search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு
    X

    வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு

    • நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நெல்லையில் இருந்து வழக்கம்போல் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றுவிட்டு பின்னர் மதியம் 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் இரவு 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே வாஞ்சி மணியாச்சிக்கும், நாரைக்கிணறுக்கும் இடையே வந்தே பாரத் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ரெயில் பெட்டிகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ரெயிலில் உள்ள 6 பெட்டிகளில் கண்ணாடிகள் சேதமடைந்தது.

    உடனே பெட்டிகளில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் ரெயில் வேகமாக வந்ததால் சிறிது நேரத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரெயில்பெட்டிகளை ஆய்வு செய்தனர்.


    அதில் 6 பெட்டிகளின் இடது புறங்களில் சுமார் 9 இடங்களில் கண்ணாடிகள் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்திருந்தது.இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் மர்ம நபர்கள் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    தொடர்ந்து சேதம் அடைந்த ரெயில் பெட்டிகளில் பயணித்த பயணிகளிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது நாரைக்கிணறு பகுதியில் வைத்து இந்த கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் யாரேனும் அந்த பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    சம்பவ இடம் முட்புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்தது. மேலும் அந்த இடத்தில் மதுபாட்டில்கள் உள்ளிட்டவையும் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் கும்பல் ஏதேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா? அந்த கும்பல் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் வந்தே பாரத் ரெயில் மீண்டும் தனது இயக்கத்தை தொடங்கி சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×