய வைத்து பின்னர் அதனை பொடியாக்கி கொக்கைன் போதைப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.

    அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் பழங்குடி மக்கள் இதனை அதிக அளவில் தொடக்க காலத்தில் மயக்க மருந்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இது நாளடை வில் போதைப்பொருட்களாக பயன்படுத்த தொடங்கியதும் பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.

    இருப்பினும் தடையை மீறி கொக்கையின் போதைப்பொருள் சர்வதேச அளவில் மிகப்பெரிய கடத்தல் சந்தையாகவே மாறி இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

    அந்த வகையில் நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு சுற்றுலா விசாக்களில் வரும் வாலி ர்கள் கொகைன் போதைப்பொருளை கடத்தி வந்து இங்குள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூலமாக படித்த இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இந்த கொக்கைன் போதைப்பொருளை மூன்று விதமாக பயன்படுத்துகிறார்கள். பவுடராக மூக்கு வழியாக நுகர்ந்தும், பல் ஈறுகளுக்கு இடையில் வைத்தும் போதை ஏற்றுகிறார்கள்.

    அதே நேரத்தில் கொகைனை ஒரு சில்வர் பேப்பரில் வைத்து அதன் கீழே லைட்டரில் தீயை காட்டி அதன் மூலமாக வெளியேறும் புகையை நுகர்ந்தும் கொக்கைன் போதையை அனுபவிக்கிறார்கள். பவுடர் வடிவிலான கொகைன் வெள்ளைப் பொடி போன்ற தோற்றத்தில் இருக்கும். இதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவார்கள்.

    அடுத்ததாக புகைக்கக்கூடிய வகையில் சற்று திடப்பொருளாக கொக்கையினை மாற்றியும் பயன்படுத்துகிறார்கள் பேக்கிங் சோடா அல்லது அம்மோனியாவுடன் கலந்து இதனை உருவாக்குகிறார்கள். இதனை சூடுபடுத்தி புகையாக உறிஞ்சுவதன் ரத்தத்தில் கொகைன் விரைவாக கலந்து அதிக போதையை ஏற்படுத்துகிறது.

    இதேபோன்று சில ரசாயனங்களை கொண்டு வீடுகளிலேயே தயாரிக்கப்படும் மெத்த பெட்டமைன் போதைப்பொருளும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த இரண்டு போதைப்பொருட்களையும் தான் நடிகர் ஸ்ரீகாந்த் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.

    இவரைப் போன்று பிரபலங்கள் பலரும் கொக்கைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.

    இன்றைய இளைஞர்கள் மத்தியில் தவறான பழக்க வழக்கங்கள் அதிகமாகவே இருந்து வருகிறது.

    அந்த வகையில் வார இறுதி நாட்களில் அவர்கள் பாலியல் அழகிகளை தேடிச் சென்று இன்பம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த விஷயத்தில் மிகவும் வீக்கான சினிமா பிரபலங்கள் பலரும் கொக்கையின் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை நீண்ட நேர பாலியல் இன்பத்துக்காகவும் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளன.

    ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பல திரைபிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கும்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் பின்னணியில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காபட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    காந்திகிராமம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காந்திகிராம பல்கலைக்கழகம், செட்டியபட்டி, கல்லுப்பட்டி, பூத்தாம்பட்டி, சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, அமலிநகர், முருகன்பட்டி, இந்திராபுரம், பெருமாள் கோவில்பட்டி வேளாங்கன்னிபுரம், சின்னாளப்பட்டி, கிழக்கோட்டை, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் கையில் குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறி உள்ளனர்.
    • இலவச பஸ் என்பதால் தங்களை பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்து கண்டக்டர் அவமதிப்பதாக கூறி பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி பகுதியில் இருந்து மெயின் அருவிக்கு பயணம் செய்வதற்காக மதுரையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் கையில் குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறி உள்ளனர்.

    அப்போது பஸ் கண்டக்டர் அந்த பெண்களை கீழே இறங்குமாறு கூறியதோடு, அலட்சியமாக அடுத்த பஸ்சில் வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இலவச பஸ் என்பதால் தங்களை பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்து கண்டக்டர் அவமதிப்பதாக கூறி பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சுற்றியுள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒன்று கூடி பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சவுகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட 54 படங்களில் நடித்துள்ளாா்.
    • நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் 43 தடவை கொகைன் போதைப் பொருள் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஒருவரது மகனுக்கும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவருமான பிரசாத் என்பவருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது.

    அப்போது பிரசாத்துடன் வந்த சில தொழில் அதிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். மது பாரையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். டி.எஸ்.பி. மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாரில் ரகளையில் ஈடுபட்டதாக பிரசாத், அஜய் ரோகன், தூண்டில் ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கும், கொகைன் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனால் உஷாரான நுங்கம்பாக்கம் போலீசார் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரகசியமாக விசாரணை நடத்திய போது வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் கொகைன் போதைப்பொருளை ஒரு கும்பல் சப்ளை செய்து இருப்பதும் அதில் பல முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இதன் மூலம் பிரசாத் ஏற்கனவே சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அவரை போலீசாா் தங்களது காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனா். விசாரணையில் பிரசாத்துக்கு கொகைன் போதைப்பொருள் பழக்கம் இருப்பதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மதுபான விடுதியில் அவருக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப் குமாா் என்ற பிரடோ என்பவா் கொகைன் போதைப் பொருளை விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், நுங்கம்பாக்கம் போலீசாரும் பிரதீப்குமாா் குறித்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், பிரதீப்குமாரையும், சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜானையும் கடந்த 19-ந்தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா்.

    இருவரிடமும் கொகைன் விற்பனை குறித்து போலீசாா் விசாரணை செய்தனா். அப்போது பெங்களூரில் வசிக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த நைஜீரியாவின் ஜூரிக், சென்னையில் உள்ள போதைப் பொருள் விற்கும் கும்பலுக்கு கொகைனை விற்று உள்ளாா்.

    இந்தக் கும்பலிடம் இருந்து பிரதீப்குமார் கொகைனை கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாங்கி வந்து சென்னையில் விற்று வந்துள்ளாா். ஒரு கிராம் கொகைனை அவர் ரூ.7 ஆயிரம் கொடுத்து வாங்கினார். அதை சென்னையில் ரூ.13 ஆயிரத்துக்கு விற்றுள்ளாா்.

    அவர் மூலம் பல தடவை பிரசாத் கொகைன் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி உள்ளார். பிரசாத் "தீங்கிரை" என்ற சினிமா படத்தை தயாரித்தார். அந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ஸ்ரீகாந்துக்கும், பிரசாத்துக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.

    அந்த நட்பு காரணமாக பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் பழக்கம் நடிகர் ஸ்ரீகாந்துக்கு பரவியது. இருவரும் வாட்ஸ்அப் மூலம் கொகைன் பயன்படுத்துவதை பற்றி பல தடவை பேசியுள்ளனர். நாளுக்கு நாள் கொகைன் பயன்படுத்துவதை நடிகர் ஸ்ரீகாந்த் அதிகரித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் கொகைகனுக்கு அடிமையாகி விட்டதாகவே கூறப்படுகிறது.

    இதனால் பிரசாத்திடம் இருந்து மட்டுமின்றி நேரடியாக பிரதீப்குமாரிடமும் நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் வாங்க தொடங்கி உள்ளார். கொகைன் வாங்குவதற்கு ஜிபே மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார். ஒரு கிராம் கொகைனை ரூ.13 ஆயிரத்துக்கு நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியது தெரிய வந்துள்ளது.

    அந்த வகையில் மட்டும் அவர் ரூ.5 லட்சம் செலவு செய்து இருக்கிறார். அப்படி வாங்கிய கொகைனை திரை உலக பிரபலங்கள் பலருக்கும் ஸ்ரீகாந்த் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே போலீசார் பிரதீப்குமாரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது நடிகர் ஸ்ரீகாந்த் கணக்கில் இருந்து அவருக்கு ஆயிரக்கணக்கில் பணம் வந்திருப்பதை கண்டனர். இது தொடர்பாக விசாரித்தபோது நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் 43 தடவை கொகைன் போதைப் பொருள் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி பிரதீப்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் போதைப் பொருள் கொடுத்ததை ஒத்துக்கொண்டார். இந்த தகவலின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் ஸ்ரீகாந்துக்கு போலீசாா் அழைப்பாணை வழங்கினா். அதன்படி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானாா். அவரிடம் விசாரித்தபோது, தான் கொகைனை வாங்கவில்லை என்று முதலில் மறுத்தாா். நேற்று காலை நீண்ட நேரம் போலீசார் அவரிடம் இந்த விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

    இதையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், கொகைன் மற்றும் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

    பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தனக்கு இருக்கும் தொடா்புகளை ஸ்ரீகாந்த் தெரிவித்தாா். இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனா்.

    இதன் ஒரு பகுதியாக ஸ்ரீகாந்த் வீட்டிலும் போலீசாா் சோதனையிட்டனா். இந்தச் சோதனையில் அவரது வீட்டில் இருந்து 7 கொகைன் கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் மீது போலீசார் போதைப் பொருள் தடுப்பு சட்டம் 1985-ன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    ஒன்று:- 8சி (போதைப் பொருள் பயன்படுத்துவது மற்றும் கடத்தி விற்பது)

    இரண்டு:- 22 (போதைப் பொருள் பதுக்கி வைப்பது)

    மூன்று:- 29(1) (போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து சதி செய்தது)

    நான்கு:- 27 (போதைப் பொருளை கூட்டாக கடத்துவது)

    இந்த 4 பிரிவுகளின் கீழ் தொடரப்படும் வழக்குகளை தீவிரமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் எந்த அளவுக்கு போதைப்பொருள் கடத்தினார்களோ அல்லது பயன்படுத்தினார்களோ அதற்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுவதாக தெரிகிறது.

    சமீபத்தில் 2 கிலோ போதைப் பொருள் வைத்திருந்த நபருக்கு சென்னை கோர்ட்டு 10 ஆண்டு கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஒன்று முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக அவரிடம் மீண்டும் விசாரணை நடத் தப்பட்டது. அதன் பிறகு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது உடல்நலம் பற்றி போலீசார் ஆய்வு செய்து அறிக்கை பெற்றனர். இதைத் தொடர்ந்து 10 மணி நேர விசாரணைக்கு பிறகு ஸ்ரீகாந்த் எழும்பூர் 14-வது நீதித்துறை நடுவர் மன் றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

    அவரை ஜூலை 7-ந்தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டார். அப்போது ஸ்ரீகாந்த் தரப்பு வக்கீல் நீதிபதியிடம், "ஸ்ரீகாந்த் முறையாக வருமான வரி செலுத்தி வருவதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதி முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நடிகர் ஸ்ரீகாந்திடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மனு தயார் செய்யப்பட்டு வருகிறது.

    நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் அவரிடம் 3 கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    1. ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை திரையுலக பிரமுகர்களுக்கு விற்பனை செய்தாரா?

    2. திரையுலக விருந்துகளில் பங்கேற்ற நடிகர்-நடிகைகளுக்கு கொகைன் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நடிகர்-நடிகைகள் யார்?

    3. கொகைன் போதைப் பொருள் மூலம் ஸ்ரீகாந்த் மிகப்பெரிய நெட்வொர்க்குக்கு உதவி செய்தாரா? ஆகிய 3 கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    மேலும் ஸ்ரீகாந்துக்கு நெருக்கமான நடிகர் கிருஷ்ணா உள்பட மற்ற நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் ஸ்ரீகாந்த்துடன் தொடர்பில் இருந்த நடிகர்-நடிகைகள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது குடும்ப சூழ்நிலையை குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை அவரது தேவைக்கு மட்டும் வாங்கினாரா அல்லது வேறு யாருக்கும் வாங்கிக் கொடுத்தாரா என போலீசாா் விசாரித்துள்ளனர்.

    நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சவுகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட 54 படங்களில் நடித்துள்ளாா். மிகவும் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்த் திரைப்படத்துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப் பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத்துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

    ×