search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

    • ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
    • ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி கொளத்தூர் கிராமம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பெரம்பலூர் , திருச்சி, மதுரை, அரியலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்ற பின் வாடிவாசலில் இருந்து திறக்க அனுமதிக்கப்பட்டது.

    வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்ட காளைகளை பிடிப்பதற்காக 350 வீரர்கள் களத்தில் இறங்கினர்.

    இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.


    ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அமைச்சர் சிவசங்கரும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆகியோர் பச்சை கொடியை அசைக்க ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    'என்கிட்ட மோதாதே, நான் ராஜாதி ராஜனடா' என்று வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து களத்திற்குள் புகுந்து, எட்டு திசையும் சுற்றி சுழற்றி வீரர்கள் கைகளில் சிக்காமல் எகிறி குதித்தன.

    'அட... நானாச்சு நீயாச்சு.... உன் நான் ஒரு கை பாக்காம விடமாட்டேன்' என்று சிலிர்த்து வந்த காளையை லாவகமாக ஏறி தங்களது வீரத்தை காளையர்கள் நிரூபித்தனர். இதனை கண்ட பார்வையாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி கொளத்தூர் கிராமம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    சப்-கலெக்டர் கோகுல், பிரபாகரன் எம்.எல்.ஏ., ஆலத்தூர் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×