என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜேப்பியார் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது.
    • மணமக்கள் மரிய கேத்தரின் ஜெயப்பிரியா - ரா.ஆகாஷ் இணையரை விஜய் வாழ்த்தினார்.

    சத்யபாமா கல்விக் குழுமத்தின் நிறுவனர் ஜேப்பியார் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய் மணமக்கள் மரிய கேத்தரின் ஜெயப்பிரியா - ரா.ஆகாஷ் இணையரை வாழ்த்தினார்.

    மேலும் இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைபிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

    • சரக்கு ரெயிலில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
    • திருவள்ளூர் பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சரக்கு ரெயில் தீப்பற்றி எரியும் இடத்தில மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தீ பற்றி எரியும் இடத்தில வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் யாரும் வரவேண்டாம்" என்று தெரிவித்தார்.

    • போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நிதியுதவி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • முறைகேடுகளும், குளறுபடிகளும் தான் நான் முதல்வன் திட்டத்தின் தோல்விக்கு காரணங்கள் ஆகும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கப் போவதாகக் கூறி தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சிக்காக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருவதாகவும், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டிய திறன் மேம்பாட்டுத் திட்டம் மாணவர்களால் விரும்பப்படாத திட்டமாக மாறி வருவதற்கு அரசின் பொறுப்பின்மை தான் காரணமாகும்.

    தமிழக அரசால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நிதியுதவி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அவற்றில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற உதவி செய்யும் திட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 35,137 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 11,865 ஆக குறைந்து விட்டதாக தமிழக அரசே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் திறன் பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளிப்பதில் உள்ள குறைகள் தான்.

    2023-ஆம் ஆண்டில் திறன் பயிற்சி திட்டத்தில் சேர்ந்த 1.35 லட்சம் மாணவர்களில் பாதிக்கும் குறைவாக வெறும் 66,537 பேருக்கு மட்டும் தான் வேலைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 68,600 பேருக்கு வேலைகள் கிடைக்கவில்லை.

    அதனால் 2024-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சம் குறைந்து 36,584 ஆக வீழ்ச்சியடைந்துவிட்டது. அவர்களிலும் வெறும் 8517 பேருக்கு மட்டும் தான் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன் விளைவாகத் தான் நடப்பாண்டில் இத்திட்டத்தில் வெறும் 11,865 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அவர்களிலும் 796 பேருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது.

    புரட்சிகரமான திட்டம் என்று அரசால் கொண்டாடப்பட்டு தொடங்கப்படும் ஒரு திட்டத்தில் பயனடைவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும். ஆனால், முதல் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்களை விட இரண்டாம் ஆண்டில் ஒரு லட்சம் பேர் (74%) குறைவாகத் தான் சேர்ந்துள்ளனர்.

    இரண்டாம் ஆண்டு சேர்ந்தவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள் தான் மூன்றாம் ஆண்டில் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். அதுமட்டுமின்றி, திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் விகிதமும் குறைந்து வருகிறது.

    2023&ஆம் ஆண்டில் பயிற்சி பெற்றவர்களில் 49 விழுக்காட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 23.33% ஆகவும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 6.76% ஆகவும் குறைந்து விட்டன.

    இன்றைய தேதியில் கூட 5000 பேர் பயிற்சி பெறுவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் 1000 பேர் கூட பயிற்சிக்கு வருவதில்லை. நான் முதல்வன் திட்டம் படுதோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபிக்க இந்த புள்ளி விவரங்களே போதுமானவை. இவற்றை தமிழக அரசால் கூட மறுக்க முடியாது.

    அடிப்படையில் திறன் பயிற்சி அளித்து, படித்த இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றும் திட்டங்கள் சிறப்பானவை. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவையானவை. நான் முதல்வன் திட்டமும் அத்தகைய திட்டம் தான். ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைபெறும் முறைகேடுகளும், குளறுபடிகளும் தான் நான் முதல்வன் திட்டத்தின் தோல்விக்கு காரணங்கள் ஆகும்.

    எடுத்துக்காட்டாக, படித்த இளைஞர்களுக்கு தையல் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பப்பட்டனர். ஆனால், அந்த நிறுவனத்தில் வெறும் 2 தையல் எந்திரங்கள் மட்டுமே இருந்ததாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளே கூறியிருக்கின்றனர்.

    வெறும் 2 எந்திரங்களை வைத்துக் கொண்டு எவ்வாறு நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்? அவ்வாறு பயிற்சி அளித்தாலும் அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? இதேபோல் இன்னும் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

    இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளும்கட்சியின் ஆதரவு பெற்ற பயிற்சி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகளே இல்லாவிட்டாலும் அவற்றுக்கு பயிற்சிக்கான ஒப்பந்தம் வாரி வழங்கப்படுவது தான்.

    திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு போதிய அளவில் வேலை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவ்வாறு பணியில் சேர்ந்தவர்களும் அதில் நீடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை. நான் முதல்வன் திட்டத்தின்படி பணியில் சேர்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.500 என்ற விகிதத்தில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

    பணியில் சேருபவர்களில் பெரும்பான்மையினர் தங்களின் சொந்த ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி தான் இந்தப் பணியை செய்ய வேண்டியிருப்பதால், அவர்களுக்கு இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. அதனால், அவர்கள் வேலையை உதறுகின்றனர்.

    எந்த வகையில் பார்த்தாலும் திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்குவதற்கான நான் முதல்வன் திட்டம் வெற்றிகரமானதாக இல்லை. இன்றைய தேவைக்கு ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்படாததும், மிகக் குறைந்த ஊதியத்தில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவதும் தான் இதற்கு காரணமாகும்.

    நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை. அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் கனவுத் திட்டமாக உருவாக்கி இளைஞர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்துவோம் என உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
    • பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்தைக் கண்டித்து த.வெ.க. சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரவுள்ள த.வெ.க. தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக்கண்காணிப்பின் கீழ்ச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை (13.07.2025) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை, சிவானந்தா சாலையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள், கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10.00 மணிக்கு தொடங்க இருப்பதால், அதற்குத் தகுந்தார்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நாம் ஒன்றுகூட வேண்டும்.

    எனவே, அனைவரும் தங்களது வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா சாலையை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    2. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசை வலியுறுத்த வேண்டும்.

    3. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வர வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

    4.போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரும் வகையில் வழி விட்டு ஒத்துழைப்பு தந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    5.தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

    6.பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    7.எந்த ஒரு மத, சாதி, இன மற்றும் தனிப்பட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.

    8.தனிப்பட்ட அதிகாரிகள் மீதும், ஆட்சேபகரமான முறையிலும் பேசுதல் மற்றும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது.

    9.ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகளைக் கொண்டு வருவது. அவற்றை எரிப்பது. புகைப்படங்களை எரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    10.ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருப்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    11.ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்.

    12.எவ்வகையிலும் கழகத்தின் கொள்கைகள். குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராகக் கண்டிப்பாகச் செயல்படக் கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய் ஆறுதல்.
    • தவெக தலைவர் விஜய் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்தார்.

    தவெக தலைவர் விஜய் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் வந்தனர். அங்கு, விஜய் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர் நிதியுதவியும் வழங்கியுள்ளார்.

    கடந்த 4 ஆண்டுகளில் விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளார்.

    அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவதாக விஜய் உறுதி அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், தீர்ப்பும் வாங்கி தர வேண்டியது என் கடமை.

    மனித உரிமைகள் ஆணையத்தில் தவெக சார்பில் சட்ட போராட்டம் நடத்தி நீதியை பெற்றுத் தருவோம்.

    வழக்குக்கான செலவை தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்" என விஜய் உறுதி அளித்துள்ளார்.

    • அஜித்குமார் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் த.வெ.க. போராட்டம் .
    • பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. பைக் ஊர்வலம் கூடாது என நிபந்தனை விதிப்பு.

    அஜித்குமார் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் த.வெ.க. போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்திற்கு 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. பைக் ஊர்வலத்தில் ஈடுபடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சுமார் 15 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு வழங்க தயார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் போராட்டத்தில் விஜய் 10 மணி முதல் 11 மணிக்குள் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்அப் மரணங்களில் உறவுகளை பறிகொடுத்த 10 பேர் போராட்டத்தில் பேச வைக்கப்பட இருக்கிறார்கள்.

    • திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக மாறியுள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி இன்று புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்த இபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், 4.45 மணி அளவில் ரோடுஷோவாக சென்று மக்களை சந்தித்தார்.

    அதன்பிறகு, சீமாட்டி சிக்னல் அருகில் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும்; திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.

    இன்றைய சூழலில் யாரும் வீடு கட்ட முடியாது. வீடு கட்டுவதை போல் கனவு வேண்டுமானால் காணலாம்.

    ஒரு யூனிட் ரூ.3 ஆயிரம் விற்ற எம்சாண்ட் ரூ.5,500ஆக விற்பனையாகிறது.

    அதிமுக ஆட்சியில் ரூ.50க்கு விற்ற சாப்பாட்டு அரிசி, இப்போது ரூ.77க்கு விற்பனையாகிறது. விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என யோசித்து வாக்களியுங்கள்.

    திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளில் திமுக அரசு ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

    தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகளை திமுக அரசு நிறுத்திவிட்டது.

    திமுக அரசு நிறுத்திய திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
    • சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    குறிப்பாக, வடபழனி, வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

    • இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்கிற எண்ணம் இருக்காது.
    • பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில் மாணவர்களை 'ப' வடிவில் அமர வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்கிற எண்ணம் இருக்காது. இதனை இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    'ப' வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்ற கருத்தை நீக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவமான கற்றல் சூழலை உருவாக்கவும், ஆசிரியர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என கல்வித்துறை கருதுகிறது.

    எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    • இறந்து கிடந்த நபர் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலி என்கிற ராயுடு என்பது தெரிய வந்தது.
    • பேசின் பாலம் கூவம் அருகே வீசிவிட்டு சென்றதாகவும் கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    சென்னை ஏழுகிணறு பகுதியில் எம்.எஸ்.நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறத்தில் கூவம் கரையோரமாக கடந்த 8ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எடுக்கப்பட்டது.

    இது பற்றி ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை துவக்கிய போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் இறந்து கிடந்த நபர் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலி என்கிற ராயுடு என்பது தெரிய வந்தது.

    சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து துப்பு துலக்கியதில் திருப்பதியை சேர்ந்த சிவகுமார், கோபி, தாசர், சந்திரபாபு அவரது துனைவி வினுதா கோட்டா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீனிவாசலி காளஸ்திரி ஜனசேனா கட்சி பொறுப்பாளர் வினுதா கோட்டா என்பவரின் வீட்டில், 15 வயதில் இருந்து வேலை செய்து வந்த நிலையில் தங்களிடம் பணியாற்றிவிட்டு எதிர்தரப்பை சேர்ந்தவர்களிடம் பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும்,

    இதன் காரணமாக காளஹஸ்தியில் உள்ள தங்களது ஷோ ரூம் குடோனில் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சித்ரவதை தாங்காத நிலையில் ஸ்ரீனிவாசலி கயிற்றால் கழுத்தை நெருக்கி உயிரை மாய்த்து கொண்டதாகவும், சடலத்தை மறைக்க காளஹஸ்தியில் இருந்து உடலை கடத்தி வந்து பேசின் பாலம் கூவம் அருகே வீசிவிட்டு சென்றதாகவும் கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    தாங்கள் கொலை செய்யவில்லை, அடைத்து வைத்து சித்ரவதை மட்டுமே செய்தாகவும், அது தொடர்பான சி.சி.டி.வி. ஆதாரங்கள் ஷோ ரூமில் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ள நிலையில் காளஹஸ்திக்கு ஏழுகிணறு போலீசார் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திராவில் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள் என்று கூறப்படுகிறது. கைதாகி இருப்பவர்களில் வினுதா கோட்டா பவன் கல்யாணின் ஆதரவாளர், ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி பொறுப்பாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
    • நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து செய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 23 நாட்களுக்கு மேல் அணை நிரம்பியுள்ளது.

    இந்தநிலையில் பிரதான ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலமாக 450 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ஆயக்கட்டு சம்மதம் இல்லாத பகுதிகளுக்கு யாரோ ஒருவர் உத்தரவுக்கு இணங்க தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    மடத்துக்குளம் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து வரும் நிலையில் அப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் நீர்வளத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உள்ளூர் பகுதி விவசாயிகளின் மடைகளை அடைத்து உபரி நீரை பிரதான கால்வாய் வழியாக கடந்த 7 நாட்களாக திறந்து விட்டுள்ளனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.

    எனவே நீர்வளத்துறை அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து செங்கண்டிபுதூர் பகுதியில் பிரதான கால்வாயில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது முறைகேடாக விவசாயிகளின் மடைகளை அடைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மடைகளை உடைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை (ஞாயிற்று கிழமை) மாலை நடக்கிறது.
    • செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை (ஞாயிற்று கிழமை) மாலை நடக்கிறது.

    விழாவிற்கு, தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ. முத்தழகன் தலைமை தாங்குகிறார்.

    நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதில், அகில இந்திய காங்கிரஸ் எஸ்.இ. பிரிவு தலைவர் ராஜேந்திரபால் கௌதம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி. க்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோ கரன், அசன் மெளலானா, உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின் றனர். சிலம்பன், ராஜ்கமல், ஆர்.கே.ராஜேஷ் ஆகியோர் நன்றி உரையாற்றுகிறார்கள்.

    ×