என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுக-வுக்கு சேர்க்க வேண்டிய வாக்குகளை ஒரே மாநாட்டில் சேர்த்து விட்டார்கள்: ஆர்.எஸ். பாரதி
- பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை.
- மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு?
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கேள்விக்கு, "நாங்கள் தெளிவாக எங்களின் அறிக்கையில் சொல்லிவிட்டோம். எங்களை விட பொதுமக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களையும் இழித்து பேசியதை வேடிக்கை பார்த்ததைத் திமுக மட்டுமில்ல, தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கண்டனத்தை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நீங்களே பார்க்கலாம். ஒரு சொல்லும் சரி, ஒர் ஆயிரம் சொல்லும் சரி உணர்ச்சி உள்ளவர்களுக்கு உறைக்கும்" எனப் பதில் அளித்தார்.
இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்கிற கேள்விக்கு "மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு? இதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இதை புறக்கணித்துவிட்டார்கள். நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் சேர்த்து விட்டார்கள்" எனப் பதில் அளித்தார்.






