என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

    மதுரை:

    கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பெண் போலீசார் ஆதிநாயகி, ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பொது இடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். இதை பார்த்ததும், பெண் போலீஸ், கோவிலில் மது அருந்தக்கூடாது என்று கூறி, அவர்களை கண்டித்து கலைந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

    இதனால் மதுபோதையில் இருந்த சிலர், போலீசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தஞ்சை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் பேரில் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் குபேந்திரன் என்பவர் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். பெண் போலீசை அவமானப்படுத்தும் வகையில் அநாகரீகமாக நடந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரர் நீண்டநாளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.

    அவர், நாள்தோறும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி பிறப்பித்து, மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    • சென்னை மெட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • பிப்ரவரி 9ம் தேதி 3,26,786 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.

    அந்த வகையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84.63.384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2024 முதல் 29.02.2024 வரை 86,15.008 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 09.02.2024 அன்று 3,26,786 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2024, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,05,644 பயணதிகள் (Online QR 2,12,344: Static QR 2,32.315: Paper QR 21.29,890; Paytm 3,82,549; Whatsapp 3,70,008; PhonePe 1,76,751; ONDC 1.787), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,94,639 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 28,640 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 11,80,126 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள்

    (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் இந்திரா. இவர் இன்று தனது கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுண்ணாம்பு மணி மற்றும் அப்பகுதி மக்களுடன் வந்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

    பாளை மனக்காவலன்பிள்ளை நகர் 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த வாரம் சாலை அமைப்பதற்காக மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் சாலை அமைக்க கோரி நேற்று எங்கள் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் சாலை அமைக்கும் பணி பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களிடம் விளக்கம் கூற முடியவில்லை. எனவே எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மனு கொடுக்க வந்த கவுன்சிலர் இந்திரா மற்றும் அவரது கணவர் சுண்ணாம்பு மணி ஆகியோரை கமிஷனரை சந்திக்க காத்திருக்குமாறு கூறினர். உடனே அவர்கள் இருவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு கமிஷனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

    • தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.
    • போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியையும் விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, விரைவில் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என அனைவரும் பாதுகாப்பு பணியை தொடங்க உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையினர்(துணை ராணுவம்) ஈடுபட உள்ளார்கள். துணை ராணுவத்தினர் இன்றும் வருகிற 7-ந்தேதியும் என 2 பிரிவாக பிரித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    அதன்படி இன்று தமிழகத்திற்கு துணை ராணுவத்தினர் வந்தனர். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய 5 கம்பெனி துணை ராணுவ படையினர் ரெயில் மூலம் இன்று வந்தார்கள்.

    அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். கோவையில் துணை ராணுவத்தினர் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பின்னர் அவர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன்.
    • எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் கரூர் அல்லது கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை அளித்த விளக்கம் பின்வருமாறு:-

    * கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன்.

    * கட்சி தலைமை உத்தரவிட்டால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

    * பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன்.

    * கட்சி தலைமையின் முடிவு எனது முடிவு.

    * எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

    • பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. தேர்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • புகழ்பெற்ற நகராமான மாமல்லபுரத்தில் நவீன வசதியுடன் பஸ்நிலையம் இல்லாமல் உள்ளது.
    • மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் புகழ்பெற்றவை. கடந்த 1984-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக புகழ் வாய்ந்த புராதன சின்னங்கள் அடங்கிய சுற்றுலா நகரமாக அங்கீகரிக்கப்பட்டது.

    தினந்தோறும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து புராதன சின்னங்களை ரசித்து செல்கிறார்கள். புகழ்பெற்ற நகராமான மாமல்லபுரத்தில் நவீன வசதியுடன் பஸ்நிலையம் இல்லாமல் உள்ளது. இது கடந்த 50 ஆண்டு காலமாக அப்பகுதியில் பெரும் குறையாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் தற்போது நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு கடந்த 27-ந் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு தற்போது நினைவாகி உள்ளது.

    இந்த புதிய பஸ் நிலையம் மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோவில் எதிரில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாடி கட்டிடமாக ரூ.90.5 கோடி செலவில் நவீன வசதியுடன் கட்டப்பட உள்ளது. இது மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மாதிரியாக கொண்டு வடிவமைப்பட்டு உள்ளது.

    தரைத்தளம் இ.சி.ஆர் புறவழி சாலையுடன் இணைக்கப்பட்டு அதில் 100 கார்கள், 300 மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ நிறுத்தும் இடமாகவும், முதல் தளம் இ.சி.ஆர் புதிய பாலத்துடன் இணைக்கப்பட்டு சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தட பஸ்கள் 50-க்கும் மேற்பட்டவை நின்று செல்லும் வசதியுடனும் அமைகிறது. மேலும் நேரக்காப்பாளர் அறை, சில்லரை கடைகள், கழிப்பறை, குடிநீர் சுத்திகரிப்பகம், டிக்கெட் கவுண்டர், சுற்றுலாத்துறை அறை, உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது. இரண்டாவது தளத்தில் உணவகம், காவல் கட்டுப்பாட்டு அறை, ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறை, பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைகிறது.

    அடுத்த ஆண்டு (2025) செப்டம்பர் 25-ந்தேதிக்குள் பணிகளை முடித்து புதிய பஸ் நிலையத்தை திறக்க சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு உள்ளது. வரும் காலங்களில் இந்த பஸ் நிலையம் கிழக்கு கடற்கரை சாலையின் முக்கிய போக்குவரத்து மையமாக அமையும். தொடர்ந்து மாமல்லபுரம் நகரத்திற்கான 100 சதுர கி.மீ., பசுமை மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி களை அதற்கான நிபுணர்கள் குழுவுடன் அரசு ஆலோ சித்து வருவதாக தெரிகிறது.

    • சினிமா மற்றும் அரசியலில் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.
    • ஜாபர் சாதிக் சினிமா மற்றும் அரசியலில் தனக்கு நெருக்கமான நபர்களிடம் டெல்லியில் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாக கூறி வந்துள்ளார்.

    சென்னை:

    டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது. தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.

    இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். சினிமாவிலும் தடம் பதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஜாபர் சாதிக் பல படங்களையும் தயாரித்து வந்தார்.

    இப்படி சினிமா மற்றும் அரசியலில் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.

    இதையடுத்து சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் இருந்து வந்திருந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மனை ஒட்டிவிட்டுச் சென்றனர். அதில் கடந்த 26-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் ஜாபர் சாதிக் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கிருக்கிறார்? என்பதே தெரியவில்லை. தலைமறைவாக உள்ள ஜாபர்சாதிக்கை கைது செய்ய தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு சென்றனர். ஜாபர் சாதிக்கின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் யார்-யார் உள்ளனர்? என்பது பற்றிய பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருகிறார்கள்.

    ஜாபர் சாதிக் சினிமா மற்றும் அரசியலில் தனக்கு நெருக்கமான நபர்களிடம் டெல்லியில் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாக கூறி வந்துள்ளார். இதை நம்பியே அவருடன் பலர் நெருக்கம் காட்டி உள்ளனர். ஏற்றுமதி தொழிலில் நல்ல வருமானம் வருவதாகவும் அதை வைத்தே சினிமா படம் எடுப்பதாகவும் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டே கோடிகளில் புரண்டிருப்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இதனால் அவரோடு நெருங்கி பழகி வந்த அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

    டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தமிழக பிரிவை சேர்ந்த அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாபர் சாதிக்கின் முழு பின்னணியையும் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

    இதில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றிய விவாதங்கள் தெரிய வந்ததும் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.
    • 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    சேலம்:

    தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் 5-வது நாளாக இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் பணியை புறக்கணித்து, கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறினர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சேலம் கோட்டை மெயின் ரோட்டில் 5-வது நாளாக இன்று சாலையோரம் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் சுமார் 180-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை 5-வது நாளாக இன்றும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    • விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவர் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவர் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.66.68 லட்சம் மதிப்பிலான 1061 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

    இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.
    • போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட உள்ளனர்.

    இதில் முதல் கட்டமாக 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். இவர்களில் 15 கம்பெனி துணை ராணுவ படை இன்று தமிழகம் வந்துள்ளது. நேற்று நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் வந்தனர். இதில் 90 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னைக்கு இன்று பிற்பகலிலும், நாளையும் துணை ராணுவ படையினர் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தர உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய 5 கம்பெனி துணை ராணுவ படையினர் ரெயில் மூலம் இன்று வருகிறார்கள்.

    அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். கோவையில் துணை ராணுவத்தினர் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பின்னர் அவர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, விரைவில் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என அனைவரும் பாதுகாப்பு பணியை தொடங்க உள்ளனர்.

    • பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தனியார் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த மாதம் சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×