search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி அருகே தி.மு.க. நிர்வாகி வெட்டிகொலை
    X

    சூளகிரி அருகே தி.மு.க. நிர்வாகி வெட்டிகொலை

    • தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரிகை ஊராட்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 38). இவர் தி.மு.க. முன்னாள் நிர்வாகி.

    இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    தொழில்அதிபரும், உறவினருமான கர்நாடகா மாநிலம் அனிகிரிப் பள்ளியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கார்த்திக்கின் உறவினருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (30) என்கிற இளைஞருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததது.

    இந்த நிலையில் கார்த்திக் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை 5 மணி அளவில் பேரிகைக்கு திரும்பும்போது ஓசூர் அடுத்த சூலகுண்டா என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது கார்த்திக்கை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். உடனே பிரதாப் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து துடிதுடித்து கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் குறித்து தகலவறிந்த மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தங்கராஜ் மற்றும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமையிலும் என 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் 3 பேரும் கர்நாடகா மாநிலத்தில் பதுக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை தனிப்படையினர் விசாரணைக்காக பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.

    தி.மு.க. நிர்வாகி நிலத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×