search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்தில் மதுரை
    X

    பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்தில் மதுரை

    • பிரதமரின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த 3 நாட்களாக கருப்பாயூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.

    மதுரை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு 'என் மண், என் மக்கள்' என்ற யாத்திரையை தொடங்கினார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்ட அவர் நாளை (27-ந்தேதி) திருப்பூரில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதனை தொடர்ந்து பல்லடம் அருகே உள்ள மாதாப்பூரில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சூலூர் விமானப் படை தளத்திற்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடக்கும் மாதாப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்கிறார்.

    கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலை 5 மணி அளவில் பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வரும் மோடி பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் கருப்பாயூரணி அருகே உள்ள வீரபாஞ்சான் டி.வி.எஸ். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்தபின் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் அங்கு இரவு தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) காலை 8.40 மணிக்கு தனியார் ஓட்டலில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.


    பிரதமரின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை விமான நிலையம், மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள தனியார் பள்ளி இடம், தங்கும் ஓட்டல் ஆகியவை மத்திய போலீஸ் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் நாளை இரவு மோடி தங்க உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த ஓட்டலுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஆலோசனையின் பேரில் டி.ஐ.ஜி. ரம்யா பாரதி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நகர் போலீஸ் கமிஷனர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாலை 6 மணிக்கு கருப்பாயூரணி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் சாலை மார்க்கமாக பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு செல்ல இருப்பதால் வழி நெடுகிலும் பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வழியில் உள்ள கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக கருப்பாயூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். பசுமலை தனியார் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் அதிகாரிகள் நேற்று மாலை காரில் சென்று ஒத்திகை பார்த்தனர்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டல், கருப்பாயூரணி டி.வி.எஸ். பள்ளி மற்றும் பிரதமர் பயணிக்கும் சாலை, மாநகர, மாவட்ட எல்லைகளில் டிரோன்கள் பறக்க நாளை மற்றும் மறுநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் மறுநாள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    தேசிய பாதுகாப்பு பிரிவு தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மொத்தத்தில் 5 ஆயிரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    Next Story
    ×