என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
    • ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 70). இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் முதல் மகனான கண்ணன் கடந்த 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் தனது பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மிகப்பெரிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போல நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து கண்ணனுக்கு மாலை அணிவித்து அதிர்வேட்டுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ராணுவ வீரர் கண்ணன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு 19வது வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தேன். 28 ஆண்டுகள் நல்ல முறையில் நாட்டுக்காக சேவையாற்றி தற்போது பணி முடித்து ஊருக்கு திரும்பியுள்ளேன்.

    எனக்கு நித்யதாரணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது பணியின் போது உயர் அதிகாரிகள் பல முறை என்னை சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவித்துள்ளனர். குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நாட்டிற்காக பணியாற்றிய போது கிடைத்த மகிழ்ச்சியை போல் தற்போது கிராம மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பள்ளி படிப்பின் போதே எனது நண்பர்கள் பலர் டாக்டர், கலெக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று பேசி வந்தனர். அப்போதிருந்தே எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. எனது ஆசைக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    தனது மகனுக்கு அளித்த வரவேற்பு குறித்து தந்தை ராஜ் தெரிவிக்கையில்,

    எனது 3 மகன்களையுமே ராணுவத்தில் சேர்த்துள்ளேன். அவர்கள் இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றுவதுடன் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராணுவத்தில் இருந்து திரும்பிய எனது மகனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை கண் கலங்க வைத்தது. இதன் பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ராணுவத்தில் பணியாற்ற அவன் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்
    • தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் வகையில் அனைவரும் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் இ-கே.ஒய்.சி. எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பேருந்துகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
    • போக்குவரத்து துறை பொது மேலாளர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து இந்த இரண்டு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    கோதையாறு மலை பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அங்குள்ள மக்களை சந்தித்தார். அவரிடம் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுவதை எடுத்துரைத்தனர்.

    அந்த மார்க்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் 313 மற்றும் 313 E எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

    பின்னர் நாகர்கோவிலில் போக்குவரத்து துறை பொது மேலாளர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து இந்த இரண்டு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    உடனடியாக இந்த பேருந்து வசதி மீண்டும் இயக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உறுதி அளித்தார்.

    • தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அடுத்தகட்டமாக இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேச தயாராகி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    கடந்த தேர்தலில் இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த தேர்தலில் அதைவிட ஒன்றிரண்டு தொகுதிகள் கூடுதலாக கேட்க வேண்டும். முடியாத பட்சத்தில் 9 தொகுதிகள் குறையாமல் கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒன்றிரண்டு தொகுதிகளை தி.மு.க. மாற்றி கேட்டால் மாற்று தொகுதிகள் எதை கேட்பது என்பதற்கும் 9 தொகுதிகள் பட்டியலை வழங்கி இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 33 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.விலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இரு கட்சி குழுவினரும் சந்தித்து பேச தயாராகி வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய்குமார் இன்று மாலை 6 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வருகிறார். அப்போது கே.எஸ்.அழகிரி மற்றும் வார் ரூம் பொறுப்பாளர்கள் செந்தமிழ், சுமதி அன்பரசு, அகரம் கோபி, மீரா, உமா, ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    நாளை (சனி) காலையில் தேர்தல் பணிக்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் தி.மு.க.விடம் எத்தனை தொகுதிகள் கேட்பது? எந்தெந்த தொகுதிகளை கேட்பது? என்பது பற்றி கருத்து கேட்கிறார்.

    இதன் அடிப்படையில் விரைவில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு.
    • ஹேஷ்டேக்குடன் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் பதிவு.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பெற காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளன.

    பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியாக உருவெடுத்து வெற்றி பணியை தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பணி தொடங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    அந்த பதிவில், தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் 2024 பணி என்றும், பணி முடிப்போம்.. வெற்றி வாகை சூடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அதில், இந்தியா வெல்லும் என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.
    • நன்றியை மறக்கக்கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் என தெரிவித்தார்.

    பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தமிழக பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டிய அவர், பாஜக-விற்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுக-வினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் எனக் கூறினார்.

    பாஜக உடனான கூட்டணில் இருந்து அதிமுக விலகிய பிறகு, பாஜக-வை சேர்ந்த பலரும் அதிமுக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாஜக-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், இன்று அதிமுக-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுமுறையை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.
    • சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    சென்னை :

    கடந்த டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.

    இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

    அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
    • அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    என மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டாகிறது. அவர் திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    அங்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.

    மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

    • வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
    • இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.

    இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

    அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.


    இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.

    தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.
    • மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 572.90 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது வளமான மழை அளவான 111.6 மில்லி மீட்டர் விட 413.4 சதவீதம் கூடுதல் ஆகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வாலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைக் கட்டுகளில் என தற்போது 96.69 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே சமயத்தில் 47.11 சதவீதம் தண்ணீர் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன.

    விற்பனை மையத்தில் உள்ள 1,456 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 36.58 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.41.56 லட்சம் ஆகும்.

    நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழையில் 19 ஆயிரத்து 306.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் 685 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 192 குளங்களும், 142 கால்வாய்களும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளால் உடைப்பு ஏற்பட்ட குளங்களை ரூ.19 கோடி மதிப்பீட்டில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை கோவில் இடித்தார்கள்?
    • இந்திய அளவில் தமிழகம் 3-வது மாநிலம் ராமர் கோவில் கட்டுவதற்கு அதிக பணம் கொடுத்த மாநிலம்.

    சென்னை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணல் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை Friendly Match-ன்னு கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலினின் நெறியாளர் சந்திப்பு என்பது ஒரு Friendly Match. அதில் எந்த கேள்வியும் சீரியஸான கேள்வி இல்லை. எந்த பதிலும் சீரியஸான பதிலும் இல்லை. அதற்கு நாங்கள் பதில் சொல்லி தரம் தாழ்த்திக்க விரும்பவில்லை. பத்திரிகையாளர் சந்திப்புன்னா எப்படி இருக்கனும்னுங்கறதுக்கு பாரதிய ஜனதா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு உதாரணம். அதை உயதநிதி ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து சிடி போட்டு பார்க்கணும். என்ன கேள்வி கேட்குறாங்க, தமிழ்நாட்டின் பிரச்சனை என்ன? அதை எப்படி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் கையாள்கிறார்கள் உதயநிதி ஸ்டாலின் பார்க்கணும்.

    உதயநிதி ஸ்டாலின் தான் துணை முதலைமைச்சருன்னு ஆரம்பிச்சதே அவர். சில பேர் தேவையில்லாமல் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சருன்னு சொல்றாங்க அதற்கு உதயநிதியே முற்றுப்புள்ளி வைச்சுட்டாருன்னு ஸ்டாலின் சொல்றார். ஆரம்பித்து வைத்தது தி.மு.க. காரர்கள். என்னுடைய வாழ்நாள்ல உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சரா பார்க்கணும் நாங்க சொன்னோமா தி.மு.க. எம்.எல்.ஏ. சொன்னாங்களா? உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவருன்னு நாங்க சொன்னோமா? தி.மு.க. அமைச்சர் சொன்னாங்களா? உதயநிதி துணை முதல்வராக வரவேண்டும்னு நாங்க சொன்னோமா? திமுக நிர்வாகிகள் சொன்னாங்களா?. சொன்னது நீங்க.. செட்அப் பண்ணது நீங்க. உதயநிதி துணை முதலமைச்சராக வந்தால் மக்களே ஏத்துக்கமாட்டாங்க... சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று தெரிந்த பிறகு நீங்க பல்டி அடித்துவிட்டாச்சு...


    மத வழிபாட்டு தல இடிப்பு பற்றி பேசுவதற்கு கடைசி தகுதி யாருக்கு இருக்குன்னு தி.மு.க.வுக்கு. ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை கோவில் இடித்தார்கள்? மக்கள் எல்லாம் போர் குரல் எழுப்பிய பிறகு கோவில் இடிப்பை நிறுத்தி வைச்சு இருக்காங்க. உச்சநீதிமன்றத்தில் இருதரப்புக்கும் நியாயம் கொடுக்கப்பட்டு இருக்கு. ராமர் கோவிலுக்கு ஒவ்வொரு மனிதனும் சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நபர் ராமர் கோவிலுக்கு ரூ.25 கோடி கொடுத்துள்ளார். இந்திய அளவில் தமிழகம் 3-வது மாநிலம் ராமர் கோவில் கட்டுவதற்கு அதிக பணம் கொடுத்த மாநிலம். உதயநிதிக்கு என்ன தெரியும்? உச்சநீதிமன்றம் தீர்ப்பு பற்றி தெரியுமா? என கூறினார்.

    • நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம். இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதம் சுமார் ரூ 24 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் இத்தகைய தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் பெல் நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் மாதம் 13-ந் தேதி சொசைட்டி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் இதுவரை பெல் நிர்வாகம் அழைத்து பேசவில்லை. இந்நிலையில் அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்யப் போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.

    அதன் பிறகும் பெல் நிறுவன நிர்வாகம் அழைத்து பேசாததால் இன்று முதல் பெல் நிறுவன மெயின் கேட் முன்பு போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் பாதுகாவல் பணி, மருத்துவ பணியில் சில தொழிலார்களை தவிர மீதி அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×