search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு
    X

    ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

    • மதுரை அருகே பிராகுடியில் ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.

    மானாமதுரை

    மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து கல்லம்பல் செல்லும் வழியில் உள்ள பிராகுடி என்ற ஊரின் வயல் பகுதியில் பழமையான சிலை இருப்பதாக மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நாயகியார் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் சேசனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவர் தொல்லியல் கள ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர் அந்த சிலையை ஆய்வு செய்ததில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் என்பது தெரியவந்தது.

    இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-

    இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் கூடிய விரிந்த ஜடா பாரத்துடன் உள்ளது, இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்துள்ளார், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளையும், கை வளையல்களுடனும் அய்யனார் சிற்பம் அமைந்துள்ளது. வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடியும்

    இடது கரம் கஜ ஹஸ்தத்தை முன்னோக்கி நீட்டியவாறு மடக்கி நிறுத்திய முழங்கால் மீது இடது கை மணிக்கட்டை வைத்த நிலையில் தண்ட ஹஸ்தமாகவும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப் பட்டுள்ளது. இடது காலை பீடத்தின் மீது குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உத்குடிகாசன கோலத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த

    சிற்பத்தின் வடிவ மைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×