search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mission Completion"

    • குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
    • ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 70). இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் முதல் மகனான கண்ணன் கடந்த 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் தனது பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மிகப்பெரிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போல நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து கண்ணனுக்கு மாலை அணிவித்து அதிர்வேட்டுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ராணுவ வீரர் கண்ணன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு 19வது வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தேன். 28 ஆண்டுகள் நல்ல முறையில் நாட்டுக்காக சேவையாற்றி தற்போது பணி முடித்து ஊருக்கு திரும்பியுள்ளேன்.

    எனக்கு நித்யதாரணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது பணியின் போது உயர் அதிகாரிகள் பல முறை என்னை சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவித்துள்ளனர். குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நாட்டிற்காக பணியாற்றிய போது கிடைத்த மகிழ்ச்சியை போல் தற்போது கிராம மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பள்ளி படிப்பின் போதே எனது நண்பர்கள் பலர் டாக்டர், கலெக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று பேசி வந்தனர். அப்போதிருந்தே எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. எனது ஆசைக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    தனது மகனுக்கு அளித்த வரவேற்பு குறித்து தந்தை ராஜ் தெரிவிக்கையில்,

    எனது 3 மகன்களையுமே ராணுவத்தில் சேர்த்துள்ளேன். அவர்கள் இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றுவதுடன் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராணுவத்தில் இருந்து திரும்பிய எனது மகனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை கண் கலங்க வைத்தது. இதன் பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ராணுவத்தில் பணியாற்ற அவன் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    ×