என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கீழடியில் 2 கட்ட அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும்
    • மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கீழடியில் 2 கட்ட அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரபாகர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை.

    முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது.

    கீழடியில் தற்போது 4 முதல் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இதுவரை வெளியிடப்படவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே, கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

    • பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
    • மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும்.

    சென்னை:

    பிரபல வில்லன் நடிகரான மன்சூர்அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.

    கட்சியின் முதல் மாநாடு பல்லாவரத்தில் நடந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * வாக்கு இயந்திரங்களை ஒழித்து வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    * மது, கஞ்சா, போதைப் பொருள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மன்சூர்அலிகான் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டி யிடுவது பற்றி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். மின்னணு எந்திர வாக்குப்பதிவு மூலம் 2 முறை மாப்பிள்ளை ஆகிவிட்டார் பிரதமர் மோடி. 3-வது முறையும் மின்னணு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தி மாப்பிள்ளை ஆக பார்க்கிறார்.

    எந்திர வாக்குப்பதிவில் மோசடி நடைபெறுகிறது. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். இந்தியாவிலும், நைஜிரியாவிலும் தான் எந்திர வாக்குப்பதிவு உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை.

    இந்தியாவை தமிழன்தான் ஆள வேண்டும். தமிழகத்தில் நெசவு தொழிலாளர்கள் பலர் ஒரு கிட்னியுடன் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வாதாரத்திற்காக ஒரு கிட்னியை விற்று விட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.

    இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் தனியாக அறக்கட்டளை தொடங்கி வட்டியில்லாத கடன் வழங்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 28-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    28-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • ஜாபர் சாதிக் சென்னை புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வருகிறார்.
    • 3 தென் மாநிலங்களில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பதுங்கி இருக்கிறாரா என்று தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அனைத்து மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதாக அந்த நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். அவர்கள் மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினர். கடந்த 15-ந்தேதி நடந்த இந்த சோதனையில் 50 கிலோ சூடோ பெட்ரின் போதைப்பொருள் சிக்கியது.

    இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ அளவில் சூடோ பெட்ரின் போதைப் பொருளை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் (வயது 36) என்பவர் முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். சென்னை புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வருகிறார். பிரபல அசைவ ஓட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் நடத்தி வருகிறார். அதன்பிறகு சினிமா தயாரிப்பாளராக மாறிய இவர் மங்கை என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

    தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குக்கு தமிழ் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் பலர் உள்ளனர். அரசியல் களத்திலும் அவர் பிரபலமாக நபராக இருந்து வந்துள்ளார். பல முக்கிய பிரமுகர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் பல படங்களை தயாரித்து வந்துள்ளார். கைதான 3 பேரிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலுக்கு தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் முக்கிய மூளையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

    மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்த பிரிவானது தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் போதைப்பொருளை தடுத்து வருகிறார்கள்.

    டெல்லியை சேர்ந்த அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் தமிழகத்தை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 தென் மாநிலங்களில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பதுங்கி இருக்கிறாரா என்று தேடி வருகிறார்கள்.

    மேலும் அவர் சென்னையில் உள்ள நண்பர்கள் வீட்டில் பதுங்கி இருக்கலாமா என்றும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரது செல்போன் எண் மூலமாக அவர் யார் யாருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும் துப்பு துலக்குகிறார்கள். மேலும் அவர் நீண்ட நேரமாக யாருடன் பேசியுள்ளார் என்பது பற்றிய தகவல்களையும் திரட்டி வருகிறார்கள். சர்வதேச அழைப்பில் யாரிடமாவது பேசியுள்ளாரா என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    போதைப்பொருள் கடத்தலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை தீவிரம் அடையும் பட்சத்தில் ஜாபர் சாதிக் உள்பட அவரது கூட்டாளிகள் மேலும் பலர் டெல்லி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மன் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

    • 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரெயில்கள் என தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக உள்ள திருவள்ளூரில் சிறப்பு பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரெயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    இதில்முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் கோட்டத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.28.82 கோடியில் மறு சீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதில் புதிய ரெயில் நிலையக் கட்டிடம், நடை மேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைப்பு, ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதி, 12 மீட்டர் அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் வருகிறது. மேலும் நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் அளிக்க திரைகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகாரணமாக ரெயில் நிலைய முகப்பு வழியாக பயணிகளை அனுமதிக்க வில்லை. சுரங்கப்பாதை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பயணச் சீட்டு வழங்கும் இடம் நடை மேடை 1-ல் உள்ளது. அங்கும் பணிகள் நடை பெற்று வருவதால் பயண சீட்டை வாங்க பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரெயில்நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளன.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று 2-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. குழு தலைவர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.

    20 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி., நிருபர்களை சந்தித்தார்.

    40 தொகுதிகளிலும் தி.மு.க. அணி வெற்றி பெறும் என்பதை தமிழ்நாட்டின் கிராமப்புற நகர்ப்புற கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    அதன் அடிப்படையில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு 2-வது கட்டமாக நாங்கள் வந்தோம். பேச்சுவார்த்தை மிகமிக சுமூகமாக நடைபெற்றது. நல்ல முறையில் திருப்தி அளிக்கிற வகையில் பேச்சு வார்த்தை நடந்தது.

    நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம். அவர்கள் பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருகிற 3-ந் தேதி வர உள்ளேம். அப்போது தொகுதி உடன் பாடு ஏற்பட்டுவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்கனவே திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகள் தருவதாக கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது கூடுதலாக ஒரு தொகுதி கேட்பதால் இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாக வில்லை.

    • முதல்கட்டமாக பொடவூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் முதல்கட்டமாக பொடவூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நில எடுப்பு அலுவலகத்தை டிராக்டரில் சென்று முற்றுகையிட கிராமமக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை ஏகனாபுரம் மற்றும் பொடவூர் கிராம மக்கள் ஏராளமானோர் ஏகனா புரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து டிராக்டரில் சென்று நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.
    • கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. நாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அவற்றிற்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்தாலும் அதன் எண்ணிக்கை குறையவில்லை. அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.

    குறிப்பாக ராயபுரம், கொடுங்கையூர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றன. இரவு 7 மணிக்கு மேல் சாலை மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி, விரட்டி கடிக்க பாய்கின்றன.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது. இதனால் குப்பை கிடங்கை சுற்றி உள்ள இடங்களில் நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளன. கொடுங்கையூர், எழில் நகர், ஆர்.ஆர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், புளியந்தோப்பு, பெரம்பூர், ஜமாலியா நகர், ஹைதர்கார்டன், எஸ்.பி.ஐ. ஆபிசர் காலனி மற்றும் பட்டாளம் பகுதிகளில் நாய்கள் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு காணப்படுகிறது. இரவு நேரத்தில் செல்பவர்களை குறைந்தது 6 நாய்களுக்கு மேல் கூட்டமாக துரத்துகின்றன. இதனால் இரவு நேரத்தில் வெளியே செல்லவும், பணிமுடிந்து வீட்டிற்கு வரவும் பொது மக்கள் அச்சம் அடையும் நிலை உள்ளது.

    இதேபோல் சூளை, டி.கே.முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை 10 முதல் 20 நாய்கள் வரை படையெடுத்து வந்து மிரட்டுகின்றன.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ராயபுரம் மண்டலத்தில் 90 சதவீதம் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிந்தது. வழக்கமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை தெருநாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த கணக்கெடுப்பு கடந்த 2022-ம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்படவில்லை. ஆனால் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு 2100-ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை 2023-ம் அண்டு 3900 ஆக உயர்ந்து உள்ளது.


    இதைத்தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் உள்ள தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜ் கூறும்போது, மாநகராட்சியில் தற்போது 80 நாய் பிடிப்பவர்களும், 15 கால்நடை டாக்டர்களும் உள்ளனர். மண்டலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து உறுதியான தெருநாய்களின் எண்ணிக்கை பற்றி தெரியாமல் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

    எனவே தெருநாய்கள் பற்றி விரைவில கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ராயபுரத்தில் மட்டும் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடந்து உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த கணக்கெடுப்பு மற்ற மண்டலங்களில் நடைபெறவில்லை. கொடுங்கையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அங்குள்ள குப்பைக் கிடங்கு தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் இடமாக மாறி உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. பெரும்பாலான நாய்கள் தெரு ஓரங்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளில் உணவு தேடுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.

    இது தொடர்பாக மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை தெருநாய்கள் தொடர்பாக 5 மண்டலங்களில் மொத்தம் 784 புகார்கள் வந்துள்ளன. 924 நாய்கள் பிடிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்பட்டு உள்ளன. புயல் மற்றும் அதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் காரணமாக தெரு நாய்கள் பற்றிய கணக்கெடுப்பு தாமதமானது. விரைவில் தெருநாய்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறும். பொதுமக்கள் தங்கள் புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் மீது இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

    • தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
    • போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு தேர்வுகளுக்கு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பவானி (வயது 19). இவர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    பவானியின் தாய், தந்தையர் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். இதனால் பவானி பெரியப்பா, பெரியசாமி மற்றும் உறவினர்கள் ஆதரவில் இருக்கிறார்.

    இந்த நிலையில் பவானி மற்றும் தனபால் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவரம் தனபால் வீட்டுக்கு தெரிந்து, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆதரவற்ற பெண்ணை தனபால் கரம்பிடிப்பதை அறிந்த அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். இதை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு அந்த பகுதியில் நின்ற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வந்த பவானிக்கு கவுன்சிலர் வசுமதி பிரபு படிப்பு உதவி அளித்து வந்த நிலையில். தற்போது திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் உள்ளிட்ட செலவுகளையும் ஏற்று உதவி செய்தார் .

    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
    • நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (வயது63). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இவரது மனைவி நிர்மலா. இவர்களது ஒரே மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.

    இன்று காலை கணவன்-மனைவி இருவரும் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரில் மகளை விட்டு விட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை ரவிக்குமார் ஓட்டினார். மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் ரவிக்குமாரும், நிர்மலாவும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான ரவிக்குமார் 1991-96-ம் ஆண்டில் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவரது மனைவி நிர்மலாவும் அதே ஆண்டில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். ரவிக்குமாரின் சொந்த ஊர் மணலிபுதுநகர் அடுத்த நா.பாளையம் ஆகும். அவர் நெஞ்சுவலிக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளார். ரவிக்குமார் கடைசியாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடப்பெரும்பாக்கத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மின்பாதை அமைக்கும் போது விவசாய நிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அழித்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும் அதிகளவில் சேதப்படுத்தியுள்ளனர்.
    • மின்பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அப்பியம்பட்டி கிராம விவசாயிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்பாதை மூலம் தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல பாதை அமைத்தனர். விவசாயிகளின் அனுமதியின்றி விவசாய நிலங்களை பாதிக்கும் வகையிலும், அரசு புறம்போக்கு நிலத்திலும், நீர், நிலை ஓடை பகுதிகளிலும் மின் கம்பங்கள் அமைத்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக மின்பாதையினை அமைத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    மேலும் மின்பாதை அமைக்கும் போது விவசாய நிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அழித்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும் அதிகளவில் சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக காற்றாலை மின்பாதையினை அமைப்பதால் பாதைகள் தடைபட்டு விவசாய நிலங்களுக்கு விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்பாதையினை மாற்றி அமைத்து விவசாயத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 4-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அப்பியம்பட்டி கிராம விவசாயிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

    • கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஒடி விட்டனர்.
    • வனச்சரக அலுவலர் துரையை விசாரணை செய்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட பரிகம் காப்புக்காடு, வடக்கு வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட மலையப்ப நகர் காட்டுவளவு சரகத்தில் கடந்த 4 -ம் தேதி காலை சுமார் 5.30 மணிக்கு மேல் பூரிகள் பகுதியைச் சேர்ந்த இராமசாமி மகன் துரை(45), என்பவர் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கறியாக வெட்டிக்கொண்டிருக்கும் போது அப்பகுதியில் தருமபுரி வனச்சரக பணியாளர்கள், வனப்பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஒடி விட்டனர்.

    பின்னர் தருமபுரி வனச்சரக அலுவலர் துரையை விசாரணை செய்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

    அதன் பேரில் மாவட்ட வன அலுவலர், அப்பல்ல நாயிடு உத்தரவுபடி வன உயிரின குற்ற வழக்கு பதியப்பட்டு இணக்க கட்டணமாக மேல் பூரிக்கல் பகுதியைச் சேர்ந்த துரை (45) என்பவருக்கு, 4 லட்சம் ரூபாயும், முனிய கவுண்டர் மகன் பாக்யராஜ் (38) என்பவருக்கு 35 ஆயிரம் ரூபாயும், மேல் பூரிகள் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் தமிழ்ச்செல்வன் (45) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசல மகன் பெரியசாமி (42) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், கம்பம் பட்டி பகுதியைச் சார்ந்த சுந்தர்ராஜன் மகன் சதீஷ்குமார் (32) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், சருகு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சித்தநாதன், என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்த வீரசிம்மன் (50), தலை கொண்டான் மகன் ஜெய்சங்கர் (29) ஆகிய இருவருக்கும் தால 10 ஆயிரம் ரூபாய் என 8 நபர்களிடமிருந்து விலங்கினை வேட்டையாடிய குற்றத்திற்காக இணக்க கட்டணமாக மொத்தம் ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

    ×