search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை மீது ரூ.500 கோடி கேட்டு வழக்கு தொடரப்படுமா? ஆர்.எஸ்.பாரதி பதில்
    X

    அண்ணாமலை மீது ரூ.500 கோடி கேட்டு வழக்கு தொடரப்படுமா? ஆர்.எஸ்.பாரதி பதில்

    • பா.ஜ.க. மீதும் என் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை கூறிய ஆர்.எஸ்.பாரதி தான் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்தார்.
    • ஒவ்வொரு ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் சில சமயம் தள்ளுபடி ஆகி விடுகிறது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு பாரதிய ஜனதா-தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

    தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை முன் வைத்த நிலையில் அவரது கைக் கடிகாரம் விவகாரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி கிளறிவிட்டார். இந்த கைக் கடிகாரம் வாங்கியதற்கான ரசீதை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு அண்ணாமலை பதில் அளிக்கையில், கைக் கடிகாரம் வாங்கியதற்கான ரசீது இருப்பதாகவும், அதை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடுவேன் என்றும் அப்போது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

    அதன்படி கடந்த 14-ந்தேதி தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் தி.மு.க. எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டா லின் மற்றும் சபரீசன் உள்பட 12 பேர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

    இந்த பட்டியல் மூலம் தி.மு.க.வுக்கு அவதூறு ஏற்படுத்துவதாகவும் 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அன்றைய தினமே பேட்டி அளித்திருந்தார்.

    ஆனால் இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கோடிகளில் சொத்து குவித்து வைத்திருக்கும் தி.மு.க.வினர் இருக்கும் போது ஆர்.எஸ்.பாரதி என்னிடம் மேலும் ரூ.500 கோடி கேட்பதா?

    பா.ஜ.க. மீதும் என் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை கூறிய ஆர்.எஸ்.பாரதி தான் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்தார். இதற்காக விரைவில் நோட்டீசு அனுப்பப்படும் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் தி.மு.க. சார்பில் வில்சன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் தனித்தனியாக அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி இருந்த னர். ஆனால் இன்னும் யாரும் வழக்கு தொடரவில்லை.

    இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அண்ணாமலை மீது எப்போது வழக்கு தொடரப்படும்? என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து தனிப்பட்ட முறையில் தி.மு.க. பிரமுகர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

    ஆனால் அண்ணாமலையிடம் இருந்து எங்களுக்கு இன்னும் வக்கீல் நோட்டீசு வந்து சேரவில்லை. வக்கீல் நோட்டீசு முழுமையாக வரும்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    அவதூறு வழக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் சில சமயம் தள்ளுபடி ஆகி விடுகிறது.

    எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணாமலையின் வக்கீல் நோட்டீசுக்காக காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×