என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
    • வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழித்துறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.

    படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.

    அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திட்டத்தை செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
    • அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கான 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை கடந்த 6-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் 'நீங்கள் நலமா?' திட்டத்தின் கீழ் வீடியோ கால் மூலம் மக்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.

    அப்போது, அம்பேத்கர் திட்டம் குறித்து பயனாளியிடமும், திட்டங்களின் செயல்பாடு குறித்து தொழில்முனைவோரிடமும் கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    மேலும் அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

    • ஆத்திரம் அடைந்த சிறுவன் சுபாவேணியை வெட்டிக்கொலை செய்தான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகள் சுபா வேணி(வயது 21). இவருக்கு அய்யனார்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சுபா வேணிக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுபா வேணி கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக தாய் வீடான செட்டிக்குறிச்சியில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

    கணவரை பிரிந்து அக்காள் தங்கள் வீட்டில் வசித்து வருவது, சுபாவேணி அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசுவது அவரது சகோதரனான 16 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லை.

    இதுகுறித்து அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தோட்டத்தில் வைத்து அவர்களுக்குள் தகராறு முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன் சுபாவேணியை வெட்டிக்கொலை செய்தான். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    • மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர்.
    • பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்கி உள்ளன.

    கோவை, திருப்பூர், ஈரோடு, பல்லடம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் போன்ற மேற்கு மாவட்டங்கள் கொங்கு மண்டலங்கள் என அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த கொங்கு மண்டலம் தனிக்கவனம் பெறும். காரணம் இங்கு கிடைக்கும் அதிகப்படியான வெற்றி அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடும். இதற்கு கடந்த பல தேர்தல்கள் உதாரணம் ஆகும். அ.தி.மு.க. அடுத்தடுத்து பல முறை தமிழகத்தில் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது இந்த கொங்கு மண்டலம் தான்.

    இதன்காரணமாக அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை ஏற்படுத்த முயல்கின்றன. கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அதிகப்படியாக தொகுதிகளை வென்றது. ஆனால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. 9 தொகுதிகளிலும், பா.ஜ.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இவ்வாறு அரசியலில் பல அதிர்ச்சிகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி விடும் இந்த கொங்கு மண்டல தொகுதிகள்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர். கடந்த 2 முறை வடநாட்டில் பெற்ற வெற்றியை கொண்டே பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது தென்மாநிலங்களை குறிவைத்து பா.ஜ.க. களமிறங்கி இருக்கிறது. அதுவும் தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதில் கொங்கு மண்டலத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை தொகுதி பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருமுறை இந்த தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பதே இதற்கு காரணம் ஆகும். கோவை தொகுதி தவிர பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளையும் பா.ஜ.க. குறிவைத்துள்ளது. இந்த தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற பகுதிகளை மையமாக கொண்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயண யாத்திரையின் நிறைவு விழாவாக அந்த கூட்டம் அமைந்தது. இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த கூட்டம் பா.ஜ.க. ஓட்டாக மாறும் என அவர் கணக்கு போட்டுள்ளார்.

    அதைத்தொடர்ந்து அவர் கொங்கு மண்டலத்துக்கு நாளை மறுநாள் (18-ந் தேதி) மீண்டும் வருகை தர உள்ளார். கோவை கவுண்டம்பாளையம்-ஆர்.எஸ்.புரம் இடையே நடைபெற உள்ள ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார். பேரணி இறுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களையும் பங்கேற்ற செய்ய பா.ஜ.க. மாநில தலைமை ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்பின் மறுநாள் (19-ந் தேதி) மீண்டும் பிரதமர் மோடி கொங்கு மண்டலத்தின் மற்றொரு பகுதியான சேலத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேச உள்ளார். அதன்பின் மற்றொரு கட்ட பிரசாரத்துக்கும் கொங்கு மண்டலத்துக்கு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் வருகையால் கொங்கு மண்டல பா.ஜ.க.வினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் வெற்றியை குறிவைத்து களப்பணியாற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்கி உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளை இழந்த தி.மு.க. இம்முறை அதுபோல் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதன்காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். அவர்களின் நேரடி பார்வையில் இந்த தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற வியூகம் அமைத்துள்ளனர்.

    கடந்த தேர்தலில் கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை கோவை தொகுதியை வென்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என கருதிய தி.மு.க. இங்கு தங்கள் கட்சியே போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கி கொடுத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அத்தனை தொகுதிகளையும் வாரி சுருட்டி விட வேண்டும் என்ற திட்டத்தில் தி.மு.க. உள்ளது.

    அதேசமயம் கோவையில் 9 சட்டசபை தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க. அதனை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பல்வேறு வியூகங்களை அமைத்து களப்பணியில் இறங்கி உள்ளனர்.

    பா.ஜ.க., தி.மு.க. அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சரியான வேட்பாளரை களமிறக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. மேலும் பூத் கமிட்டி உள்ளிட்ட அடிமட்ட தொண்டர்களையும் அ.தி.மு.க. உஷார்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. சாதிக்குமா? என்பது தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும்.

    • பிரதமர் மோடி நாளை மறுநாள் கோவையில் வாகன பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
    • கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் பிரதமர் காலை 11.40 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி நாளை மறுநாள் (18-ந் தேதி) கோவையில் வாகன பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார்.

    அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு கார் மூலம் வாகன பிரசாரத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி மாலை 6.45 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதைத்தொடர்ந்து கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வரும் பிரதமர் இரவில் அங்கு தங்குகிறார். 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.40 மணிக்கு கோவை சர்வதேச விமானம் நிலையம் வந்தடைகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் பிரதமர் காலை 11.40 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சேலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் சேலம் விமான நிலையம் செல்லும் பிரதமர் பிற்பகல் 2.25 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். 

    • பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.
    • தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.

    தமிழ் மொழி; தொன்மை- தனித்தன்மை- பொதுமைப் பண்பு- பண்பாடு - உயர்ந்த சிந்தனை - இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

    தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

    கழக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.

    "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.

    மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12-ஆம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.

    "இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
    • பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    செய்துங்கநல்லூரில் பாலக்காடு விரைவு ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி கனிமொழி எம்.பி.யிடம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


    தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? இவ்வளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும்.

    இதுவரைக்கும் தமிழ் நாட்டிற்கு என என்ன செய்துள்ளார்கள்? நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சாமானியனுக்கும் இவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? வேலை வாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கலாம் கனவு காணுங்கள் என்று கூறி உள்ளார்.கனவு காண்பது அவர்களது உரிமை.

    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

    • தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
    • தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
    • மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாசிச பா.ஜனதா ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும். நமது வெற்றியை முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.


    தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அ.தி.மு. க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.

    அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
    • சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகங்களும் பரபரப்பாக காணப்படுகின்றன.

    கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற காரணங்களுக்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாகி உள்ளது. காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவராக கு.செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சி நிர்வாகிகள் வருகை அதிகரித்தன. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    தலித் சமூகத்தை சேர்ந்தவர் தமிழக தலைவராக இருப்பதோடு மட்டுமின்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தில் அவர் செயல்படுவதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சத்திய மூர்த்தி பவனுக்கு வருகின்றனர்.

    மேலும் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து வருவதால் பத்திரிக்கையாளர் கூட்டமும் தினமும் அங்கு காணப்படுகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் வருகை அதிகரிப்பால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் களை கட்டியுள்ளது.

    • பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க எந்த தடையும் கிடையாது.
    • துணைவேந்தர் பதவி 3 ஆண்டுகள்தான். அதை தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டு என பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி தனது கைப்பாவையாக கவர்னர் ஆர்.என்.ரவியை பயன்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஜனநாயகத்தில் அதை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இறுதி வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். அப்போது யார்-யாரெல்லாம் இன்றைக்கு பழிவாங்குகிற நடவடிக்கையில் ஈடுபட்டார்களோ? அவர்கள் மீது என்ன பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நிச்சயமாக மனிதாபிமானம் பார்க்க மாட்டோம்.

    நிச்சயமாக தகுந்த நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார்.

    கே: பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம் என்ற சூழலில் கவர்னர் டெல்லி சென்று விட்டாரே? பொன்முடி பதவி ஏற்பு எப்போது நடைபெறும்?

    ப: கவர்னர் இன்றைக்கு தான் சென்னை வருகிறார். பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க எந்த தடையும் கிடையாது. கவர்னர் இன்று பொன்முடி பதவி ஏற்புக்கு தேதி சொல்வார் என்று நம்புகிறோம். ஏதாவது விளக்கங்கள் கேட்டால் சட்டத்துறை உரிய விளக்கங்கள் தருவதற்கு சட்டத்துறை எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது.

    தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு பதவி ஏற்பு நடத்தலாம்.

    கே: பி.எட். மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை கவர்னர் மாளிகையில் கேட்டிருப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளதே?

    ப: இன்றைக்கு வேந்தர்களுக்கு திடீர் திடீரென பதவி நீட்டிப்புகளை அவர் தந்து கொண்டிருக்கிறார். துணைவேந்தர் பதவி 3 ஆண்டுகள்தான். அதை தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டு என பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

    ஏதோ அவர் ஒரு தனி ராஜ்ஜியம் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தனி ராஜ்ஜியம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×