என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணைவது குறித்து தே.மு.தி.க. ஆலோசனை நடத்தி வருகிறது.
- விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.
சென்னை:
நெருங்கும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணைவது குறித்து தே.மு.தி.க. ஆலோசனை நடத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்பட 4 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை கேட்டுப்பெற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது.
விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறும் முனைப்பில் வலுவான கூட்டணியில் இணைய தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில்.
- கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
- இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
நாகர்கோவில்:
திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் பதவி வகித்தார். சேவியர் குமாருக்கும், மைலோடு ஆலய பங்குபேரவை தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 20-ந்தேதி ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக இரணியல் போலீசார் பாதிரியார் ராபின்சன் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் கோர்ட்டிலும், ரமேஷ்பாபு நாகப்பட்டினம் கோர்ட்டி லும் சரணடைந்தனர்.
சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரமேஷ்பாபுவை காவல் எடுத்து விசாரிக்க இரணியல் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து ரமேஷ் பாபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ரமேஷ் பாபுவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் ரமேஷ் பாபுவை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை திருவனந்தபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
- வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது.
- புதிய பாதை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
சென்னை:
ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் ரெயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. தற்போது அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்பவர்கள் குறைந்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றடைகிறார்கள்.
சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களை தரம் உயர்த்தவும், சில வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.
ரெயில்களை அதிவேகத்தில் இயக்குவதற்கு தண்டவாளம் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதனால் அதனை உறுதிப் படுத்தவும் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
சென்னை-பெங்களூரு இடையேயான 360 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்திற்கும் குறைவாக பயணிக்க இந்த வேகம் உதவும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது. அதைவிட பயண நேரம் குறையும் வகையில் 200 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கான அடிப்படையான பணிகளை செய்வதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் தயார் ஆகிவிடும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க அறிமுகம் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே உள்ள தண்டவாளத்தில் செமி அதிவேக ரெயில்களை இயக்கி சோதனை செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள வழித் தடத்தை குறைவாகவோ அல்லது கூடுதலாக நாங்கள் பயன்படுத்தலாம். சில வழித் தடங்களில் அல்லது ரெயில் நிலையங்களில் புதிய பாதை அமைக்கலாம். மற்றப்படி ஏற்கனவே உள்ள தண்டவாளங்களை மேம்படுத்தி ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம்" என்றார்.
- நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.
சென்னை:
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், நிதி திரட்டி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தனர்.
என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.
- கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்றது.
- காசிக்கு நிகரான கோவில்
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை கோலா கலமாக நடைபெற்றது. கடந்த மாதம்(ஜனவரி) 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 29-ந்தேதி முதல்கால வேள்வி பூஜை தொடங்கியது.
நேற்று 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும் ,காலை 10 மணிக்கு அவினாசியப்பருக்கு துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடந்தது.
சிகர நிகழ்ச்சியான இன்று 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறை விண்ணப்பம், பேரொளி ஆராதனை நடந்தது.காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அவிநாசியப்பர், பெருங்கருணாம்பிகை அம்மன், சுப்பிரமணிய பெருமான் ஆகிய மூலவர் சன்னதி, விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.பின்னர் டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, சிவ... சிவ... என எழுப்பிய கோஷம் விண்ணை அதிரச் செய்தது.
கும்பாபிஷேகத்தை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீகாமாட்சிதாச சுவாமிகள், தென்சேரிமலை முத்து சிவராம சுவாமிகள் ஆகியோர் நடத்தினர்.
இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
- இதுவரை தென்சென்னை, வடசென்னை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் திறக்கப்பட்டுள்ளது.
- பணிகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளிலும் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை யொட்டி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகம் திறக்க டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இதுவரை தென்சென்னை, வடசென்னை, திருநெல் வேலி ஆகிய தொகு திகளில் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பா.ஜனதா தலைமைதேர்தல் அலுவலகம் அமைந்தகரையில் உள்ள அய்யாவு மகாலில் அமைக்கப்படுகிறது.
தலைவர் அறை, முக்கிய நிர்வாகிகள் அறை, கூட்ட அரங்கம், 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறை ஒவ்வொரு அறையிலும் தனி போன் எண், இணையதள வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. இந்த பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.
பணிகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளிலும் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளார்கள். வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
வருகிற 5-ந்தேதி மாநில தலைவர் அண்ணாமலை இந்த தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை கட்சி பணிகள் அனைத்தும் இந்த அலுவலகத்திலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது.
- நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
- பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலாஜி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சதீஷ்பாபு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் சிவக்குமார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) துரைசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவராகவும் (கி.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உமாசங்கர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேடியப்பன், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சையத் பயாஸ் அகமது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஹேமலதா, கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி), கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராக (வளர்ச்சி) இருந்த முகமது சிராஜிதீன், தளி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ), சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவப்பிரகாசம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மகேஸ்வரன், கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவல வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
- ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவி மீது வன்கொடுமை செய்து கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல் இழந்த அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முடங்கி சீர் கெட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் மாணவியை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கண்டனத்திற்கு பிறகே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆட்சியாளர்களும், கடமை தவறிய அதிகாரிகளும் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் யார் பெரியவர்கள் என மல்லுக்கட்டி நிற்கின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மாநில அரசு நிதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். அதை கூட தி.மு.க., அரசால் செயல்படுத்த முடியவில்லை.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை, சிலைகளை எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அதை செய்கிறார். மாடு பிடி அரங்கில், ஏறுதழுவும் சிலையில் கூட தனது முகம் போல வைத்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்ற பார்க்கிறார். அரசியலில் தங்களை எதிர்த்தவர்கள் பெயர் எங்கும் இருக்க கூடாது என நினைக்கிறார். தமிழ்நாடு என்பதை கருணாநிதி நாடு என மாற்ற முயற்சிக்கிறார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று வரும்போது, கருணாநிதி என்ற பெயரே இல்லாமல் செய்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செல்போன்களில் இருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர்.
- பலரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்குள் கடந்த 2017-ம் ஆண்டு புகுந்த மர்ம நபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் பின்னர் விபத்தில் பலியானார்.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் பலரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய 8 செல்போன்கள் மற்றும் 5 சிம்கார்டுகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களில் இருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர். இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலீசார் நாடினர். ஆனால் செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்கள் 2 ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கும் வசதி உள்ளதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை யடுத்து திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து செல்போன் அழைப்புகள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள தடவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு இந்த மாதம் இறுதியில் திருச்சி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அந்த தடயவியல் நிபுணர்குழு இன்று வருகைதர உள்ளனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறும்போது கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களிலிருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்ற விவரங்களை சேகரிப்பதற்காக குஜராத்தில் உள்ள தடவியல் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் இன்று வருகிறார்கள்.
இவர்கள் திருச்சி பி.எஸ் .என். எல். அலுவலகம் சென்று அங்கு உள்ள சர்வரில் இருக்கும் தகவல்களை ஆய்வு செய்வார்கள் என்றனர்.
- காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிப்.13-ந்தேதி சென்னை வருகிறார்.
- இரு தலைவர்கள் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்) சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் பிரமாண்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார மற்றும் பூத் கமிட்டிகள் வரையிலான நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றும் கார்கே தேர்தலுக்காக காங்கிரசாரை முடுக்கி விடுவார் என்று கூறப்படுகிறது.
சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் முதல்கட்டமாக பேசி உள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் பேசிய பிறகு மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தை நடைபெறும்.
கார்கே வருவதற்குள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டால் கார்கே முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






