என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க, அ.தி.மு.க இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா உடன் அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க. சார்பில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து தே.மு.தி.க, பொதுச்செயலாளர் பிரேமலதா உடன் அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், பேச்சுவார்த்தைக்காக இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 4 இடங்களில் தே.மு.தி.க. போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
- தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.
- க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.
சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.
இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.

- பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
- ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட குணமங்கலம் ஊரின் ஏரிக்கரையில் பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக ஐயனார் வடிக்கப்பட்டுள்ளது. தலையின் உச்சியில் குமிழுடன் கூடிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீளமான காதுகளில் பத்ர குண்டலமும், வட்டமான முகத்தில் மீசையுடன் கழுத்தில் பட்டையான சரப்பளியை அணிகலனாக அணிந்து காட்சி தரும் ஐயனார், உத்குதிகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்து தனது இடது கையை பீடத்தின் மீது ஊன்றியும், வலது கையை காலின் மீது வைத்து தொங்கவிட்ட நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
தோளிலிருந்து வலது காலைச் சுற்றி யோக பட்டையுடன், இடையாடை உடுத்தி அதில் குறுவாள் ஒன்றைச் சொருகி அமர்ந்துள்ள ஐயனாரின் கால்களின் அருகே ஆடும், நாயும் காட்டப்பட்டுள்ளது. மேலும் வலது காலருகே ஒரு நீர் குடுவையும், நாயின் அருகே ஒரு நீர் குடுவையும் காட்சிப் படுத்தபட்டுள்ள நிலையில், இடது தொடை அருகே சேவல் ஒன்று காட்டப்பட்டுள்ளது.
ஐயனாரின் மேற்புற வலது பக்கத்தில் குதிரையும் இடது பக்கத்தில் சாமரம் வீசும் பணிப் பெண்ணும், அதன் அருகே மிகவும் சிதைந்து நிலையில் வணங்கிய நிலையில் ஒரு உருவமும் காட்டப்பட்டுள்ளது.
இதுவரை விழுப்புரம் பகுதியை ஒட்டி ஏராளமான பல்லவர் கால ஐயனார் சிற்பங்கள் ஆவணம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆடை , அணிகலன் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ஐயனார் என்பது உறுதியாகிறது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இச்சிற்பம் இன்றும் வழிபாட்டில் சிறப்புடன் இருந்து வருகிறது.
- ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது36). கூலித்தொழிலாளி. சேலம், கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த இவர் மனைவி சந்தோஷம் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சிட்லபாக்கம் சர்வம் மங்கலம் நகர் பகுதியில் சென்றார். அப்போது அங்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேகத் தடையில் சென்றபோது நிலை தடுமாறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதினார். இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். கோவிந்த ராஜ் மகன்கள் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்தார்.
அளவுக்கு அதிகமான உயரத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டதும், அதில் வேகத்தடை இருப்பது குறித்து எச்சரிக்கை வர்ணம் பூசப்படாததும் விபத்துக்கு காரணமாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்ட 5 வேகத்தடைகள் அவசரமாக அகற்றப்பட்டன. மேலும் தாம்பரம், சிட்லப்பாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள வேகத்தடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் விதிமுறை மீறி உள்ள வேகத்தடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வள்ளி என்பவர் பல்லாவரம் பகுதியில் கட்டிடப் பணி செய்துவிட்டு தனது உடன் பணி செய்யும் கொத்தனார் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அனகாபுத்தூர் நோக்கி சென்ற போது அங்கிருந்த வேகத்தடையால் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் வேகத்தடையில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்படும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் அல்லது வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை உள்ளது என தெரிவிக்கும் பலகைகள் மற்றும் வண்ணங்களை தீட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, விபத்துக்களை தவிர்க்க தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
தரமில்லாத, தேவையற்ற, சீரற்ற வேகத்தடைகளை சோதனை செய்ய தென் சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷ்னர் தலைமையிலான கமிட்டி உள்ளது.
இந்த கமிட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள விபத்து தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆலோசிக்க உள்ளனர்.
இந்த கமிட்டியினர் அனுமதி அளித்த பிறகே வேகத்தடை அமைக்கப்படும். விதிமுறைகளை மீறி இருந்தால் அந்த வேகத்தடை அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும் போது, போக்குவரத்து போலீசார் அனுமதித்த பிறகே வேகத் தடை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் வேகத் தடைகளும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விதியின் படி சரி செய்யப்படுகின்றது.
வேகத்தடையில் வெள்ளை, கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும். இரவில் வேகத்தடை இருப்பது தெளிவாக தெரிவதற்காக வேகப் பட்டை செல்லும். வேகத் தடைக்கு முன்பாக 40 மீட்டர் தொலைவில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
- 2 நாட்களாக 100-க்கும் மேலானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு தனி அணியாக போட்டியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் கடந்த 21-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்து வருகின்றனர். 2 நாட்களாக 100-க்கும் மேலானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இன்று காலையில் இருந்து தலைமை கழகத்தில் தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. விண்ணப்பப் படிவங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் வரிசையில் நின்றனர்.
காலை நிலவரப்படி 1,500 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர். விருப்ப மனுவுடன் வேட்பாளர் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்துவதால் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் பெறப்பட்டதாக தெரிகிறது. தலைமை கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை தொகுதிகள் வாரியாக பிரித்து ஒழுங்கு செய்கிறார்கள்.
சென்னையில் இருந்து இன்று ஏராளமான நிர்வாகிகள் விருப்பமனு கொடுத்தனர். அ.தி.மு.க.வுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்கிறது என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் விருப்ப மனுக்களை கொடுப்பதில் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
இந்நிலையில், விருப்ப மனு பெறும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6-ம் தேதி வரை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- விபத்தில் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக உடைந்து போனது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 27).
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அவினா பேரியை சேர்ந்தவர் மாலை ராஜா(25). இவரது தம்பி சண்முகவேல் (17).
இவர்கள் 3 பேரும் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு நாங்குநேரி பகுதியில் உணவு அருந்தி விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் நோக்கி சென்றனர்.
நாங்குநேரி அருகே உள்ள தாளை குளத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார், இரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மகேஷ் மற்றும் மாலை ராஜா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சண்முகவேல் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக உடைந்து போனது.
விபத்து குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏவுதளம் அமைப்பது தொடர்பாக சீன ராக்கெட் உடன் தி.மு.க. அமைச்சர் விளம்பரம் வெளியிட்டனர்.
- இதை கிண்டலடிக்கும் விதமாக தமிழக பா.ஜ.க முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக.வின் தேசப்பற்று இதுதான் என விமர்சனம் செய்தார்.
இதற்கிடையே, முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீனாவின் ஆட்சி மொழியான மாண்டரின் மொழியில் வாழ்த்து தெரிவித்து தமிழக பா.ஜ.க. கிண்டலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், தங்களின் விருப்பமான மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
- யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
- ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை காப்பு காட்டில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அங்கு சோதனையிட்டபோது மறைந்திருந்த குள்ளப்பகவுண்பட்டியை சேர்ந்த தோட்ட காவலாளியான ஈஸ்வரன் (55) என்பவரை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர் தப்பி ஓட முயன்றபோது வனத்துறையினரும் விரட்டி சென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஞ்சர் முரளிதரன் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஈஸ்வரன் வனத்துறையினரை கத்தியால் குத்த முயன்றதால் ஏற்பட்ட தகராறில் தற்காப்பிற்காக சுடப்பட்டபோது ஈஸ்வரன் பலியானதாக தெரிவித்தார்.
ஆனால் ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் ஈஸ்வரனின் மகள் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து வனவர், வனக்காவலர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி என்ற பென்னியை போலீசார் கைது செய்தனர்.
- அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை.
- ஈஷாவில் அன்னதான திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது பழமொழி. உபநிடதங்களில் கூட "அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவை தானம் செய்வதென்பது ஒருவருக்கு வாழ்க்கையை, உயிரை தானம் செய்வதற்கு ஒப்பானது. உணவு என்பது ஒருவரின் வாழ்வை நீடித்து கொள்ளும் சக்தியை வழங்குகிறது. அதனால்தான் அன்னதானத்தை நம் மரபில் 'பிராண தானம்' என்றும் அழைக்கிறோம். இதை விளக்கும் விதமாக 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற மற்றொரு பழமொழியும் புழக்கத்தில் உள்ளது.
அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை. மனிதத்தின் அடிப்படையில் யாரும் யாருக்கும் அன்னதானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படையான மூன்று விஷயங்களில் முதன்மையானது உணவு. உடை, இருப்பிடம் ஆகிய மற்ற இரு அம்சங்கள் இல்லாவிட்டால், வாழ்வின் தரம் தான் பாதிக்கப்படும். யாரொருவருக்கு உணவு இல்லையோ அவருக்கு வாழ்வாதாரமே, வாழ்க்கையே பாதிக்கப்படும்.
அந்த காரணத்தினாலே பாரதியின் புகழ் பெற்ற பல வரிகளில், லட்சக்கணக்கானோர் நெஞ்சில் நிலைத்திருக்கும் வரியாக "தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் வரி போற்றப்படுகிறது. எனவே கல்வி தானம், பொருள் தானம் உள்ளிட்ட ஏராளமான தானங்களில் வரிசையில் அன்னதானம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் குறித்து சத்குரு அவர்கள் கூறும்போது "நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் முக்கியமாக இருந்து வந்துள்ளது. இதுவே ஒரு தனி ஆன்மீகப் பாதையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்." என்கிறார்.
மேலும் ஈஷாவில் அன்னதான திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மையத்திலுள்ள ஆசிரமவாசிகள், ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலத்திட்டங்களில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்ற முடிகிறது. ஆயிரக்கணக்கான சாதகர்கள், தன்னார்வலர்களுக்கு தினசரி இரு வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோக மையத்தில் நிகழும் மகா சிவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆதியோகி முன்பு நிகழும் மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு அருள் தரிசனம் வழங்கும் வகையில் கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்த வண்ணம் உள்ளன. தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் தரிசனம் நல்கிய ஆதியோகி, தற்போது ரதம் வழியாக தன் பக்தர்களை தேடி சென்று அருள் பாலித்து வருகிறார். கிட்டத்தட்ட 35,000 கி.மீ தூரம் வலம் வரும் இந்த ரத யாத்திரையில் பல நூறு தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை:
கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பெண் போலீசார் ஆதிநாயகி, ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பொது இடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். இதை பார்த்ததும், பெண் போலீஸ், கோவிலில் மது அருந்தக்கூடாது என்று கூறி, அவர்களை கண்டித்து கலைந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் மதுபோதையில் இருந்த சிலர், போலீசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தஞ்சை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் பேரில் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குபேந்திரன் என்பவர் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். பெண் போலீசை அவமானப்படுத்தும் வகையில் அநாகரீகமாக நடந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் நீண்டநாளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.
அவர், நாள்தோறும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி பிறப்பித்து, மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
- சென்னை மெட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- பிப்ரவரி 9ம் தேதி 3,26,786 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84.63.384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2024 முதல் 29.02.2024 வரை 86,15.008 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 09.02.2024 அன்று 3,26,786 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,05,644 பயணதிகள் (Online QR 2,12,344: Static QR 2,32.315: Paper QR 21.29,890; Paytm 3,82,549; Whatsapp 3,70,008; PhonePe 1,76,751; ONDC 1.787), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,94,639 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 28,640 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 11,80,126 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள்
(Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் இந்திரா. இவர் இன்று தனது கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுண்ணாம்பு மணி மற்றும் அப்பகுதி மக்களுடன் வந்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பாளை மனக்காவலன்பிள்ளை நகர் 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த வாரம் சாலை அமைப்பதற்காக மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் சாலை அமைக்க கோரி நேற்று எங்கள் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் சாலை அமைக்கும் பணி பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களிடம் விளக்கம் கூற முடியவில்லை. எனவே எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மனு கொடுக்க வந்த கவுன்சிலர் இந்திரா மற்றும் அவரது கணவர் சுண்ணாம்பு மணி ஆகியோரை கமிஷனரை சந்திக்க காத்திருக்குமாறு கூறினர். உடனே அவர்கள் இருவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு கமிஷனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.






