என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூத்துக்குடியில் 28-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள் முழு விபரம்
    X

    தூத்துக்குடியில் 28-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள் முழு விபரம்

    • பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுக பள்ளி அருகே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
    • சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை ( செவ்வாய்கிழமை) தமிழகம் வருகிறார்.

    நாளை மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மதுரை செல்லும் அவர் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார்.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அந்த வகையில் குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதேபோல் துத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனையங்கள் அமைத்தல், வடக்கு சரக்கு கப்பல் தளம்-3 எந்திர மயமாக்கல், நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதேபோல் ரூ.550 கோடியில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில்வே தூக்கு பாலத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

    நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து, நீர் வழிகள் மற்றும் ஆயூஷ் துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை இணை மந்திரி சாந்தனு தாக்கூர், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இதில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்து கொள்கின்றனர்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுக பள்ளி அருகே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் நேற்று கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் அது அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பிரதமர் பங்கேற்கும் விழா நடைபெறும் பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

    தொடர்ந்து சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×