search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forensic Team"

    • செல்போன்களில் இருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர்.
    • பலரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்குள் கடந்த 2017-ம் ஆண்டு புகுந்த மர்ம நபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் பின்னர் விபத்தில் பலியானார்.

    இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் பலரை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய 8 செல்போன்கள் மற்றும் 5 சிம்கார்டுகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களில் இருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்கிற விவரங்களை போலீசார் சேகரிக்க முடிவு செய்தனர். இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலீசார் நாடினர். ஆனால் செல்போன் அழைப்புகள் குறித்த விவரங்கள் 2 ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கும் வசதி உள்ளதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை யடுத்து திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து செல்போன் அழைப்புகள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள தடவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு இந்த மாதம் இறுதியில் திருச்சி வருவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் அந்த தடயவியல் நிபுணர்குழு இன்று வருகைதர உள்ளனர்.

    இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறும்போது கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன்களிலிருந்து யார் யாரை? தொடர்பு கொண்டார்கள் என்ற விவரங்களை சேகரிப்பதற்காக குஜராத்தில் உள்ள தடவியல் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் இன்று வருகிறார்கள்.

    இவர்கள் திருச்சி பி.எஸ் .என். எல். அலுவலகம் சென்று அங்கு உள்ள சர்வரில் இருக்கும் தகவல்களை ஆய்வு செய்வார்கள் என்றனர்.

    • சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார்.
    • வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான் உள்பட 10 பேர் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று, அந்த பகுதியில் 60 செல்போன் மற்றும் 19 தொலைபேசி டவர்களின் இடங்கள் பதிவாகி இருந்தது.

    இது தொடர்பான கேசட் ஒன்று திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, ஊட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த கேசட்டில் உள்ள தகவல்களை சேகரிப்பதற்காக, குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 5-ந் தேதி கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் கோர்ட்டு மூலமாக குஜராத் மாநிலத்திற்கு செல்போன் டவர்கள் தொடர்பான கேசட் அனுப்பப்பட்டது.

    அந்த கேசட் தந்தால் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு உதவும். அதில் இருக்கும் தகவல்களை கொண்டு, மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அதனை தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனை ஏற்று, குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்தில் உள்ள கேசட் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    அப்போது ஒரு வருடம் ஆகிவிட்டதால் அதனை நேரில் தான் எடுக்க முடியும் என்பதால் குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்குழு வருகிற 26-ந் தேதி திருச்சிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

    அவர்கள் திருச்சியில் உள்ள பி.எஸ்.என். அலுவலகத்தில், நேரில் சென்று, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகி இருந்த செல்போன் மற்றும் தொலைபேசி டவர்களின் தகவல்களை சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர். அதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியுள்னர். அதில், வருகிற 11-ந் தேதி காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவரும் 11-ந் தேதி சயான் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

    தற்போது இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த உள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் பெறப்படும் தகவல்கள் முக்கியமாக பார்க்கப்படும் என்பதால் இந்த வழக்கு தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், தன்னிடம் சில ஆவணங்கள் உள்ளதாக கூறி சயான் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததும், அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ×