என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

    ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,

    2 வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • தி.மு.க.வை அழிப்பேன் என்று கூறியவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள்.
    • மத்திய சென்னையில் தயாநிதி மாறனை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழ் நாட்டிலேயே தங்கி பிரசாரம் செய்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா வெற்றி பெறாது. பிரதமர் மோடி மட்டுமல்ல அவரது தாத்தா வந்தாலும் தி.மு.க.வை தொட்டுப் பார்க்க முடியாது.

    70 ஆண்டுகளாக தி.மு.க.வை அழிப்பேன் என்று கூறியவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். பிரதமர் மோடி 2 நாட்கள் தமிழகத்திலேயே தங்கி வாயிலேயே வடை சுட்டு இருக்கிறார்.

    மத்திய சென்னையில் தயாநிதி மாறனை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் கோவிலுக்கு செல்வார்கள். ஆனால் உதயசூரியனுக்கு ஓட்டு போடும் அளவுக்கு தெளிவானவர்கள்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.
    • சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே நாய்களை கொன்று சாப்பிட்டு சுற்றித்திரியும் சிறுத்தை, ஊருக்குள் புகுந்து ஆட்டை கவ்வியதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம் மதனகிரி பகுதியில், முனீஸ்வரசாமி கோவிலையொட்டி, சனத்குமார நதி ஓடுகிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தற்போது போதிய நீரோட்டமின்றி, வறண்டு புதர்மண்டி கிடக்கிறது.

    இந்நிலையில், கோவில் பின்புறம் சனத்குமார நதியின் கரையில், கடந்த 4 மாதங்களாக சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்து கொண்டு, அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் அருகில் உள்ள தெரு நாய்களை அடிக்கடி கவ்விக் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால், கிராம மக்கள் பீதிக்குள்ளான நிலையில், தேன்கனிகோட்டை வனத்துறையினர், கூண்டு வைத்து, சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர்.

    ஆனால், சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பண்ணையில் செயல்படும் தனியார் ஓட்டலில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக வரும் நாய்களை கடித்து தின்றவாறு, அப்பகுதியில் சிறுத்தை முகாமிட்டதை கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.

    இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தை தப்பியதால், சலிப்படைந்த வனத்துறையினர், கடந்த சில நாட்களாக தேடும் பணியை கைவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மாலை, அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த அடவிசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி என்பவரின் ஆட்டை சிறுத்தை கவ்வியுள்ளது. அதனைக் கண்டு அவ்வழியாக சென்ற பெண் கூச்சலிட்டு உள்ளார். இதனால், ஆட்டை விட்டு விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு துரைசாமி தகவல் தெரிவித்தார். இதன்பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்குள் பாறை இடுக்குகளில் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது. இன்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்து தின்றுள்ளதாவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, நவீன கூண்டு அமைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
    • ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியும் நடந்தது.

    சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர். ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு இன்று முதல் ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

    தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று அவர் கூறினார்.

    • குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரிநகரில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் திடீரென அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆறுமுத்தாம்பாளையம் - திருப்பூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

    • பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் சுக்கம்பட்டியை அடுத்த கோனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 42). விவசாயி. இவருக்கு ஏற்காடு அடிவாரத்தில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகிறார். இதனால் மாதையன் தினமும் காலையில் தோட்டத்திற்கு செல்வது வழக்கம்.

    வழக்கம்போல் இன்று காலை 7 மணிக்கு அவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு குடத்தை எடுத்துக்கொண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் உள்ள கிணறு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த காட்டெருமை மாதையனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் தொடை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காட்டெருமையை விரட்டி விட்டு படுகாயம் அடைந்த மாதையனை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அதன் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்து மாதையன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீராணம் போலீசுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், சேர்வராயன் வனச்சரகர் பழனிவேல் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே காட்டெருமை முட்டி பலியான மாதையன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நிவாரணம் தொகை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. பலியான மாதையனுக்கு சரஸ்வதி (40) என்ற மனைவியும் புவனேஸ்வரன் (13), நவனேஸ்வரன் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    • அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
    • எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் சேர கட்சிகள் தயாராக உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    செல்வப்பெருந்தகையின் கருத்துக்களை பார்த்தால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. அதற்காக நாங்கள் யாரையும் எங்கள் கூட்டணிக்கு வருமாறு கெஞ்சவில்லை.

    எங்களுக்கு பயந்தே தி.மு.க. தங்கள் கூட்டணியில் அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. உடனே ஒப்பந்தம் செய்து, உடனே கையெழுத்து போட்டு தொகுதி உடன்பாட்டை வெளியிடுகிறார்கள். இதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்னவென்றால் அவர்களை விட்டால் அ.தி.மு.க.வுக்கு வந்து விடுவார்கள் என்பதால்தான்.

    எனவே எங்களுக்கு பயந்தே தொகுதி பங்கீட்டை அவசர அவசரமாக முடிக்கிறார்கள். இதனால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.

    தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படுமா? அதற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும். யார்-யார் எந்தெந்த கூட்டணிக்கு செல்வார்கள் என்பது இன்னும் 10 நாளில் தெரியும்.

    அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் சேர கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால் எந்தெந்த கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரும் என்பதை இந்த நேரத்தில் சொல்வது சரியாக இருக்காது. எங்கள் தலைமையிலான கூட்டணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது நிச்சயமாக இன்னும் 10 நாளில் தெரியும். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதை பொதுச்செயலாளர் அறிவிப்பார்.

    தி.மு.க. அரசு எங்களுக்கு பிடிக்காத அரசு. தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசு. தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. வண்டலூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை. அவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் போதை, வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டது.

    மத்தியில் யானை பசிக்கு சோளப்பொரி போல தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்கிறது. தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. ஆனால் வட மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி கொடுக்கிறது.

    மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறது. மத்திய அரசு வரிப்பகிர்வு என்பதை அனைத்து மாநிலங்களுக்கும் சீராக வழங்க வேண்டும்.



    போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர்சாதிக் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாபர் சாதிக்கை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார்.
    • பிரதமர் தலைமையிலான பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது பா.ஜனதா.

    பிரதமர் தலைமையிலான பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கரூர் அல்லது கோவை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. நேற்று நடந்த மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி விட்டது.
    • ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், 5 வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகி நிற்கின்றனர்.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டங்கள் எந்தத் தடையும் இல்லாமல் தொடருகின்றன. இடையில் சில காலம் ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தப்பியிருந்த இளைஞர்கள் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி முதலில் பணத்தையும், பின்னர் விலைமதிப்பற்ற உயிரையும் இழந்து வருகின்றனர்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்னும் ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை. அதனால் தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி விட்டது.

    ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மாம்பட்டி கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
    • தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், "1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு வருகிறது.

    இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன்.

    பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    இதையடுத்து, ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.

    மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • திடீரென அந்த கும்பல் ஆராமுதனின் கார் மீது வெடிகுண்டுகளை வீசியதும் இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கி ஓட்டை விழுந்தது.
    • கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    ஈரோடு:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆரா முதன் (வயது 54). இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். தற்போது காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

    இந்நிலையில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பெருமாள் கோயில் எதிரே காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு தனது காரில் ஆராமுதன் சென்றார்.

    பின்னர் காரில் இருந்து இறங்கிய ஆராமுதன் அவருடன் வந்த 2 பேருடன் சாலை ஓரத்தில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது காரில் வேகமாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆராமுதனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். மேலும் அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆராமுதனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆராமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற த்தில் இக்கொலை தொட ர்பாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி பிரிவு டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 22), மண்ணிவாக்கம் கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சத்தியசீலன் (20), திருப்பூர் மாவட்டம் அவிநாசி ராக்கியபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த சம்பத்குமார் (20), அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேர் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து சரணடைந்த 5 பேரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×