search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyanar Statue"

    • பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
    • ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது உளுந்தூர்பேட்டை வட்டத்துக்குட்பட்ட குணமங்கலம் ஊரின் ஏரிக்கரையில் பலகை கல்லில் ஐயனார் சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.

    சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக ஐயனார் வடிக்கப்பட்டுள்ளது. தலையின் உச்சியில் குமிழுடன் கூடிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீளமான காதுகளில் பத்ர குண்டலமும், வட்டமான முகத்தில் மீசையுடன் கழுத்தில் பட்டையான சரப்பளியை அணிகலனாக அணிந்து காட்சி தரும் ஐயனார், உத்குதிகாசனத்தில் பீடத்தின் மீது அமர்ந்து தனது இடது கையை பீடத்தின் மீது ஊன்றியும், வலது கையை காலின் மீது வைத்து தொங்கவிட்ட நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

    தோளிலிருந்து வலது காலைச் சுற்றி யோக பட்டையுடன், இடையாடை உடுத்தி அதில் குறுவாள் ஒன்றைச் சொருகி அமர்ந்துள்ள ஐயனாரின் கால்களின் அருகே ஆடும், நாயும் காட்டப்பட்டுள்ளது. மேலும் வலது காலருகே ஒரு நீர் குடுவையும், நாயின் அருகே ஒரு நீர் குடுவையும் காட்சிப் படுத்தபட்டுள்ள நிலையில், இடது தொடை அருகே சேவல் ஒன்று காட்டப்பட்டுள்ளது.

    ஐயனாரின் மேற்புற வலது பக்கத்தில் குதிரையும் இடது பக்கத்தில் சாமரம் வீசும் பணிப் பெண்ணும், அதன் அருகே மிகவும் சிதைந்து நிலையில் வணங்கிய நிலையில் ஒரு உருவமும் காட்டப்பட்டுள்ளது.

    இதுவரை விழுப்புரம் பகுதியை ஒட்டி ஏராளமான பல்லவர் கால ஐயனார் சிற்பங்கள் ஆவணம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஐயனார் சிற்பம் ஏராளமான சிற்ப தொகுப்புகளுடன் தனித்துவமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆடை , அணிகலன் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ஐயனார் என்பது உறுதியாகிறது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இச்சிற்பம் இன்றும் வழிபாட்டில் சிறப்புடன் இருந்து வருகிறது.

    • மதுரை அருகே பிராகுடியில் ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.

    மானாமதுரை

    மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து கல்லம்பல் செல்லும் வழியில் உள்ள பிராகுடி என்ற ஊரின் வயல் பகுதியில் பழமையான சிலை இருப்பதாக மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நாயகியார் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் சேசனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவர் தொல்லியல் கள ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர் அந்த சிலையை ஆய்வு செய்ததில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் என்பது தெரியவந்தது.

    இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-

    இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் கூடிய விரிந்த ஜடா பாரத்துடன் உள்ளது, இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்துள்ளார், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளையும், கை வளையல்களுடனும் அய்யனார் சிற்பம் அமைந்துள்ளது. வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடியும்

    இடது கரம் கஜ ஹஸ்தத்தை முன்னோக்கி நீட்டியவாறு மடக்கி நிறுத்திய முழங்கால் மீது இடது கை மணிக்கட்டை வைத்த நிலையில் தண்ட ஹஸ்தமாகவும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப் பட்டுள்ளது. இடது காலை பீடத்தின் மீது குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உத்குடிகாசன கோலத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த

    சிற்பத்தின் வடிவ மைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×