என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
    • பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    செய்துங்கநல்லூரில் பாலக்காடு விரைவு ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி கனிமொழி எம்.பி.யிடம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


    தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? இவ்வளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும்.

    இதுவரைக்கும் தமிழ் நாட்டிற்கு என என்ன செய்துள்ளார்கள்? நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சாமானியனுக்கும் இவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? வேலை வாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கலாம் கனவு காணுங்கள் என்று கூறி உள்ளார்.கனவு காண்பது அவர்களது உரிமை.

    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

    • தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
    • தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
    • மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாசிச பா.ஜனதா ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும். நமது வெற்றியை முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.


    தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அ.தி.மு. க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.

    அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
    • சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகங்களும் பரபரப்பாக காணப்படுகின்றன.

    கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற காரணங்களுக்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாகி உள்ளது. காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவராக கு.செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சி நிர்வாகிகள் வருகை அதிகரித்தன. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    தலித் சமூகத்தை சேர்ந்தவர் தமிழக தலைவராக இருப்பதோடு மட்டுமின்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தில் அவர் செயல்படுவதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சத்திய மூர்த்தி பவனுக்கு வருகின்றனர்.

    மேலும் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து வருவதால் பத்திரிக்கையாளர் கூட்டமும் தினமும் அங்கு காணப்படுகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் வருகை அதிகரிப்பால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் களை கட்டியுள்ளது.

    • பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க எந்த தடையும் கிடையாது.
    • துணைவேந்தர் பதவி 3 ஆண்டுகள்தான். அதை தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டு என பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி தனது கைப்பாவையாக கவர்னர் ஆர்.என்.ரவியை பயன்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஜனநாயகத்தில் அதை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இறுதி வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். அப்போது யார்-யாரெல்லாம் இன்றைக்கு பழிவாங்குகிற நடவடிக்கையில் ஈடுபட்டார்களோ? அவர்கள் மீது என்ன பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நிச்சயமாக மனிதாபிமானம் பார்க்க மாட்டோம்.

    நிச்சயமாக தகுந்த நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார்.

    கே: பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம் என்ற சூழலில் கவர்னர் டெல்லி சென்று விட்டாரே? பொன்முடி பதவி ஏற்பு எப்போது நடைபெறும்?

    ப: கவர்னர் இன்றைக்கு தான் சென்னை வருகிறார். பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க எந்த தடையும் கிடையாது. கவர்னர் இன்று பொன்முடி பதவி ஏற்புக்கு தேதி சொல்வார் என்று நம்புகிறோம். ஏதாவது விளக்கங்கள் கேட்டால் சட்டத்துறை உரிய விளக்கங்கள் தருவதற்கு சட்டத்துறை எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது.

    தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு பதவி ஏற்பு நடத்தலாம்.

    கே: பி.எட். மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை கவர்னர் மாளிகையில் கேட்டிருப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளதே?

    ப: இன்றைக்கு வேந்தர்களுக்கு திடீர் திடீரென பதவி நீட்டிப்புகளை அவர் தந்து கொண்டிருக்கிறார். துணைவேந்தர் பதவி 3 ஆண்டுகள்தான். அதை தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டு என பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

    ஏதோ அவர் ஒரு தனி ராஜ்ஜியம் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தனி ராஜ்ஜியம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரிகை ஊராட்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 38). இவர் தி.மு.க. முன்னாள் நிர்வாகி.

    இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    தொழில்அதிபரும், உறவினருமான கர்நாடகா மாநிலம் அனிகிரிப் பள்ளியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கார்த்திக்கின் உறவினருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (30) என்கிற இளைஞருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததது.

    இந்த நிலையில் கார்த்திக் தனது உறவினர்  வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை 5 மணி அளவில் பேரிகைக்கு திரும்பும்போது ஓசூர் அடுத்த சூலகுண்டா என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது கார்த்திக்கை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். உடனே பிரதாப் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து துடிதுடித்து கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் குறித்து தகலவறிந்த மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தங்கராஜ் மற்றும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமையிலும் என 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் 3 பேரும் கர்நாடகா மாநிலத்தில் பதுக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை தனிப்படையினர் விசாரணைக்காக பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.

    தி.மு.க. நிர்வாகி நிலத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்னத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையானது.

    இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,115-க்கும் சவரனுக்கு 80 குறைந்து ஒரு சவரன் ரூ.48,920-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.30-க்கும் பார் வெள்ளி ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்கள் திரும்ப பெறப்படும்.
    • பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் மொபைல், சியூஜி எண்கள் வழங்கப்படும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அமலுக்கு வரும் நடைமுறைகள் வருமாறு:-

    அரசு அலுவலங்களில் உள்ள அனைத்து வாழும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படும். பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவை மறைக்கப்படும்.

    அரசு கட்டிடங்களில் இடம் பெற்றுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் விளம்பர பலகைகள் மறைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ., எம்.பி.) அலுவலகங்களை பூட்டி பொதுப்பணித்துறை வசம் சாவி ஒப்படைக்க வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் ஆகியோர் உபயோகப்படுத்தும் அரசு வாகனங்கள் திரும்ப பெறப்படும். அனைத்து மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் நிலைக்குழுக்கள், பணியாற்றுவதற்கான சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான வாகனங்கள் மற்றும் மொபைல், சியூஜி எண்கள் வழங்கப்படும்.

    அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சியினர் தொடர்பான சின்னங்கள், வாசகங்கள் மறைக்கப்படும். அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழித்தல் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். தனிநபர்கள் வைத்துள்ள துப்பாக்கிகளை சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்குதல் மற்றும் புதிய பயனாளிகள் தேர்வு செய்தல் நிறுத்தி வைக்கப்படும். மக்கள் குறைதீர்வு மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் பெறும் நிகழ்வுகள் தடை செய்யப்படும்.

    பறக்கும் படை சோதனையின் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்படும். தனிநபர்கள் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப ரிவர்த்தனை செய்தால் கண்காணிக்கப்படும்.

    மேற்கண்ட நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 38 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் மாதிரி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை.

    இந்த நிலையில் வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடியானது.

    தற்போது இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 3 பேரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
    • அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பலரும் குளிப்பதற்காக நீர் நிலைகளை அதிகம் நாடி வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளும் தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் வரத்து குறைந்து அருவிகள் வறண்டு காணப்படுகின்றன.

    இதேபோல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது குற்றால சீசன் தொடங்கும்.

    • தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது.
    • கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் ரூ.22 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியும், ரூ.13 கோடியில் புதிய நர்சிங் பள்ளியும் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், பரந்தாமன் எம்.எல்.ஏ., மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    மதுரை:

    இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர்.

    ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுப்பது, மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வீலிங் செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் மோகத்தால் ஆற்றில் பெட்ரோலை ஊற்றி எரித்து அதில் குதிப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆற்றுப்பகுதிக்கு செல்லும் 4 வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஆற்றுக்குள் பெட்ரோலை வட்டமாக ஊற்றுகின்றனர். பின்னர் அதில் ஒரு வாலிபர் தீக்குச்சியை கொளுத்தி அதில்போட வட்ட வடிவில் தீ குபீரென்று எரிய தொடங்கியது.


    அந்த நேரத்தில் அருகில் இருந்த சுவற்றில் ஏறியிருந்த வாலிபர் ஒருவர் அந்த தீயில் குதிக்கிறார். சிறிது நேரத்தில் தீ அணைந்து விட அந்த வாலிபர் தண்ணீரில் இருந்து வெளியேறுகிறார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்களால் நீர்நிலைகளுக்கும் அதில் வாழும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

    ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சிலருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    ×