என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சின்னம்மாள் என்பவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
    • எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி கான்வெண்ட் வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கையில் மண்எண்ணெய் கேன் கொண்டு வந்த அவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சின்னம்மாள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் நஞ்சப்பனுக்கு 2 மனைவிகள். எனக்கு குழந்தை இல்லை. எனது கணவர் இறந்து விட்டார். எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது. அதனை முதல் மனைவி அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். எனவே வீடு, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
    • போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே கொளத்தூர் கோட்டை மடுவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமிகளை ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நேற்று அந்த இளைஞர்களை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மயில்சாமி (வயது 22) சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், சேது (20) தனுஷ் (24) ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் குமார், ரத்தினகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேட்டூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மயில்சாமி, சேது, தனுஷ், ஹரீஸ் ஆகிய 4 இளைஞர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கருங்கல்லூர், காவேரிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
    • தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக ஆசனூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலை அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மாவள்ளம் பிரிவு அருகே சாலை ஓரத்தில் இருந்த தைய மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்திற்கு பிறகு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வளாகத்தில் தூய்மை பணி மற்றும் காவல் பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் பலர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தினக்கூலி 725 ரூபாயை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.
    • அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனி மொழி எம்.பி. தலைமையிலான11 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்று வருகின்றனர்.

    இந்த குழுவில் கனிமொழியுடன் தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே. எஸ்.இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., தி.மு.க. மாணவரணிச் செய லாளர் சி.வி.எம்.பி.எழிலர சன் எம்.எல்.ஏ., தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.

    நேரயடியாக மனுக்களை பெற்றதுடன் தொலைபேசி வாயிலாக 18,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளும், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4,000-க்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மக்களை சந்தித்தனர்.

    அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் பரிந்துரைகளை அளித்தனர்.

    வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வி யாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை வழங்கினார்கள். இவைகளை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி. உங்களது கோரிக்கைகளை தீர்த்து வைக்க தேர்தல் அறிக்கையில் இவற்றை தொகுத்து இடம் பெற செய்வோம் என்று கூறினார்.

    • வழக்கை விசாரித்த ஐகோர்ட் குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி அதை ரத்து செய்தது.
    • நிலத்தரகர் கொலை வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை விடுதலை செய்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பளித்தார்.

    சென்னை:

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன் நிலத்தரகர் தொழில் செய்துவந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறு தொடர்பான பிரச்சனையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொளத்துார் போலீசார் சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

    இதற்கிடையே, வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனின் தூண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய புவனேஸ்வரனின் தந்தை சிவா, குற்றப்பத்திரிகையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால், குற்றப்பத்திரிகையை ரத்துசெய்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட் குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய சி.பி.ஐ. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த 2020 முதல் நடந்து வந்த இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பிற்காக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நிலத்தரகர் கொலை வழக்கில் இருந்து தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை விடுதலை செய்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    • ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.
    • முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    முக்கூடல்:

    காஞ்சிபுரம் நாகதீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை மாணிக்கம். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு மோகன்ராஜ், நவீன் (வயது 23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

    துரை மாணிக்கம் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக ரெயிலில் நேற்று காலையில் நெல்லை வந்தார். பின்னர் அவர்கள் பாபநாசம் கோவிலுக்கு சென்று விட்டு, மாலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை அண்ணன் மோகன்ராஜ் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய நவீனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நவீன் உடலை தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மதியம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நவீன் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் மகன் நீரில் மூழ்கி மாயமானதால் அவரது பெற்றோர் கரையில் அமர்ந்து கதறி அழுத சம்பவம் கண்கலங்க செய்தது.

    • காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
    • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்றது.

    பாகலூர் பஸ் நிலையத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினருமான ரவிகுமார் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல். தமிழகத்தில், நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்தார். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. சாதாரண தொண்டராகிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்ப வேண்டும். அவர், உங்களில் ஒருவர். நம்மில் ஒருவர். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தர வேண்டும்.

    தமிழகத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம்... என எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மட்டும்தான் போட்டியாக இருக்கும். காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேகதாது அணை கட்டுவது பயனற்றது. அங்கு, அணை கட்டாமலேயே பெங்களூரு மாநகரத்திற்கு தேவையான 18 டிஎம்சி தண்ணீரை கே.ஆர்.எஸ். அணையிலிருந்து எடுத்துக் கொள்ளட்டும். அதற்கு, அதிமுக சார்பில் எந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் அதிமுகவின் கருத்து மற்றும் கொள்கையாகும். மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார். மக்கள் இதை நம்பலாம். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமைக்கழக பேச்சாளர் சாரதா ஆகியோர் கூட்டத்தில் பேசினர். இதில், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், பாகலூர் ஊராட்சி தலைவர் வி.டி. ஜெயராமன் நன்றி கூறினார்.

    • போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.
    • செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.

    போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.

    இதற்கு காரணம், இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதால் தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது.

    இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக டெல்லியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்து உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

    மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வரும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், தி.மு.க.வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளார். அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவர் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்ந நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப்பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற தேர்தலில் பண நாயகத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்திற்கு அடிய பணிய வேண்டும்.
    • சபாநாயகர் சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.

    நெல்லை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சமத்துவ மக்கள் கட்சியின் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஒரு டைரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு மண்டே பெட்டிஷன் உள்பட பல்வேறு வழிகளில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

    கூட்டணியில் சேர்வது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அ.தி.மு.க.வுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பா.ஜனதாவை சேர்ந்தவர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியா? அல்லது பா.ஜனதா கூட்டணியா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்.


    இந்த கூட்டணி முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு முடிவு எடுக்கப்படும். நெல்லையில் நடந்த கூட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என கட்சி தொண்டர்கள் வலியுறுத்தினர்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். அதுவரை காத்திருக்க வேண்டும். வருகிற தேர்தலில் பண நாயகத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்திற்கு அடிய பணிய வேண்டும்.

    சபாநாயகர் சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சபாநாயகர் போல் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆலோசனை கூட்டத்தில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
    • 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் துணைச் செயலாளர்கள் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை அன்பகம், அண்ணா மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடுதல், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள்

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாளை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழா பல்லடத்தில், பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.

    இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    "என் மண் என் மக்கள் யாத்திரை" தி.மு.க. அரசின் ஊழல்களையும், இயலாமையையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளையும் எடுத்துச்செல்லும் யாத்திரையாக அமைந்தது. 234 தொகுதியிலும் யாத்திரை முடிந்துள்ளது.

    தமிழகத்தில் கிராமம் தோறும் கஞ்சா ஊடுருவி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தி.மு.க. நிர்வாகியே ரூ.3000 கோடி அளவிற்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

    இந்த போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கத்தை சொல்ல வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றார்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள். மேலும் யார் யார் வருவார்கள் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பாருங்கள்.

    இன்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×