search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-விற்கும், தி.மு.க விற்கும் மட்டும்தான் போட்டி: தம்பிதுரை பேச்சு
    X

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-விற்கும், தி.மு.க விற்கும் மட்டும்தான் போட்டி: தம்பிதுரை பேச்சு

    • காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
    • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்றது.

    பாகலூர் பஸ் நிலையத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினருமான ரவிகுமார் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல். தமிழகத்தில், நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்தார். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. சாதாரண தொண்டராகிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்ப வேண்டும். அவர், உங்களில் ஒருவர். நம்மில் ஒருவர். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தர வேண்டும்.

    தமிழகத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம்... என எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மட்டும்தான் போட்டியாக இருக்கும். காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேகதாது அணை கட்டுவது பயனற்றது. அங்கு, அணை கட்டாமலேயே பெங்களூரு மாநகரத்திற்கு தேவையான 18 டிஎம்சி தண்ணீரை கே.ஆர்.எஸ். அணையிலிருந்து எடுத்துக் கொள்ளட்டும். அதற்கு, அதிமுக சார்பில் எந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் அதிமுகவின் கருத்து மற்றும் கொள்கையாகும். மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார். மக்கள் இதை நம்பலாம். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமைக்கழக பேச்சாளர் சாரதா ஆகியோர் கூட்டத்தில் பேசினர். இதில், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், பாகலூர் ஊராட்சி தலைவர் வி.டி. ஜெயராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×