என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்படுகிறாரா?- பரபரப்பு தகவல்கள்
    X

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்படுகிறாரா?- பரபரப்பு தகவல்கள்

    • பெரும்பாலான கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர்.
    • சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் தி.மு.க. தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரை முருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தி.மு.க.வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் அதிகாரமிக்க பதவியாகும்.

    தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும்.

    கருணாநிதி, தி.மு.க. தலைவராக இருந்த கால கட்டத்தில் அவருக்கு பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன், பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியும் பக்கபலமாக இருந்தனர்.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சிக்கு தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீனியர் அமைச்சர் என்ற முறையில் துரைமுருகனை பொதுச்செயலாளர் ஆக்கினார்.

    கருணாநிதி காலத்து மரபை மீறாமல், பொதுக்குழு, செயற்குழு அறிவிப்புகளும், நிர்வாகிகள் நீக்கம், நியமனம் உள்ளிட்ட தகவல்களும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில்தான் வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக தற்போது இளைஞரணி செயலாளராக உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் அதிக செல்வாக்கு உள்ளது.

    அதனால் பெரும்பாலான கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர். மூத்த நிர்வாகியான அமைச்சர் துரைமுருகன் இப்போது அண்ணா அறிவாலயத்திற்கு தினமும் வருவதில்லை. ஏதாவது முக்கிய ஆலோசனை நடைபெறும் பட்சத்தில் வந்து செல்கிறார்.

    சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இதில் துரை முருகனுக்கு கொஞ்சம் மனவருத்தம் உண்டு என்று கட்சியினர் பரவலாக பேசுகின்றனர்.

    தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் துரைமுருகன் இடம் பெறவில்லை. இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த குழுதான் முக்கிய முடிவுகள் குறித்து பரிந்துரைத்து வருகிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் துரைமுருகன் பெயரளவில் பொதுச் செயலாளராக இருப்பதாகவும் அவருக்கு அந்த அளவுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

    தி.மு.க. விதிப்படி புதிய தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் 2027-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    அந்த தேர்தலில் துரைமுருகன் விடுவிக்கப்பட்டு அந்தப் பதவிக்கு டி.ஆர்.பாலு அல்லது கே.என்.நேரு பொதுச்செயலாளராக வருவார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. இந்த சூழலில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ள நிலையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது போக போகத் தான் தெரியவரும்.

    Next Story
    ×