search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக 5 கம்பெனி துணை ராணுவ படை கோவை வருகை
    X

    பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக 5 கம்பெனி துணை ராணுவ படை கோவை வருகை

    • தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.
    • போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியையும் விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, விரைவில் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என அனைவரும் பாதுகாப்பு பணியை தொடங்க உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையினர்(துணை ராணுவம்) ஈடுபட உள்ளார்கள். துணை ராணுவத்தினர் இன்றும் வருகிற 7-ந்தேதியும் என 2 பிரிவாக பிரித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    அதன்படி இன்று தமிழகத்திற்கு துணை ராணுவத்தினர் வந்தனர். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய 5 கம்பெனி துணை ராணுவ படையினர் ரெயில் மூலம் இன்று வந்தார்கள்.

    அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். கோவையில் துணை ராணுவத்தினர் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பின்னர் அவர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×