என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
- போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங்பவுடர் போன்ற தூய்மை பொருட்களால் அடிக்கடி தூய்மை பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார். எனினும் தொடர்ச்சியாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தூய்மை பணிகளுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் தங்களை இதுவரை ஆஸ்பத்திரி நிர்வாகம், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்தனர். போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.வின் திண்ணைப் பிரசாரங்கள் தொடங்கியது.
- அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக பணியை தி.மு.க. தொடங்கி விட்டது.
முகவர்கள் கூட்டம், பி.எல்.ஏ. 2 நிர்வாகிகளுடன் ஆலோசனை என அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு ஒவ்வொரு அணிகளின் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.
தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என அடுத்தடுத்து பிரசார கூட்டங்கள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக அனைத்து ஊர்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு எல்.ஈ.டி. திரைகளுடன் பிரமாண்ட கூட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கூட்டம் மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தியது.
இதை தொடர்ந்து கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை காணொலியில் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் நடத்த வேண்டும் என்று கட்டளையிட்டார்.
திராவிட மாடல் ஆட்சியின் 3-ம் ஆண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடு தோறும் கொண்டு சேர்க்கவும், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பாரதிய ஜனதா அரசு செய்து வரும் அநீதிகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இன்று (26-ந்தேதி) இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணைப் பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. வின் திண்ணைப் பிரசாரம் தொடங்கப்பட்டது.
சென்னையை அடுத்த கோவூரில் நடைபெற்ற திண்ணைப் பிரசாரத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு உரிய நிதி தராமல் வஞ்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு பாடம் புகட்டுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அவருடன் ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், வந்தே மாதரம் உள்பட கழக நிர்வாகிகள் உடன் சென்று பிரசாரத்தில் பங்கேற்றனர்.
இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.வின் திண்ணைப் பிரசாரங்கள் தொடங்கியது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் ஒலிக்க 6 சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 2,378 வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்குச் சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து நாளை மறுநாள் (28-ந்தேதி) ஒருநாள் முழுவதும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணைப் பிரசாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
- தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
- எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன். இவர் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை பன்றிகள் மிகவும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறுகையில் எலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் இறைச்சிக்காக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல் திறந்தவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்ப்பதால் தோட்ட த்து பகுதிகளில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம், கரும்பு பயிர்களை சேதம் செய்ததால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிர்களை வளர்த்தால் ஒரே நாளில் இந்த பன்றிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.
எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
- தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.
அங்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.
- வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
- குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
தமிழகத்தில் அதிக வெயிலின் தாக்கத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை உள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டில் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்று புழுக்கத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கரும்பு பால், குளிர்பானங்கள், இளநீர், மோர் போன்றவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.
இதனால் இந்த வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஈரோடு வனப்பகுதிகளான அந்தியூர் பர்கூர் வனப்பகுதி, கடம்பூர் வனப்பகுதிகளில் கடும் வெயிலால் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு உள்ளதால் குடிநீருக்காகவும், உணவுகளை தேடியும் யானைகள், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பகுதியில் தற்போது மண் பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- கிராமுக்கு 40 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.76-க்கும் பார் வெள்ளி ரூ.76ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5810-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 40 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.76-க்கும் பார் வெள்ளி ரூ.76ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- பாரதிய ஜனதா ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு நலம் பெறும்.
- விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு பாரதிய ஜனதா முக்கியத்துவம் அளிக்கிறது.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து செயலாற்றுவதில் த.மா.கா. பெருமை கொள்கிறது.
பாரதிய ஜனதா ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு நலம் பெறும். பாதுகாப்பு ரீதியாக வலிமை அடையும். இதை கருத்தில் கொண்டே பா.ஜ.க. அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைகிறது.
பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் நானும் (ஜி.கே.வாசன்) பங்கேற்கிறேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.

வளமான பாரதம் அமைய வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் பாரதிய ஜனதாவுடன் வந்து இணைய வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பாடுபடுவார்கள்.
விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு பாரதிய ஜனதா முக்கியத்துவம் அளிக்கிறது. படித்தவர்கள், இளைஞர்கள், பெண்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். அவரது கரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
பாரதிய ஜனதாவுடன் விரைவில் த.மா.கா. தொகுதி பங்கீடு செய்யும்.
சாதாரண மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்க தி.மு.க. தவறி விட்டது. அதற்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் விடை கிடைக்கும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
- ‘உரிமை வீரர் கலைஞர்' என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது.
- ‘புதிரை வெல் கலைஞர் வழி செல்' என்ற தலைப்பில் கருணாநிதி பற்றிய கேள்விகள் தொடு திரையில் வருகின்றன.
சென்னை:
இந்திய அரசியலில் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 18 ஆண்டுகள் பதவி வகித்தவர். 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி அன்று தனது 95 வயதில் மரணத்தை தழுவினார். தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலேயே தனது உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பமாக இருந்தது.
ஆனால் அதற்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. தரப்பில் நீதிமன்றம் சென்றனர். அனுமதி ஆணை பெற்று, அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளடங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளது. இந்த சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்னால் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ளது. கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
கருணாநிதியின் சமாதியில் 'ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்' என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மறைவுக்கு பின்னர் இந்த வாசகத்தை தனது சமாதியில் எழுத வேண்டும் என்று கருணாநிதி முன்கூட்டியே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கருணாநிதியை பாராட்டி சோனியாகாந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தனது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கருணாநிதி சுட்டிக்காட்டிய கடிதத்தின் கல்வெட்டும் அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன.
பசுமையான புல்வெளிகள், பூத்துக்குலுக்கும் பூச்செடிகள், பளபளக்கும் மார்பிள்ஸ் கற்களுடன் திராவிட கட்டிட கலையில் கருணாநிதியின் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. அவரது சமாதியின் பின்புறம் வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் கருணாநிதியின் இந்த தோற்றம் இரவு நேரத்தில் 'லேசர்' மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருணாநிதி சமாதியை சுற்றி பார்த்தவுடன், 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் குளுகுளு ஏ.சி. காற்று மனதை வருடுகிறது. கருணாநிதி எழுதிய புத்தகங்களின் பெயர்கள் 'க' என்ற ஒற்றை எழுத்தில் உள்ளடக்கி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்துதான் 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தின் இலச்சினை ஆகும்.
அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றதும் 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே... ' என்ற கருணாநிதியின் காந்த குரல் வாசகம் பளிச்சென்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அருகே 'தாயின் பாசமும், தனயனின் நேசமும்' என்ற தலைப்பில் கருணாநிதி தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் இருக்கும் புகைப்படம் பெரியளவில் வைக்கப்பட்டுள்ளது.
'கலைஞர் எழிலோவியங்கள்' என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. இதில் கருணாநிதியின் இறுதிப்பயண புகைப்படங்களும், 'அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும் இடம் பெற்றுள்ளது. இது மனதை கலங்க வைக்கின்றன.
மேலும் இந்த அறைக்குள் நுழைந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கருணாநிதி 23.11.1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.12.2021 அன்று பிறப்பித்த அரசாணையும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
'உரிமை வீரர் கலைஞர்' என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிடும் உரிமையை பெற்று தந்து சென்னை கோட்டையில் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு '3 டி' தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது. கம்பீரமாக நின்றபடி தனது குரலில் கருணாநிதியே பேசுவது போன்ற வியப்பு ஏற்படுகிறது.
'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்தவுடன் 'டிஜிட்டல்' தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 'கலைஞரின் சிந்தனை' சிதறல்கள் என்ற பெயரில் பிரமாண்ட அறை ஒன்றும் அமைந்துள்ளது. இதில் 'ஏ.வி.' தொழில்நுட்பத்தில் கருணாநிதி பேசுவது போன்று காட்சி அமைப்புகள் இருக்கின்றன. 'புதிரை வெல் கலைஞர் வழி செல்' என்ற தலைப்பில் கருணாநிதி பற்றிய கேள்விகள் தொடு திரையில் வருகின்றன. சரியான பதிலை சொல்பவர்களை கருணாநிதியே பாராட்டுவது போன்று குரல் ஒலிக்கிறது. கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' உள்பட 8 புத்தகங்களின் தலைப்புகளுடன் 'டிஜிட்டல்' திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த புத்தகத்தை தொட்டாலும், அந்த புத்தகம் பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றுகிறது. இந்த அறையில் 9¼ அடி உயரத்தில் கருணாநிதியின் மெழுகு உருவச்சிலையும் அமைய இருக்கிறது.
'கலையும், அரசியலும்' என்ற தலைப்பில் 79 பேர் அமரும் வகையில் மினி தியேட்டரும் உருவாக்கப்பட்டுள்ளது. 60 அடியில் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கருணாநிதி தனது 14 வயதில் தமிழ் கொடி ஏந்தி இந்தி எதிர்ப்பு போராட்டம், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் அரவணைப்பு, அவருடைய மரணம் வரையிலான வாழ்க்கை வரலாறு 20 நிமிடங்கள் குறும்படமாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதில் அவர் இயக்கிய, வசனம் எழுதிய திரைப்படங்கள், புத்தகங்கள் குறித்த தகவல்களும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற காட்சிகளும் வருகின்றன. இந்த குறும்படம் கருணாநிதியின் புகழையும், சாதனைகளையும் போற்றி பாராட்டும்விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை, வள்ளுவர்கோட்டம், அண்ணா மேம்பாலம், குடிசைமாற்று வாரியம், டைட்டல் பார்க், பாம்பன் பாலம், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, அண்ணா நூலகம், மெட்ரோ ரெயில் போன்ற திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் அருங்காட்சியகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்லும் பாதைகளில் பளிச்சிடுகின்றன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து மெரினா கடற்கரையின் அழகை ரசிக்கும் வகையில் பூங்கா போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்ற தலைப்புகளில் கருணாநிதியின் புகழ் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பறைசாற்றப்பட்டுள்ளது. கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில் 'டிஜிட்டல்' தொழில்நுட்பங்கள் திகட்ட, திகட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.
கருணாநிதியுடன் நேரில் பழகியது போன்ற உணர்வு உண்டாகும் வகையில் இந்த அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தவுடன் நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்துதான் பார்வையிட முடியும். இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும். முன்பதிவு விவரத்தை இங்கு அமைந்துள்ள சேவை கட்டிட அலுவலகத்தில் காட்டினால் கையில் 'டேக்' கட்டி விடுவார்கள். அதன்பின்னர் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக பார்வையிடலாம். கருணாநிதி அருங்காட்சியகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தின் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறையே மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார் ' என்றார்.
- பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுக பள்ளி அருகே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
- சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை ( செவ்வாய்கிழமை) தமிழகம் வருகிறார்.
நாளை மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மதுரை செல்லும் அவர் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த வகையில் குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோல் துத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனையங்கள் அமைத்தல், வடக்கு சரக்கு கப்பல் தளம்-3 எந்திர மயமாக்கல், நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோல் ரூ.550 கோடியில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில்வே தூக்கு பாலத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து, நீர் வழிகள் மற்றும் ஆயூஷ் துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை இணை மந்திரி சாந்தனு தாக்கூர், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இதில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுக பள்ளி அருகே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் நேற்று கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் அது அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பிரதமர் பங்கேற்கும் விழா நடைபெறும் பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
தொடர்ந்து சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை போலவே தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.
- நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜ.க. கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணியை அமைத்து தொகுதி ஒதுக்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை போலவே தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் கிராமத்தில் வேட்பாளர்களை அறிவித்த சீமான் தொடர்ந்து அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அதன்படி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு குழு தலைவர் டி. ராஜேஷ், தஞ்சாவூர் தொகுதிக்கு எம்.இ.ஹிமாயூன் கபீர், மயிலாடுதுறை தொகுதிக்கு பி. காளியம்மாள், நாகப்பட்டினம் தொகுதிக்கு எம். கார்த்திகா, நாகப்பட்டினம் தொகுதிக்கு ஆர். தேன்மொழி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர.

திருச்சி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ள ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு குழு தலைவர் டி. ராஜேஷ் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், ஸ்டெர்லைட், நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பி. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு கூட்டணி என பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது அறிவித்துள்ள 5 வேட்பாளர்களில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அக்கட்சியினுடைய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.
- கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இந்த முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியை கேட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொதுத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாத பிற சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவினை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்துள்ளார்.
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருமாவளவன் பொதுத் தொகுதியின் அவசியத்தை விளக்கி கூறினார்.
ஆனால் தி.மு.க. தரப்பில் சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதியை ஒதுக்க விரும்புகிறது. பொதுத் தொகுதியை தவிர்க்குமாறு வலியறுத்தப்பட்டது. ஆனால் கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தையுடன் 2-வது கட்ட பேச்சு வார்த்தைக்கு இன்னும் அழைப்பு கொடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இன்று மாலையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம் திறப்பு விழா நடைபெறுவதால் நாளை (27-ந்தேதி) பேச்சு வார்த்தைக்கு அழைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
எனவே அக்கூட்டத்தில் 3 தொகுதிகளை கேட்டு பெறுவதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார். தி.மு.க.வும் அவரது கோரிக்கையை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.
- தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம்.
- சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அ.தி.மு.க. அண்ணா பெயரை தாங்கி நிற்கின்ற கட்சி. உங்களுக்கு நாங்கள் அடிமை அல்ல.

நாங்கள் ஒரு தாம்பாளத்தில் 2 கோடி தொண்டர்களை வைத்துள்ளோம். உங்களிடம் போய் அடிமை சாசனம் வாசிக்க தேவையில்லை. தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று முடிவெடுத்தது தான் எடப்பாடி பழனிசாமியின் தைரியம். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமித்ஷா தமிழகம் வந்தாராம் பத்து தொகுதி எங்களிடம் கொடுத்து விடுங்கள். 10 தொகுதி மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கிறோம் என தெரிவித்தாராம்.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என பிரித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வது இ.பி.எஸ். மட்டுமே அமித்ஷா இல்லை. எதிரி மற்றும் துரோகிகளை சமாளித்து மத்தியில் இருக்க கூடியவர்களின் மிரட்டல்களை சமாளித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுகொண்டு எழுந்து வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






