என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதிகளை செய்துள்ளோம்.
    • ஏ.டி.எம். மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. மிகப்பெரிய பேருந்து நிலையமாக இருந்தபோதிலும், போதிய வசதிகள் இல்லை என பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    வசதிகள் அனைத்தும் படிப்படியாக செய்யப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் நிறுத்திமிடம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்.

    ஏ.டி.எம். மையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையத்தை திறந்த 35 நாட்களுக்குள் தேவையான 90 சதவீத அடிப்படை வசதிகளை செய்துள்ளோம்.

    இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.

    • சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
    • படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் தற்போது 39 வழித் தடங்களில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகை இயக்கப்படுகிறது. முற்றிலும் சேர்கார் பெட்டிகளாக அதாவது அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை-கோவை, எழும்பூர்-நெல்லை, சென்னை-மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வந்தே பாரத் ரெயில் படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலில் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா, மற்றும் டெல்லி-பாட்னா போன்ற சில நகரங்களுக்கு இடையே இரவு நேர பயணங்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் 10 செட் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் மாதம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு ஏப்ரல் முதல் அல்லது 2-வது வாரத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், "படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. தரம் மற்றும் அதன் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருக்கும்.

    அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் 'கவாச்' அமைப்புடன் பொறுத்தப்பட்டு இருக்கும்.

    மேலும் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலும் 16 ஏ.சி. பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில் 850 படுக்கை வசதிகள் இடம் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நெல்லையில் இருந்து வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றுவிட்டு பின்னர் மதியம் 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் இரவு 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே வாஞ்சி மணியாச்சிக்கும், நாரைக்கிணறுக்கும் இடையே வந்தே பாரத் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ரெயில் பெட்டிகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.

    உடனே பெட்டிகளில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் ரெயில் வேகமாக வந்ததால் சிறிது நேரத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரெயில்பெட்டிகளை ஆய்வு செய்தனர்.


    அதில் 6 பெட்டிகளின் இடது புறங்களில் சுமார் 9 இடங்களில் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்திருந்தது.இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் மர்ம நபர்கள் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    தொடர்ந்து சேதம் அடைந்த ரெயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது நாரைக்கிணறு பகுதியில் வைத்து இந்த கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் யாரேனும் அந்த பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    சம்பவ இடம் முட்புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்தது. மேலும் அந்த இடத்தில் மதுபாட்டில்கள் உள்ளிட்டவையும் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் கும்பல் ஏதேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா? அந்த கும்பல் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் வந்தே பாரத் ரெயில் மீண்டும் தனது இயக்கத்தை தொடங்கி சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    • பாஜக நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.
    • பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி உள்ளனர். பா.ஜ.கவும் தேர்தல் பணியை தமிழகத்தில் தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த முறையை விட இந்த முறை தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதுடன், தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வகையில் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடனான மத்திய குழு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், எச்.ராஜா, கே.டி.ராகவன், ஜி.கே.நாகராஜ், கரு.நாகராஜன் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறிப்பாக பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியதை அடுத்து, தங்கள் கூட்டணியில் எந்தெ ந்த கட்சிகளை சேர்க்கலாம். யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். தமிழகத்தில் நமக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என பல்வேறு விஷயங்களை தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார்.

    மேலும் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிப்பது? அதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டார். அவர்களும் பல்வேறு கருத்துக்களை தேசிய அமைப்பு பொதுச்செயலாளரிடம் தெரிவித்தனர்.

    நிர்வாகிகள் கூறிய அனைத்து கருத்துக்களையும் கேட்டு கொண்ட தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாராளுமன்ற தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள் என கூறியதோடு, வெற்றிக்கான சில வழிகளையும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் சென்று கட்சியினர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். அவர்களிடம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறி வாக்குகளை சேகரியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

    மக்களிடமும் அவர்களுக்கு ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டு, அதனை உடனே நிறைவேற்று வதற்கான நடவடிக்கையும் எடுங்கள். அடிக்கடி மக்களை சந்தித்து கொண்டே இருங்கள்.

    வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் அந்தந்த நிர்வாகிகள் தங்கள் முழு பலத்தையும் இறக்கி தேர்தல் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தாக தெரிகிறது.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதிலும் குறிப்பாக பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழகத்தில் போட்டியிடக் கூடிய முக்கிய வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க கோவை, நீலகிரி உள்பட பல்வேறு தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது. குறிப்பாக நீலகிரி தொகுதியில், மத்திய மந்திரியாக இருக்க கூடிய எல்.முருகன் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் எல்.முருகனும், நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகாமிட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதுடன், மக்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறார்.

    இதையெல்லாம் பார்க்கும் போது, அவர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    நேற்று நடந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் விரைவில் முதற்கட்ட வேட்பாளர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அந்த பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகனின் பெயர் உள்பட இன்னும் சில முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.
    • செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-

    இங்கே வரவேற்கும் போதும் சிலர் என்னை பட்டப்பெயர் வைத்து அழைத்தீர்கள். அதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. 'சின்னவர்' என்று கூப்பிடுகிறீர்கள். வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.

    அதற்காக சின்னவர், இளைய கலைஞர், வாலிபப் பெரியார் என்றெல்லாம் அழைப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். சட்ட மன்ற உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர்… என்ற இந்தப் பொறுப்பெல்லாம் இன்றைக்கு வரும் நாளைக்குப் போய்விடும். ஆனால் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதுதான் நிரந்தரம். இப்போது அமைச்சராக இருப்பதால் கொஞ்சம் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருக்க முயற்சிக்கிறேன். தயவுசெய்து பட்டப்பெயர் வைத்து அழைப்பதை தவிர்த்து விடுங்கள்.

    தேர்தல் பணியை நம்முடைய தலைவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். மூன்று குழுக்கள் அமைத்தார். அதில் ஒருங்கிணைப்புக் குழுவில் நான் இருக்கிறேன்.

    ஒவ்வொரு தொகுதியாகச் சந்தித்து அதில் இருக்கக் கூடிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் வரச் சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் நான்கு தொகுதிகளைச் சந்திக்கிறோம். தொகுதியில் இருக்கக் கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள், மனக் கசப்புகள், தொகுதிப் பிரச்சினைகள், வெற்றி வாய்ப்புகள் என்று இப்படி தொடர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம்.

    இன்றோடு 36 தொகுதி முடித்துவிட்டோம். மீதியுள்ள 4 தொகுதிகளையும் முடித்து விடுவோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் சொன்னதை வைத்துப் பார்த்தால் நிச்சயம் 40க்கு 40ஐ நாம்தான் வெற்றி பெற போகிறோம்.

    நம்முடைய தலைவர் யாரை முடிவு செய்கிறாரோ, தி.மு.க. யாரை முடிவு செய்கிறதோ அவர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

    சமீபத்தில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறந்தார்கள். இந்த நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், கணவரை இழந்தவர். அந்தக் காரணத்திற்காக அவரை அழைக்கவில்லை. ஆனால் செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    10 நாட்களுக்கு முன்பு இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. எந்த மதத்துக்கோ, வழிபாட்டுக்கோ எதிரான கட்சியல்ல. எங்களுக்கு ''ஒன்றே குலம், ஒருவனே தேவன்''. நீங்கள் கோவில் கட்டினால் தமிழ் நாட்டு மக்கள் நன்றாக வழிபடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் உதய சூரியன் சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    இந்த ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சாமியார்கள் யாருமே செல்லவில்லை. மோடி வருகிறார், அதனால் நாங்கள் யாரும் வரமாட்டோம் என்று சங்க ராச்சாரியார்கள் சொல்லிவிட்டார்கள். இதைத்தான் 4 மாதங்களுக்கு முன்பு நான் சொன்னேன். அனைவரும் சமம் என்று அப்போது நான் பிரதமருக்கும் சேர்த்துப் பேசியிருக்கிறேன்.

     

    அதற்காக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, ''மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் கலைஞரின் பேரன். சொன்னால் சொன்னது தான்!'' என்று சொல்லிவிட்டேன். என் மீது தவறு இல்லை, பிறப்பால் அனைவரும் சமம். இங்கு ஜாதி, மத பாகுபாட்டுக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இங்கே ஒரு அடிமைகள் கோஷ்டி இருக்கிறது. ஓ.பி.எஸ்.தான் முதலில் கைதாவார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் கைதாவார் என்று அதேநாள் மாலையில் ஓ.பி.எஸ். சொல்கிறார். இரண்டு பேரும் ஒன்றாகத்தான் கைதாகப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன். கைதாகி சிறைக்குப் போகும்போதாவது தவழ்ந்து தவழ்ந்து செல்ல வேண்டாம், கால் வலி வரும் என்ற கோரிக்கையை மட்டும் நான் அவர்களுக்கு வைக்கிறேன்.

    2021-ல் அடிமைகளை விரட்டி வீட்டுக்கு அனுப்பினோம். இப்போது இந்தத் தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நமக்கு இருக்கிற ஒரே குறிக்கோள் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி. நாற்பதும் நமதே, நாடாளுமன்றமும் நமதே.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • மாசிமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பி க்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் ஐதீக திருவிழா வருகிற 11-ந்தேதியும், தேர் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஆர்.புதுப்பட்டியையொட்டியுள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் வருடம் தோறும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    நேற்று வழக்கம்போல் விழா நடைபெற்றது. கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக 45 ஆடுகள், 60 பன்றிகள், 25 சேவல்கள், 2 ஆயிரம் கிலோ பச்சரிசியை காணிக்கையாக வழங்கினர்.

    இந்த விழாவில் ஆட்டு இறைச்சி 500 கிலோ, கோழி இறைச்சி 75 கிலோ, பன்றி இறைச்சி 1300 கிலோ என மொத்தம் 1875 கிலோ இறைச்சியை கொண்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் அசைவ உணவு சமைத்தனர். அதன் பிறகு பக்தர்களுக்கு விருந்து வழங்கினர். இந்த விருந்தில் புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, ஆயில் பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து அசைவ உணவு சாப்பிட்டனர்.

    • பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம்.
    • அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட நிலையில் போலீசார் நடவடிக்கை.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    ஆம்பூரில் நேற்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.
    • தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் என அறிவிப்பு.

    மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    மாநில உரிமைகள் காத்திட மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் வரும் 8ம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.

    அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    • ரூ.5.92 கோடியை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு உத்தரவு.
    • தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த வேண்டும்.

    அம்மோனியா வாயுக்கசிவு விவகாரத்தில் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி," மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடியை உடனடியாக செலுத்த வேண்டும்.

    ரூ.5.92 கோடியை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மாசு கட்டுபாடு வாரியம் நிபந்தனைகளை செயல்படுத்தாக தொழிற்சாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலுக்கு அடியில் புதிய குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். குழாய்க்கு அருகில் அம்மோனியா சென்சார்கள் அமைக்க வேண்டும்.

    மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் குழாயில் சேதம் ஏற்பட்டு அம்மோனியா கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

    தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த வேண்டும்.

    அரசின் தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டில் இருந்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக பேசினார்.
    • அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது. இதைதொடர்ந்து, வரும் 19ம் தேதியன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதை முன்னிட்டு, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார்.

    வெளிநாட்டில் இருந்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக பேசினார்.

    முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தன், அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

    • பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
    • வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.

    மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

    ×