என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?- ஐகோர்ட் கேள்வி
    X

    தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?- ஐகோர்ட் கேள்வி

    • கடந்தாண்டு அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது.
    • இந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேசவமணி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. 2014 ஆம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும், அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இருப்பினும் கடந்த ஆண்டு புதிய தேரோட்டமும், திருவிழாவும் நடைபெற்றது. கடந்தாண்டு அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த அதிக நபர்களை கூட்டிச்சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் பேரின் வளத்தை பிடித்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு-பிரச்சனையும் உருவானது.

    இந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்க படக்கூடாது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே கோவில் தேரோட்ட நிகழ்வில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைத்து தரப்பு சமூக மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி கோவில் நிகழ்வுகளிலும் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. கண்டதேவி கோவிலை பொறுத்தவரை ஒவ்வொரு சமூகத்திற்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சாதிய பாகுபாடு பார்ப்பது கிடையாது அனைவரும் சமமே என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தமிழகத்தில் எங்குமே சாதிய வேறுபாடுகள் இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியுமா? அரசின் நிலைப்பாடு அரசியலுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சொல்லலாம். நீதிமன்றத்தில் இது போன்று சொல்ல முடியாது. தமிழகத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் சாதிய பாகுபாடும் உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் கண்டதேவி கோவில் விவகாரத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

    Next Story
    ×