என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நிலத்தை தானமாக வழங்கிய மதுரை டாக்டர் வைரவனுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
அரசு பள்ளி பாதைக்காக 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய டாக்டர்
- புதிய இடத்தில் கட்டப்படும் பள்ளிக்கு ரோட்டில் இருந்து செல்ல பாதை வசதி இல்லாமல் இருந்தது.
- டாக்டர் வைரவனின் செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி இருந்தது. 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி பல்வேறு சிறப்புகளை கொண்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பள்ளி உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே புதிய இடம் பார்த்து பள்ளி கட்டிடம் கட்ட அரசு இடம் தேர்வு செய்தது. ஆனால் அரசு தேர்வு செய்யப்பட்ட இடமானது மாணவ-மாணவிகள் சென்று வர பாதுகாப்பானதாக இல்லை. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அந்த இடம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து இந்த ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால கிருஷ்ணனிடம் சென்று தங்களுக்கு பள்ளி கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற அவர் தனது 2 ஏக்கர் நிலத்தினை பள்ளிக்கு தானமாக வழங்கினார். தற்போது அந்த இடத்தில் புதிய கட்டிட கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை முதல் தரை தள பணிகள் முடிவுற்று உள்ளது.
இந்நிலையில் புதிய இடத்தில் கட்டப்படும் பள்ளிக்கு ரோட்டில் இருந்து செல்ல பாதை வசதி இல்லாமல் இருந்தது. பள்ளி அருகே சிவகங்கை மாவட்டம் கல்லலை சேர்ந்த டாக்டர் வைரவன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை பாதைக்காக பெற பொதுமக்கள் எண்ணினர்.
டாக்டர் வைரவன் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். அவரை சந்தித்த ஊர்மக்கள் பள்ளிக்கு பாதைக்காக நிலம் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அவர் சிறிதும் யோசிக்காமல் கல்விக்காக தனக்குரிய இடத்தை தர சம்மதம் தெரிவித்து உடனடியாக பள்ளி பகுதியில உள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலம் பாதைக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். டாக்டர் வைரவனின் இந்த செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியின் பாதைக்காக நிலம் தந்த டாக்டர் வைரவனை பள்ளி தலைமையாசிரியர் செல்வி, உதவி தலைமை ஆசிரியர் முத்துபாண்டி, ஆசிரியைகள் அமுதநாயகி, சாந்தினி கலைச்செல்வி, சந்திரா, பிரியா, ஜெயஜீவா, வழக்கறிஞர் துரை பாண்டியன், பள்ளி அலுவலக பணியாளர் அலியார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
டாக்டர் வைரவன் வழங்கிய 20 சென்ட் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது. டாக்டர் வைரவன் ஏற்கனவே தனது சொந்த ஊரான கல்லலில் உள்ள பள்ளிக்கு ஸ்மாட் வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






