search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 4-ம் நாளாக போராட்டம்
    X

    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 4-ம் நாளாக போராட்டம்

    • மின்பாதை அமைக்கும் போது விவசாய நிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அழித்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும் அதிகளவில் சேதப்படுத்தியுள்ளனர்.
    • மின்பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அப்பியம்பட்டி கிராம விவசாயிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்பாதை மூலம் தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல பாதை அமைத்தனர். விவசாயிகளின் அனுமதியின்றி விவசாய நிலங்களை பாதிக்கும் வகையிலும், அரசு புறம்போக்கு நிலத்திலும், நீர், நிலை ஓடை பகுதிகளிலும் மின் கம்பங்கள் அமைத்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக மின்பாதையினை அமைத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    மேலும் மின்பாதை அமைக்கும் போது விவசாய நிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அழித்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும் அதிகளவில் சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக காற்றாலை மின்பாதையினை அமைப்பதால் பாதைகள் தடைபட்டு விவசாய நிலங்களுக்கு விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்பாதையினை மாற்றி அமைத்து விவசாயத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 4-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அப்பியம்பட்டி கிராம விவசாயிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×