search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு-ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
    X

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு-ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு

    • பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார்.
    • 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில்தான் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது.

    ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு என்று சொல்லத்தக்க அளவில் தேர்தல் நடந்தது.

    ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் போக வேண்டும் என்பதற்கு ப.சிதம்பரம் குறிப்பிட்டது போல, ஒரு நொண்டி சாக்கை கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறது.

    ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பல இடங்களில் டெபாசிட் போய்விட்டது. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாகி விடும்.

    சசிகலா அ.தி.மு.க.வினரை ஒன்று சேர்க்க போவதாக கூறுகிறார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உங்கள் மூலமாக நான் சவால் விடுகிறேன். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்புதாக கூறுகிறீர்களே? அப்படி புறக்கணிக்கிறது என்றால் அக்கட்சியில் உள்ள யாரும் ஓட்டு போடக்கூடாது. அதை அவரால் சொல்ல முடியுமா? நாங்களும் ஒரு கணக்கு எடுக்க போகிறோம்.

    தேர்தலில் அன்றைய தினம் யார்-யார் ஓட்டு போடுகிறார்கள் என்பது ஏஜெண்டுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா? என்று கணக்கெடுப்போம்.

    அப்படி அவர்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டதாக அர்த்தம்.

    எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணியுங்கள் என்று கட்சிக்கு சொல்லி விட்டு அதையும் மீறி கட்சிக்காரர்கள் ஓட்டு போட்டால் என்ன செய்வீர்கள்? உங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன். நடவடிக்கை எடுப்பேன் என சொல்ல எடப்பாடி பழனிசாமி தயாரா? ஆனால் அவர் அப்படி சொல்ல மாட்டார்.

    ஏதோ அவர் பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார். ஆனால் எதையும் சந்திக்கிற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது.

    காரணம் வன்னிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் செய்தது போல வேறு யாரும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான். இதன் மூலம் எத்தனை பேர் டாக்டர் ஆனார்கள். என்ஜினீயர்கள் ஆனார்கள்.

    குரூப்-1 தேர்வு எழுதி பணியாற்றி அதன்பிறகு ஐ.ஏ.எஸ். ஆனார்கள். இதையெல்லாம் அங்குள்ள மக்கள் மறந்திடுவார்களா என்ன?

    ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கி வரும் நிகழ்வு தாய்மார்கள் எப்படி நன்றி உணர்வோடு வாக்களித்து வெற்றிபெற செய்தார்களோ அதேபோல் வன்னிய பெருமக்கள் இந்த ஆட்சியின் மூலமாக 20 சதவீதத்தால்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றோம் என்பதை உணர்ந்து ஆயிரம் ராமதாஸ் சொன்னாலும், மனசாட்சி உள்ளவர்கள், நல்லவர்கள், இதயம் படைத்த வன்னியர்கள் அத்தனை பேரும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    எங்களுக்கு விக்கிரவாண்டியில் அடித்தளம் நன்றாக உள்ளது. நிர்வாகிகள் எழுச்சியோடு உள்ளனர். கூட்டணியும் ஒன்றாக உள்ளது. போன தேர்தலில் ஒரு சின்னத்தில் ஓட்டு கேட்டு விட்டு இந்த இடைத்தேர்தலில் இன்னொரு சின்னத்தில் ஓட்டு கேட்டால் அவர்களை மதிப்பார்களா? எங்களுக்கு அப்படி இல்லை.

    தி.மு.க. 2019-ல் இருந்து ஒரே அணியில் ஓட்டு கேட்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க.தான். ஆனால் இப்போது அவர்கள் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. அதனால் புறக்கணிப்பதாக கூறுவதற்கு தோல்வி பயம் மட்டுமின்றி வேறு காரணமும் உள்ளது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    Next Story
    ×