என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RS Bharati"

    • பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை.
    • மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு?

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கேள்விக்கு, "நாங்கள் தெளிவாக எங்களின் அறிக்கையில் சொல்லிவிட்டோம். எங்களை விட பொதுமக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.

    தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களையும் இழித்து பேசியதை வேடிக்கை பார்த்ததைத் திமுக மட்டுமில்ல, தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கண்டனத்தை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நீங்களே பார்க்கலாம். ஒரு சொல்லும் சரி, ஒர் ஆயிரம் சொல்லும் சரி உணர்ச்சி உள்ளவர்களுக்கு உறைக்கும்" எனப் பதில் அளித்தார்.

    இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்கிற கேள்விக்கு "மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு? இதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இதை புறக்கணித்துவிட்டார்கள். நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் சேர்த்து விட்டார்கள்" எனப் பதில் அளித்தார்.

    • தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிவிட்டு, மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.
    • தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.

    தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பாஜகவின் அஜண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் 'ஒரே ஆள் ஒரே பேச்சு' என ரீதியில் பேசி வருகிறார்.

    ''தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் கோவைக்கு வந்த போது இதே டயலாக்கைதான் பேசினார். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுந்தோல் போர்த்திய புலி.

    ''ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரும்'' எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலைத் தமிழர்கள் எப்படி மறப்பார்கள்?

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை பாஜகவினர் எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள்? ''தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?'' என 2024 மே மாதம் அமித்ஷா சீறினார். இப்போது தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார்.

    ''ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் இருக்க வேண்டிய புதையல் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது'' எனச் சொல்லி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.

    அது மட்டுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை போல ஒருவரைச் சித்தரித்து, தமிழர் வேட்டி சட்டை அணிவித்து, வாழை இலையில் பழைய சோறு வைப்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வீடியோ வெளியிட்டு தமிழர்களைக் கேவலப்படுத்தியது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் ஒடிசாவிலேயே இருக்கிறது.

    ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது போலத் தமிழ்நாட்டைப் பிடிப்பார்களாம். ஒடிசாவின் லட்சணம்தான் இந்தியாவுக்கே தெரியுமே!

    ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்று 2024 ஜூன் 12-ம் தேதி ஆட்சியைப் பிடித்தது. 2024 டிசம்பர் வரையிலான ஐந்தே மாதத்தில் மட்டும் ஒடிசாவில் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    41 கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்பட 509 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக 9 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

    கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 509 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. அந்த ஒடிசாவின் ஆட்சியைத்தான் தமிழ்நாட்டுக்குத் தரப் போகிறார்களா?

    பாஜக ஆட்சி எப்படி இருக்கும்? என்பதை மணிப்பூரில் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! மணிப்பூர் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன.

    400-க்கும் மேற்பட்ட மத வழிப்பாட்டு தளங்கள் அழிக்கப்பட்டன. 70,000 பேர் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தனர். இணையச் சேவைகள், முடக்கம், ஊரடங்கு உத்தரவு , பாலியல் கொடுமைகள், கண்டதும் சுட உத்தரவு என மணிப்பூர் முடங்கிப் போனது. மணிப்பூர் பெண்களின் கற்புக்கே சவால் விட்டார்கள். கலவரத்தை பாஜக அரசு வேடிக்கை பார்த்தது.

    ஆனால், பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் மணிப்பூர் அரசைப் பதவி நீக்கம் செய்யாமல், ''முதல்வர் பிரேன் சிங் அமைதியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார்'' என சர்டிபிகேட்தான் கொடுத்தார்கள். மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்த பிறகும் கூட வன்முறை வெறியாட்டம் நிற்கவில்லை.

    இன்றைக்கும் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதளச் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத பாஜக, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் மூலம் எங்களுடைய முதலமைச்சர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று விட்டார். பத்து ஆண்டுகளாகச் சீரழிந்து கிடந்த தமிழ்நாட்டை வளமானதாக்கி தலை நிமிர வைத்துள்ளார். நான்காண்டுகள் அடிமை ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிச்சாமியால் இப்படி ஓர் ஆட்சியைக் கற்பனையிலும் தர இயலாது.

    அதிமுக என்னும் கட்சியை மிரட்டியே விழுங்கிக் கொண்டிருக்கும் அமித்ஷா, கூட்டணி அமைத்த அன்றே தனக்கு அடிமைதான் எடப்பாடி பழனிச்சாமி என்பதை உலகத்துக்கே காட்டினார். இன்று திமுக ஆட்சி மீது அவதூறு பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார்.

    அமித்ஷாவுக்கு 2021 சட்டமன்றத் தேர்தல் மறந்து விட்டது போலும். பாஜகவின் அண்ணாமலையே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பயன்படுத்தித்தான் பிரசாரம் செய்தார். மோடியின் பெயரைக் கூட போடாமல் விளம்பரம் செய்த பாஜகவினர் கதைகள் நிறைய இருக்கிறது. பாஜக தலைவர்கள் தயவு செய்து பிரசாரத்துக்கு வந்துவிட வேண்டாம் என்று அதிமுகவின் வேட்பாளர்கள் கெஞ்சும் அளவுக்கு பாஜக மீதான வெறுப்பு தமிழ்நாட்டில் நிலவியது.

    அந்த வெறுப்பு அடங்கவில்லை என்பதைத்தான் அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் காட்டியது. தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக மீது அது இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

    தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதும் தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையை மறுப்பதும் தங்களுக்கு வாக்களிக்காத தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்குவதற்காக பாஜக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பாஜக மீது தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2026 சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும் அவருக்கும் துணை போகிறவர்களுக்கும் சரியான தீர்ப்பைத் தமிழர்கள் எழுதுவார்கள்.

    இதெல்லாம் உளவுத் துறை மூலம் அமித்ஷாவுக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும். தேர்தலில் வெல்வது அல்ல அவர்களின் நோக்கம். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைக் கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு. அதற்காக 2026 சட்டமன்றத் தேர்தலைப் பயன்படுத்துகிறார்கள்.

    அமித்ஷா தொடங்கியுள்ள இந்தப் பிரசாரம் எங்களுக்கு மிகவும் வசதியானதுதான். ஏற்கெனவே சொன்னது போல ஆளுநர்தான் எங்களை வெற்றி பெற வைக்க போகிறார் என்று நினைத்தோம். ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட்டு விட்டதால் அந்தப் பணியைத் தற்போது அமித்ஷா கையில் எடுத்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றிகள்.

    '2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றிபெறும்" என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து இப்படிப் பேசுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதையே பேசினார்.

    2019, 2024 மக்களவைத் தேர்தல்களின் போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று பேசினார். அவர் பேசியது எதுவுமே கடந்த காலங்களில் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான நாளில் இருந்தே தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

    தொண்டர்களின் நம்பிக்கையையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படிப் பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை "ஷா" கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது.

    2018-ம் ஆண்டு தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தித் தொடங்கிய திமுக தலைமையிலான கூட்டணி 13 தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திமுக கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எத்தனையோ 'ஸ்கோப்' இருக்க, 'பயோஸ்கோப்' காட்டிக் கொண்டிருக்கிறார் 'சூனாபானா' இ.பி.எஸ் என்றார் ஆர்.எஸ்.பாரதி.
    • எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள் என்றார் ஆர்.எஸ்.பாரதி.

    எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ 'ஸ்கோப்' இருக்க, 'பயோஸ்கோப்' காட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ 'ஸ்கோப்' இருக்க, 'பயோஸ்கோப்' காட்டிக் கொண்டிருக்கிறார் 'சூனாபானா' எடப்பாடி பழனிசாமி. நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள். அதனைத் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து அதிகம் ஸ்கோர் செய்வது யார்? என எதிர்க்கட்சிகளுடன் போட்டா போட்டி நடக்கிறது. ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரியான அறிக்கையைக் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்குத்தான் தமிழ்நாட்டின் எத்தனை கிளைக் கழகங்கள்?

    எதற்கும் வருத்தப்படாத இந்த வாலிபர்களை(?) பார்க்கும்போது, ''ஏய் அங்குட்டு போய் விளையாடுங்கப்பா'' என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் பழனிசாமியின் காமெடி கதறல்கள் காதுகளைக் குளிர வைக்கின்றன.

    ''நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர்'' எனப் பொதுக்குழு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தெருமுனை என பழனிசாமி புலம்பியதை எல்லாம் கணக்கிட கால்குலேட்டரே திணறும்! நிரந்தர பொதுச் செயலாளர் என எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் போடப்பட்ட நிரந்தர நாற்காலியை நகட்டிக் கொண்டு போனவர் யார்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமர்ந்த பொதுச் செயலாளர் இருக்கையை அபகரித்த அபகரிப்பாளர் அல்லவா பழனிசாமி.

    மார்ச் 25-ம் தேதி சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்காமல் கூட டெல்லிக்கு அவசரமாகச் செல்லும் அளவுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன வேலை இருந்தது? டெல்லியில் எதற்காக டீல் போட்டார்?

    "இபிஎஸ் யாரைச் சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. அப்படிச் சந்திக்கும் நேரத்தில் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்'' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். பழனிசாமி செய்தாரா? இல்லையே!

    "பிரத்தியேகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தைப் பார்வையிடவே வந்துள்ளேன்" எனப் பொய் முலாம் பூசியவர்தானே பழனிசாமி.

    டெல்லியில் உள்ள அண்ணா திமுக அலுவலகத்துக்கு ஒழுங்காக வெள்ளை அடித்திருக்கிறார்களா? எனப் பார்க்கப் போனவர், ஏன் மூன்று கார்களில் மாறி மாறிப் போனார்? 'சாமி' திரைப்படத்திற்கும் 'பழனிசாமி' கேரக்டருக்கும் சம்பந்தம் உண்டு என்றால் இந்தச் சமூகம் நம்ப வேண்டும்.

    சாமி படத்தின் வில்லன் பெருமாள் பிச்சை கதாநாயகனிடம் இருந்து தப்பிக்க கிளைமேக்ஸில் கார்கள் மாறி மாறிப் போவார். அந்த பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் பழனிசாமி.

    அன்றைக்கு டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிசாமி சந்திப்பு நடப்பதற்கு முன்பே, "2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும்' என மத்திய மந்திரி அமித் ஷா ட்வீட் போட்டாரே! பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே கூட்டணிக்கான அதிகாரத்தை அமித்ஷாவிடம் தாரை வார்த்ததை எடப்பாடியார் மறந்துவிட்டாரா?

    அமித்ஷா சந்திப்பு பற்றி அடுத்த நாள் 26/3/25 அன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றிப் பேச எந்த அவசியமும் இல்லை" என சூனாபானாவாக முழங்கிவிட்டு, 11/4/25-ம் தேதி அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. அப்போது அமித்ஷா பக்கத்தில் அமர்ந்திருந்த சூராதி சூரர் யார்? இதுதான் பழனிசாமி சொன்ன ஓராண்டுக் காலமா? பச்சைப் பொய் பழனிசாமி என்பதை மணிக்கொரு தடவை நிரூபித்துக் கொண்டே இருந்தார்!

    முதலில் 'அதிமுக அலுவலகம் பார்க்கப் போனேன்'. பிறகு 'மக்கள் பிரச்னைகளுக்காக அமித்ஷாவை சந்தித்தேன்' என கலர் கலராக கம்பி மத்தாப்புகளை நீங்கள் கொளுத்திய போது அன்றைக்கு அதிமுக வட்டாரம் அறிவிக்கப்படாத தீபாவளியாக மாறியது. இப்படி உங்களின் ரீல்கள் அந்து போனதை மறைக்க, பொய்க் குப்பைகளை அள்ளி வீசி, தமிழ்நாட்டை அசுத்தம் செய்ய வேண்டாம்.

    முதல்-அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு மற்றும் நியாயமான நிதி ஒதுக்கீடு பற்றி நேரடியாக வலியுறுத்தி இந்திய மக்கள் முன் எடுத்து வைக்க நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    ஆனால், அதைத் திரித்து தனது அவதூறு அரசியல் குப்பைகளை அள்ளி வீசி தமிழ்நாடு அரசு மீதும் முதல்-அமைச்சர் மீதும் களங்கம் கற்பித்துவிடலாம் என பழனிசாமி போட்ட கணக்கெல்லாம் தப்புக்கணக்கு ஆனதால், குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலச் சமாளிக்க நீங்கள் போடும் வேடங்கள் உங்களை இன்னும் தோலுரிக்கின்றன.

    'பில்ட்டிங் ஸ்டராங்க் பேஸ் மட்டம் வீக்' என்பது போல எழுத்தில் சூரப்புலி என எழுதி விட்டு, செயலில் எலி போல நடந்து கொள்ளும் பழனிசாமியை கண்டு மக்கள் சிரிக்கின்றனர்.

    தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறி கொடுத்து அடிமை சேவகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் பழனிசாமிக்கு அடிப்படை அறிவுகூட இல்லை.

    தனது ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காகத்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்ற உண்மையை மறைத்துவிட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புரளிகளை அள்ளிவிட்டு குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

    உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையின் அராஜகத்திற்குக் குட்டு வைத்து இடைக்காலத் தடை விதித்ததும் தனது டெல்லி ஓனர்களோடு சேர்ந்து, தான் ஓட்டிய பித்தலாட்டப் புரளி படம் 'பிலாப்' ஆன விரக்தியில் இப்போது வாய்க்கு வந்ததை உளறித் திரிகிறார். தனது ஆட்சிக்காலத்தில் பதியப்பட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளுக்காகத்தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது என்கிற வெட்கமே இல்லாமல் திமுக வை குற்றம் சாட்ட நா கூசவில்லையா?

    தனது உறவினர்களுடைய வீட்டில் நடந்த ரெய்டுகளுக்கு பயந்துதான் பாஜகவின் பண்ணையடிமையாக பழனிசாமி மாறினார். அதற்காகத்தான் அதிமுகவை பாஜக கூட்டணியில் அடமானம் வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் அறியாத பிள்ளைகளுக்கு இந்த உண்மைத் தெரியும், 23-ம் புலிகேசியாக வாழும் பழனிசாமி, 'ரெய்டைப் பார்த்து எனக்குப் பயமா?" என வீர வசனம் பேசுவதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாகும்.

    தனது உறவினரின் ஊழலுக்குச் சப்பைக் கட்டுக் கட்டியிருக்கிறார் பழனிசாமி, 650 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் எனும் ஊழல் குற்றச்சாட்டை "Discrepancies" என்கிறாரே பழனிசாமி ஊழலை "Discrepancies" என மாற்றுவதற்குத்தான் டெல்லியில் பதுங்கிப் பதுங்கி அமித்ஷாவை சந்திக்கச் சென்றாரா? பூனைக்குட்டி வெளிய வந்துவிட்டது என்பது போல அதிமுக வை அடகு வைத்ததற்கான டெல்லி டீலிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி.

    'நான் தான் சொன்னேனே... மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல - உங்கள் ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையிலிருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்று!' என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. அதாவது மோடி அரசுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார்.

    மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸின் சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸின் ஹிமந்த பிஸ்வா, மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, சிவசேனாவைச் சேர்ந்த பாவனா கவாலி, சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் போன்றவர்கள் மீதான அமலாக்கத் துறை வழக்குகளை எல்லாம் பாஜக வாசிங் மிஷின் எப்படி சுத்தப்படுத்தியது.

    அந்த வாசிங் மிஷினில் விழுந்தவர்தானே பழனிசாமி அன் கோ. அதன் மூலம் தன் உறவினர்கள் மீதான வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்ய அதிமுக என்ற ஆலமரத்தையே கோடாரியாகப் பயன்படுத்தினார்.

    'பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தோற்றோம்' என்று நிர்வாகிகள் அலறித் துடித்த போதும் கூட அவர்களது கருத்துக்களை மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தன் உறவினர்களை காப்பாற்றத்தானே!

    எடப்பாடியாரின் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் 'ஒய்யால என்ன மாதிரி கூவுறான்' என்பது போல பழனிசாமியின் கண்ணீர் நன்றாகப் புரிகிறது. தன்னுடைய மகன் மிதுனும் தன் உறவினர்களும் தப்பிக்கக் கட்சியைப் பலிபீடத்திற்குக் கொண்டு வந்த புண்ணியவான் தான் பழனிசாமி. அதிமுகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின். உங்களைப் போலக் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்குப் போனவர் அல்ல எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு.
    • எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சரவையை பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது.

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன எனச் சொல்லியிருக்கிறார்.

    தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு.

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த, கூட்டணிக்கு சம்மதித்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.

    தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன என ஜோசியம் சொல்கிறார்.

    தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் எடப்பாடி பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் 'தோல்வி'சாமி அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

    செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?.

    தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்-அமைச்சர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் திமுக அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது' என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த 11 எம்.எல்.ஏ.க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்-அமைச்சர் அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.

    எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் எம்.எல்.ஏ பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்த எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சரவையை பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
    • தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    சென்னை:

    மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.

    இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுயமரியாதை இருந்தால் அவர் இன்று இரவே ராஜ்பவனை விட்டு புறப்பட்டு போகவேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்.
    • கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது.

    சென்னை ஆர்.எஸ் புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை . உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர். எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது, அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
    • கலைத்துறை வாரிசுபோல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு?

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாட்டில் ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்துக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறியுள்ளார். கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல் வெற்றியை மட்டுமே தேடித் தந்துள்ளார் என்றும், அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    • பா.ஜ.க. மீதும் என் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை கூறிய ஆர்.எஸ்.பாரதி தான் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்தார்.
    • ஒவ்வொரு ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் சில சமயம் தள்ளுபடி ஆகி விடுகிறது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு பாரதிய ஜனதா-தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

    தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை முன் வைத்த நிலையில் அவரது கைக் கடிகாரம் விவகாரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி கிளறிவிட்டார். இந்த கைக் கடிகாரம் வாங்கியதற்கான ரசீதை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு அண்ணாமலை பதில் அளிக்கையில், கைக் கடிகாரம் வாங்கியதற்கான ரசீது இருப்பதாகவும், அதை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடுவேன் என்றும் அப்போது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

    அதன்படி கடந்த 14-ந்தேதி தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் தி.மு.க. எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டா லின் மற்றும் சபரீசன் உள்பட 12 பேர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

    இந்த பட்டியல் மூலம் தி.மு.க.வுக்கு அவதூறு ஏற்படுத்துவதாகவும் 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அன்றைய தினமே பேட்டி அளித்திருந்தார்.

    ஆனால் இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கோடிகளில் சொத்து குவித்து வைத்திருக்கும் தி.மு.க.வினர் இருக்கும் போது ஆர்.எஸ்.பாரதி என்னிடம் மேலும் ரூ.500 கோடி கேட்பதா?

    பா.ஜ.க. மீதும் என் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை கூறிய ஆர்.எஸ்.பாரதி தான் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்தார். இதற்காக விரைவில் நோட்டீசு அனுப்பப்படும் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் தி.மு.க. சார்பில் வில்சன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் தனித்தனியாக அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி இருந்த னர். ஆனால் இன்னும் யாரும் வழக்கு தொடரவில்லை.

    இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அண்ணாமலை மீது எப்போது வழக்கு தொடரப்படும்? என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து தனிப்பட்ட முறையில் தி.மு.க. பிரமுகர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

    ஆனால் அண்ணாமலையிடம் இருந்து எங்களுக்கு இன்னும் வக்கீல் நோட்டீசு வந்து சேரவில்லை. வக்கீல் நோட்டீசு முழுமையாக வரும்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    அவதூறு வழக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் சில சமயம் தள்ளுபடி ஆகி விடுகிறது.

    எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணாமலையின் வக்கீல் நோட்டீசுக்காக காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உங்கள் மீது கிரிமினல் வழக்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
    • வீடியோ காட்சியை அனைத்து சமூக வலைதளங்களிலும் இருந்து நீக்க வேண்டும்.

    சென்னை :

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை சார்பில் அவரது வக்கீல் ஆர்.சி.பால் கனகராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. மாநில தலைவராக இளம்வயதில் பொறுப்பு ஏற்றவர் அண்ணாமலை. கடந்த 14-ந் தேதி பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் அளித்த பேட்டியில், 'ஆருத்ரா கோல்டு' மோசடியில் பல கோடி ரூபாயை அண்ணாமலை பெற்றுள்ளதாக முதலில் குற்றம் சாட்டினீர்கள்.

    பின்னர், அண்ணாமலையும், அவரது கூட்டாளிகளும் ரூ.84 கோடியை பெற்றுள்ளனர் என்றும், எதற்காக பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தினார்கள் என்றும் கூறியுள்ளீர்கள். ஆனால், கூட்டாளி யார்? யார் மூலம் எவ்வளவு தொகை பெற்றார்? என்ற விவரங்களை கூறவில்லை

    தி.மு.க.வினரின் ஊழல் குறித்த விவரங்களை என் கட்சிக்காரர் அண்ணாமலை வெளியிட்டதால், காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான, சித்தரிக்கப்பட்ட குற்றச்சாட்டை சுமத்தியுள்ளீர்கள்.

    நீங்கள் கூறும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அண்ணாமலை மறுக்கிறார். ஆருத்ரா கோல்டு நிறுவனத்திடம் இருந்து பெருந்தொகை பெற்றுள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டை கூறுவதாகவும் நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.

    எனவே, நீங்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, சித்தரிக்கப்பட்டவை, அண்ணாமலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவை என்பது நிரூபணமாகிறது.

    இதனால் உங்கள் மீது கிரிமினல் வழக்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். எனவே, கடந்த 14-ந் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அந்த வீடியோ காட்சியை அனைத்து சமூக வலைதளங்களிலும் இருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மேற்கொண்டு பரப்பக்கூடாது.

    இதை செய்யத் தவறினால், நீங்கள் என் கட்சிக்காரருக்கு 500 கோடியே 1 ரூபாயை மான நஷ்டஈடாக தரவேண்டும். அவ்வாறு தரும்பட்சத்தில், அந்த தொகையை பிரதமர் நலநிதிக்கு என் கட்சிக்காரர் வழங்குவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதன் முதலில் காமராஜருக்கு அவர் உயிரோடு இருக்கும் போதே சிலை வைத்து அதை நேருவை வைத்து திறக்க வைத்தார் கலைஞர்.
    • 2024-ம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற ஒற்றுமையாக இருந்து வெற்றியைத் தேடித் தாருங்கள் என்று ஆர்.எஸ். பாரதி பேசினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செந்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சதீஷ்குமார், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக வக்கீல் சூர்யா வெற்றி கொண்டான், வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    கலைஞர் தமிழ்நாட்டில் 13 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளார். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அருந்ததியின சமுதாய மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து அந்த சமுதாய மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க செய்தவர். இதேபோல் மீனவ மக்களை மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து அந்த மாணவர்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பில் சிறக்க வைத்தார் . மீனவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து மண்எண்ணையை வாங்கி மானிய விலையில் ரூ.25-க்கு வழங்கினார். 3.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து சிறுபான்மையினரை காப்பாற்றியவர் கலைஞர். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி தொடங்கினார்.

    உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு செய்தார். ஜனாதிபதி, பிரதமர்களை உருவாக்க காரணமாக இருந்தார். அவர் வழியில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுக்கு ரு. 10ஆயிரம், புதுமை பெண்கள் திட்ட மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம், முதியோர் பென்ஷனை ரூ.1200 ஆக உயர்த்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை ரூ. 1500 ஆக உயர்த்தியுள்ளார். மேலும் அண்ணா பிறந்தநாளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் வழங்க உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

    அமைச்சர் அனிதாராதாகி ருஷ்ணனை பழிவாங்க நினைத்தால் அது நடக்காது. அவரை அமலாக்கத்துறை ஒன்றும் செய்ய முடியாது. அவர் பட்டொளி வீசி பறப்பார். கனிமொழியை போன்ற எம்.பி. நாட்டுக்கு தேவை. மக்களுக்கு புரிகின்ற வகையில் பேசு என்றார் அண்ணா. அந்த வகையில் மக்களிடம் எளிதாக பேசி மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருபவர்கள் கனிமொழி எம்.பி. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்க துறை ஒன்றுமே செய்ய முடியாது. அமலாக்கத்துறையே 2026-ல் காணாமல் போய்விடும். அரசியல் அனுபவம் இல்லாத ஆட்டுக்குட்டி அண்ணாமலை. நாகர்கோவிலில் அவர் கருணாநிதியை பற்றி தரகுறைவாக பேசியுள்ளார். அங்கு அவர் கருணாநிதி- காமராஜரை இழிவுபடுத்தி விட்டார் என்று பேசியிருக்கிறார். காங்கிரசை விட தி.மு.க. தான் காமராஜருக்கு அதிகம் செய்துள்ளது என்பது அவருக்கு தெரியாது. முதன் முதலில் காமராஜருக்கு அவர் உயிரோடு இருக்கும் போதே சிலை வைத்து அதை நேருவை வைத்து திறக்க வைத்தார். கள்ளம் கபடம் இல்லாத நல்ல தலைவர் காமராஜர். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். இப்படி காமராஜருக்காக காங்கிரசை விட அதிகம் செய்தது தி.மு.க. தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 2024-ம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற ஒற்றுமையாக இருந்து வெற்றியைத் தேடித் தாருங்கள். ஒரு வளமான திட்டம் மீண்டும் தருவதற்கு 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் மற்றும் பெண்களுக்கு தையல் மிஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், ரேவதி கோமதிநாயகம், ஆனந்த ராமச்சந்திரன் உளபட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வாள் சுடலை நன்றி கூறினார்.

    • ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை திருவல்லி கேணியில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் அசோசியேசன் சார்பில் தனியார் ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாநகராட்சி சேர்மன் சிற்றரசு, நடிகர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முஹம்மது நபி வாழ்க்கையில் சமத்துவம் குறித்து இந்த விழாவில் சிறப்புரையாற்றப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ஜீவா, அன்வர் பாசா, நீலம் பாசா காதிரி, இர்பான், சதக்கத்துல்லா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வாழ்நாள் சேவை சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் பிரசிடன்ட் நாகூர் கலீபா சாஹிப் தென்னிந்திய தர்காக்கள் பற்றி புத்தகத்தை வெளியிட தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுகொண்டார். விழா ஏற்பாடுகளை அசோசியேசன் செயலாளர் முஜம்மில் ஜாபர் செய்திருந்தார். பொருளாளர் அபு மூசா நன்றியுரை கூறினார். பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார்.
    • 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில்தான் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது.

    ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு என்று சொல்லத்தக்க அளவில் தேர்தல் நடந்தது.

    ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் போக வேண்டும் என்பதற்கு ப.சிதம்பரம் குறிப்பிட்டது போல, ஒரு நொண்டி சாக்கை கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறது.

    ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பல இடங்களில் டெபாசிட் போய்விட்டது. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாகி விடும்.

    சசிகலா அ.தி.மு.க.வினரை ஒன்று சேர்க்க போவதாக கூறுகிறார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உங்கள் மூலமாக நான் சவால் விடுகிறேன். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்புதாக கூறுகிறீர்களே? அப்படி புறக்கணிக்கிறது என்றால் அக்கட்சியில் உள்ள யாரும் ஓட்டு போடக்கூடாது. அதை அவரால் சொல்ல முடியுமா? நாங்களும் ஒரு கணக்கு எடுக்க போகிறோம்.

    தேர்தலில் அன்றைய தினம் யார்-யார் ஓட்டு போடுகிறார்கள் என்பது ஏஜெண்டுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா? என்று கணக்கெடுப்போம்.

    அப்படி அவர்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டதாக அர்த்தம்.

    எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணியுங்கள் என்று கட்சிக்கு சொல்லி விட்டு அதையும் மீறி கட்சிக்காரர்கள் ஓட்டு போட்டால் என்ன செய்வீர்கள்? உங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன். நடவடிக்கை எடுப்பேன் என சொல்ல எடப்பாடி பழனிசாமி தயாரா? ஆனால் அவர் அப்படி சொல்ல மாட்டார்.

    ஏதோ அவர் பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார். ஆனால் எதையும் சந்திக்கிற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது.

    காரணம் வன்னிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் செய்தது போல வேறு யாரும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான். இதன் மூலம் எத்தனை பேர் டாக்டர் ஆனார்கள். என்ஜினீயர்கள் ஆனார்கள்.

    குரூப்-1 தேர்வு எழுதி பணியாற்றி அதன்பிறகு ஐ.ஏ.எஸ். ஆனார்கள். இதையெல்லாம் அங்குள்ள மக்கள் மறந்திடுவார்களா என்ன?

    ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கி வரும் நிகழ்வு தாய்மார்கள் எப்படி நன்றி உணர்வோடு வாக்களித்து வெற்றிபெற செய்தார்களோ அதேபோல் வன்னிய பெருமக்கள் இந்த ஆட்சியின் மூலமாக 20 சதவீதத்தால்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றோம் என்பதை உணர்ந்து ஆயிரம் ராமதாஸ் சொன்னாலும், மனசாட்சி உள்ளவர்கள், நல்லவர்கள், இதயம் படைத்த வன்னியர்கள் அத்தனை பேரும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    எங்களுக்கு விக்கிரவாண்டியில் அடித்தளம் நன்றாக உள்ளது. நிர்வாகிகள் எழுச்சியோடு உள்ளனர். கூட்டணியும் ஒன்றாக உள்ளது. போன தேர்தலில் ஒரு சின்னத்தில் ஓட்டு கேட்டு விட்டு இந்த இடைத்தேர்தலில் இன்னொரு சின்னத்தில் ஓட்டு கேட்டால் அவர்களை மதிப்பார்களா? எங்களுக்கு அப்படி இல்லை.

    தி.மு.க. 2019-ல் இருந்து ஒரே அணியில் ஓட்டு கேட்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க.தான். ஆனால் இப்போது அவர்கள் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. அதனால் புறக்கணிப்பதாக கூறுவதற்கு தோல்வி பயம் மட்டுமின்றி வேறு காரணமும் உள்ளது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    ×