search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு கோர்ட்டில் தடை பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
    X

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு கோர்ட்டில் தடை பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

    • தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி விட்டது.
    • ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், 5 வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகி நிற்கின்றனர்.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டங்கள் எந்தத் தடையும் இல்லாமல் தொடருகின்றன. இடையில் சில காலம் ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தப்பியிருந்த இளைஞர்கள் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி முதலில் பணத்தையும், பின்னர் விலைமதிப்பற்ற உயிரையும் இழந்து வருகின்றனர்.

    ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்னும் ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை. அதனால் தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி விட்டது.

    ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மாம்பட்டி கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×