என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
புதுப்பேட்டை:
பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.
இந்த நிலையில் சீமானின் சின்னம் என்ன என்ற வாசகத்துடன் தேர்தல் ஆணையத்தை கேட்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் நகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் சீமான் படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
- யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
தருமபுரி:
ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.
குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.
வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.
உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.
கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
- நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
- மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் காக்க வைக்கப்பட்டு செவிலியர்கள் ஒரு அறையில் ஒருங்கிணைந்து சேலை விற்பனை நடைபெற்றதை பார்த்து விற்பனையில் ஈடுபட்டனர்.
பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது எனவும், செவிலியர்கள் யாரும் சேலை விற்பனை செய்வதை வேடிக்கை பார்க்க செல்லவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகாலட்சுமி உத்தரவாதம் என்ற திட்டம் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
- பெண்களின் நண்பன் என்னும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் அறிவித்துள்ள வாக்குறுதிகள் பெண்களை கவரும் வகையில் இருப்பதால் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறது.
காங்கிரஸ் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்து தமிழக மகளிர் காங்கிரஸ் விரிவான விளக்கம் அளித்தது.
மகாலட்சுமி உத்தரவாதம் என்ற திட்டம் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
பெண்களுக்கான சம உரிமை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய நியமனங்களில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும்.
பெண்களுக்கு உரிய மரியாதையுடன் அதிகாரம் அளிக்கும் வகையில் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு பணியாளர்களின் மாத சம்பளத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்.
பெண்களின் நண்பன் என்னும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
இதன்படி பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான உதவிகளை வழங்கவும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அதிகார மையம் வடிவில் சட்ட உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
சாவித்திரி பாய் பூலே விடுதி திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பணிபுரியும் பெண்களுக்காக குறைந்தபட்சம் ஒரு விடுதி உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பான திட்டங்களை கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
- ஆன்மிகப் பெரியோர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில்," தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024-ம் ஆண்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்று, அவர்களுக்கான வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 20 உறுப்பினர்கள் கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவராக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், உறுப்பினர் செயலராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும் உறுப்பினர்களாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர், கூடுதல் ஆணையர்கள், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார், சுகி.சிவம், தேச மங்கையர்க்கரசி, ந.ராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், பழனி தண்டா யுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் க.சந்திரமோகன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தார்.
- நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
சென்னை:
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் எம்.பி. ரஞ்சன்குமார். இவர் தமிழ்நாடு எஸ்.சி. பிரிவு மாநில துணை தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
2 பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாத நிலையில் அவர் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அக்கடிதத்தை அவர் ஏற்கவில்லை.
தற்போது புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தார்.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக 6 மாவட்டங்களில் புதிதாக நிர்வாகிகளை நியமித்தார்.
நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் கிழக்கு, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கு புதிதாக பொறுப்புக்குழு உறுப்பினர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்தார்.
இந்த நிலையில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு கீழ் பணியாற்றிய மாவட்ட சர்க்கிள், வட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
- வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழித்துறை:
கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.
படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.
அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திட்டத்தை செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
- அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
சென்னை:
தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கான 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை கடந்த 6-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் 'நீங்கள் நலமா?' திட்டத்தின் கீழ் வீடியோ கால் மூலம் மக்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
அப்போது, அம்பேத்கர் திட்டம் குறித்து பயனாளியிடமும், திட்டங்களின் செயல்பாடு குறித்து தொழில்முனைவோரிடமும் கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும் அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
- ஆத்திரம் அடைந்த சிறுவன் சுபாவேணியை வெட்டிக்கொலை செய்தான்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகள் சுபா வேணி(வயது 21). இவருக்கு அய்யனார்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சுபா வேணிக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுபா வேணி கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக தாய் வீடான செட்டிக்குறிச்சியில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
கணவரை பிரிந்து அக்காள் தங்கள் வீட்டில் வசித்து வருவது, சுபாவேணி அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசுவது அவரது சகோதரனான 16 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லை.
இதுகுறித்து அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தோட்டத்தில் வைத்து அவர்களுக்குள் தகராறு முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன் சுபாவேணியை வெட்டிக்கொலை செய்தான். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
- மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர்.
- பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்கி உள்ளன.
கோவை, திருப்பூர், ஈரோடு, பல்லடம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் போன்ற மேற்கு மாவட்டங்கள் கொங்கு மண்டலங்கள் என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த கொங்கு மண்டலம் தனிக்கவனம் பெறும். காரணம் இங்கு கிடைக்கும் அதிகப்படியான வெற்றி அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடும். இதற்கு கடந்த பல தேர்தல்கள் உதாரணம் ஆகும். அ.தி.மு.க. அடுத்தடுத்து பல முறை தமிழகத்தில் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது இந்த கொங்கு மண்டலம் தான்.
இதன்காரணமாக அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை ஏற்படுத்த முயல்கின்றன. கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அதிகப்படியாக தொகுதிகளை வென்றது. ஆனால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. 9 தொகுதிகளிலும், பா.ஜ.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இவ்வாறு அரசியலில் பல அதிர்ச்சிகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தி விடும் இந்த கொங்கு மண்டல தொகுதிகள்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று சபதத்துடன் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் களமிறங்கி உள்ளனர். கடந்த 2 முறை வடநாட்டில் பெற்ற வெற்றியை கொண்டே பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது தென்மாநிலங்களை குறிவைத்து பா.ஜ.க. களமிறங்கி இருக்கிறது. அதுவும் தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதில் கொங்கு மண்டலத்தில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை தொகுதி பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருமுறை இந்த தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பதே இதற்கு காரணம் ஆகும். கோவை தொகுதி தவிர பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளையும் பா.ஜ.க. குறிவைத்துள்ளது. இந்த தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற பகுதிகளை மையமாக கொண்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயண யாத்திரையின் நிறைவு விழாவாக அந்த கூட்டம் அமைந்தது. இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த கூட்டம் பா.ஜ.க. ஓட்டாக மாறும் என அவர் கணக்கு போட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவர் கொங்கு மண்டலத்துக்கு நாளை மறுநாள் (18-ந் தேதி) மீண்டும் வருகை தர உள்ளார். கோவை கவுண்டம்பாளையம்-ஆர்.எஸ்.புரம் இடையே நடைபெற உள்ள ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார். பேரணி இறுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களையும் பங்கேற்ற செய்ய பா.ஜ.க. மாநில தலைமை ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்பின் மறுநாள் (19-ந் தேதி) மீண்டும் பிரதமர் மோடி கொங்கு மண்டலத்தின் மற்றொரு பகுதியான சேலத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேச உள்ளார். அதன்பின் மற்றொரு கட்ட பிரசாரத்துக்கும் கொங்கு மண்டலத்துக்கு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் வருகையால் கொங்கு மண்டல பா.ஜ.க.வினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் வெற்றியை குறிவைத்து களப்பணியாற்றி வருகிறார்கள்.
இதற்கிடையே பா.ஜ.க.வின் திட்டத்தை தவிடுபொடியாக்கி வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க., அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை அமைத்து களமிறங்கி உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளை இழந்த தி.மு.க. இம்முறை அதுபோல் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதன்காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். அவர்களின் நேரடி பார்வையில் இந்த தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற வியூகம் அமைத்துள்ளனர்.
கடந்த தேர்தலில் கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை கோவை தொகுதியை வென்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என கருதிய தி.மு.க. இங்கு தங்கள் கட்சியே போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கி கொடுத்துள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அத்தனை தொகுதிகளையும் வாரி சுருட்டி விட வேண்டும் என்ற திட்டத்தில் தி.மு.க. உள்ளது.
அதேசமயம் கோவையில் 9 சட்டசபை தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க. அதனை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பல்வேறு வியூகங்களை அமைத்து களப்பணியில் இறங்கி உள்ளனர்.
பா.ஜ.க., தி.மு.க. அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சரியான வேட்பாளரை களமிறக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. மேலும் பூத் கமிட்டி உள்ளிட்ட அடிமட்ட தொண்டர்களையும் அ.தி.மு.க. உஷார்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. சாதிக்குமா? என்பது தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும்.
- பிரதமர் மோடி நாளை மறுநாள் கோவையில் வாகன பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
- கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் பிரதமர் காலை 11.40 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி நாளை மறுநாள் (18-ந் தேதி) கோவையில் வாகன பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார்.
அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு கார் மூலம் வாகன பிரசாரத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி மாலை 6.45 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதைத்தொடர்ந்து கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வரும் பிரதமர் இரவில் அங்கு தங்குகிறார். 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.40 மணிக்கு கோவை சர்வதேச விமானம் நிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் பிரதமர் காலை 11.40 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சேலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் சேலம் விமான நிலையம் செல்லும் பிரதமர் பிற்பகல் 2.25 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
- பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.
- தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.
தமிழ் மொழி; தொன்மை- தனித்தன்மை- பொதுமைப் பண்பு- பண்பாடு - உயர்ந்த சிந்தனை - இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.
தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
கழக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.
மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12-ஆம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.
"இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்படும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/LXZR7HHi9a
— TN DIPR (@TNDIPRNEWS) March 16, 2024






