என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- திருச்செந்தூர் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி நாளை மறுநாள் (புதன்கிழமை) தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து நெல்லை வரும் பிரதமர் மோடி, பாளை நீதிமன்றம் எதிரே பெல் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா நெல்லை பாராளுமன்ற தொகுதி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்காக தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அவர் விழா மேடைக்கு செல்கிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் ஜான்ஸ் பள்ளி மைதானத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலையில் ஒரு சில இடங்களில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் சுற்றளவில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், சாலையோர பழக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
விழா மைதானம், ஹெலிகாப்டர் வந்திறங்கும் மைதானம் உள்ளிட்டவை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி நெல்லையில் 10 போலீஸ் சூப்பிரண்டுகள், 14 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக காவல்துறையின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் வருகின்றனர். இதுதவிர மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் மோடி நெல்லைக்கு முதல் முறையாக வருகை தர இருக்கும் நிலையில் விழா மேடைக்கு அருகே உள்ள பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு சென்று சோதனை செய்யப்பட்டது.
- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
- பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டுகிறார்கள்.
இதற்கிடையில் பா. ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பா.ஜனதாவுடன் கூட்டணி பேசி வரும் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் பங்கேற்கவில்லை.
இதுபற்றி கட்சி வட்டாரத்தில் இரு விதமான தகவல்கள் பரவி வருகிறது. அதாவது பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு நாம் கூட்டணியை உறுதிப்படுத்தலாம் என்று இருவரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னொரு தகவல், சிங்கிள் தொகுதி போதாது. குறைந்தபட்சம் இரண்டு தொகுதி வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் 'சீட்' உறுதியான பிறகு செல்லலாம் என்றும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் மோடியை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.
பா.ஜனதா-த.மா.கா. கூட்டணி உறுதியாகி இருப்பதால் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார். அதே போல் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், தமிழருவி மணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
- பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் துரை பிரித்திவிராஜ் (35). இவர் வி.ஏ.ஓ. வாக பணியாற்றி விருப்பு ஓய்வுபெற்றவர்.
தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுப்புற சூழல் அணி பிரிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 23-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடப்பது தெரிய வந்தது. பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தேவி வழக்குப்பதிவு செய்து பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாக்குளம் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் (61) என்பவர் பணம் மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பணத்தையும், பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் தற்போது குறிஞ்சாக்குளத்தில் 2-வது திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
2-வது மனைவியின் மகன் கர்ணன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். தந்தை மாணிக்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் கர்ணன் விரக்தியான மனநிலையில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை திருட்டு வழக்கில் கைதானதால் பட்டதாரி மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.
- மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசனை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக இணைந்துள்ளது.
கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.
மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.
பாரம்பரியம் மிக்க கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் விலங்குகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.
- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான்.
அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக்கூடாது.
ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும்.
பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
- ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி கொளத்தூர் கிராமம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பெரம்பலூர் , திருச்சி, மதுரை, அரியலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்ற பின் வாடிவாசலில் இருந்து திறக்க அனுமதிக்கப்பட்டது.
வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்ட காளைகளை பிடிப்பதற்காக 350 வீரர்கள் களத்தில் இறங்கினர்.
இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அமைச்சர் சிவசங்கரும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆகியோர் பச்சை கொடியை அசைக்க ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
'என்கிட்ட மோதாதே, நான் ராஜாதி ராஜனடா' என்று வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து களத்திற்குள் புகுந்து, எட்டு திசையும் சுற்றி சுழற்றி வீரர்கள் கைகளில் சிக்காமல் எகிறி குதித்தன.
'அட... நானாச்சு நீயாச்சு.... உன் நான் ஒரு கை பாக்காம விடமாட்டேன்' என்று சிலிர்த்து வந்த காளையை லாவகமாக ஏறி தங்களது வீரத்தை காளையர்கள் நிரூபித்தனர். இதனை கண்ட பார்வையாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி கொளத்தூர் கிராமம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சப்-கலெக்டர் கோகுல், பிரபாகரன் எம்.எல்.ஏ., ஆலத்தூர் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்.
- பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாலை உடனான சந்திப்பிறகு பிறகு அவர் கூறியிருப்பதாவது:-

பாஜக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்கிறது.
நாளை பிரதமர் மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.
- சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில நிதி காப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த. அமிர்த குமார், தலைமைச் செயலக பணியாளர் சங்க மேனாள் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந. ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் அகில இந்திய தலைவர் கே. கணேசன்,
தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வே.மணிவாசகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவி சு. தமிழ்ச்செல்வி, தமிழ் மாநில அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மு. செ. கணேசன், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணி தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெ.சரவணன், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்க மாநிலத் தலைவர் எஸ் மதுரம், தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஜெய.துரை, தமிழ்நாடு உயர் கல்வி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் டாக்டர்.இரா. மணிகண்டன், அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சு.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
10 அம்சக் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கொடுத்தும், அதன் மீது கடந்த சட்டமன்ற தொடரில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால் லட்சக்கணக்கான பணியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.
எனவே அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி பணியாளர்களுடைய பல லட்சம் வாக்குரிமை உள்ள குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 3-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- பிரதமரின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
- கடந்த 3 நாட்களாக கருப்பாயூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.
மதுரை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு 'என் மண், என் மக்கள்' என்ற யாத்திரையை தொடங்கினார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்ட அவர் நாளை (27-ந்தேதி) திருப்பூரில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதனை தொடர்ந்து பல்லடம் அருகே உள்ள மாதாப்பூரில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்காக நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சூலூர் விமானப் படை தளத்திற்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடக்கும் மாதாப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்கிறார்.
கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலை 5 மணி அளவில் பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வரும் மோடி பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் கருப்பாயூரணி அருகே உள்ள வீரபாஞ்சான் டி.வி.எஸ். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்தபின் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் அங்கு இரவு தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) காலை 8.40 மணிக்கு தனியார் ஓட்டலில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமரின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை விமான நிலையம், மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள தனியார் பள்ளி இடம், தங்கும் ஓட்டல் ஆகியவை மத்திய போலீஸ் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் நாளை இரவு மோடி தங்க உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த ஓட்டலுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஆலோசனையின் பேரில் டி.ஐ.ஜி. ரம்யா பாரதி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நகர் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு கருப்பாயூரணி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் சாலை மார்க்கமாக பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்ல இருப்பதால் வழி நெடுகிலும் பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வழியில் உள்ள கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களாக கருப்பாயூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். பசுமலை தனியார் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் அதிகாரிகள் நேற்று மாலை காரில் சென்று ஒத்திகை பார்த்தனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டல், கருப்பாயூரணி டி.வி.எஸ். பள்ளி மற்றும் பிரதமர் பயணிக்கும் சாலை, மாநகர, மாவட்ட எல்லைகளில் டிரோன்கள் பறக்க நாளை மற்றும் மறுநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் மறுநாள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு பிரிவு தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மொத்தத்தில் 5 ஆயிரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரெயில் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
- ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதனால் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை 20 நிமிடம் காலதாமதமானது.
மேலும் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரெயிலும் 40 நிமிடம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றன.
இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.
அதன் பின்னர் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதன் வழித்தடத்தில் இயக்கப்பட்டன.
இதனால் ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
- அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் காலங்காலமாய் தொடர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
இதற்கிடையே எல்லை தாண்டியதாக கைதாகும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் இலங்கை அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 2 சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளையும் அரசுடமையாக்கி வருகின்றனர்.
இதனை கண்டித்தும், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 10 படகுகளை மீட்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதனைதொடர்ந்து, நேற்று ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், அதற்கான பணியை தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதியளித்தார். இதனை ஏற்று மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனைதொடர்ந்து, இன்று காலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 7 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
- சிறப்பு கோர்ட்டு விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும்.
- தமிழக அமைச்சர்களில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் 3-வது அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார்.
சென்னை:
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தபோது, வீட்டுவசதி வாரிய வீடு ஒன்றை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கீடு செய்தார்.
அதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இதையடுத்து நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்தார்.
வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சிறப்பு கோர்ட்டு அந்த விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டும். ஐ.பெரியசாமி கோர்ட்டில் நேரில் ஆஜராகி ரூ.1 லட்சம் பிணை செலுத்தி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு அளித்தார்.
தமிழக அமைச்சர்களில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி இருக்கும் 3-வது அமைச்சராக ஐ.பெரியசாமி உள்ளார். இதற்கு முன்பு செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது கோர்ட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியை இழந்தனர். இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட இருப்பது அவருக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.
இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார்.
இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத்தடை விதித்துள்ளது.






