என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.
- எல்.முருகன் நடனம் ஆடியது படுகர் இன மக்களை பெரிதும் கவர்ந்தது.
நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். நேற்று அவர் குன்னூர் அருவங்காடு, சேலாஸ், காந்திபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதியில் வசிக்கும் படுகர் இன மக்கள் நடனமாடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் மத்திய மந்திரி எல்.முருகனும், படுகர் மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். எல்.முருகன் நடனம் ஆடியது படுகர் இன மக்களை பெரிதும் கவர்ந்தது.
- வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
- சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமியன்று தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 8-ந்தேதி பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டும், 6-ந்தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டும் சதுரகிரிக்கு செல்ல வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
சனி பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது என்பதால் இந்த முறை பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ந் தேதி மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அமாவாசையான 8-ந்தேதியும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் மலையேறி வருவதை தவிர்க்க வேண்டும். பாலித்தீன் கேரிப்பை மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை செய்யப் பட்டுள்ளது.
சுந்தர மகாலிங்கம் கோவில் பிரதோஷ, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
- காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
- பெண் வியாபாரி ஒருவர் முதலமைச்சருக்கு ஆர்வமுடன் பூ கொடுத்தார்.
வேங்கிகால்:
திருவண்ணாமலை அருகே உள்ள சோ.காட்டுக்குளத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருவண்ணாமலை, ஆரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பங்கேற்க நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
நேற்று இரவு அருணை கல்லூரி வளாகத்தில் தங்கினார். இதனை தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் வந்தார்.
கோவில் மாடவீதி, கல்லை கடை சந்திப்பு அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் நடந்து சென்று வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
நடைபாதை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகள் சேகரித்தார். பின்னர் மாடவீதியில் நடந்து சென்று, சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்குகள் கேட்டார்.
ஜோதி பூ மார்க்கெட் சென்றார். வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்குகள் கேட்டார்.
மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அப்போது அனைத்து வியாபாரிகள் சார்பில் மலர்மாலை, சால்வை அணிவித்து, மலர் தூவி வரவேற்றனர். நடந்து சென்ற முதலமைச்சர் மீது மலர் தூவினர்.
அப்போது பெண் வியாபாரி ஒருவர் முதலமைச்சருக்கு ஆர்வமுடன் பூ கொடுத்தார். அதனை சிரித்தபடி முதலமைச்சர் வாங்கிக் கொண்டார். அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு சென்று கற்பூரம் விற்பனை செய்யும் பெண்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு கேட்டார்.
இதனை தொடர்ந்து ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதிக்கு நடந்து சென்றார். அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது முதலமைச்சருடன் ஏராளமானோர் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். பள்ளி மாணவிகள் அவருடன் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியில் உற்சாகமாக சென்றனர்.
கடைசியாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள டீ கடையில் மு.க.ஸ்டாலின் இஞ்சி டீ குடித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தால் மாடவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பிரசாரத்தின்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.
- பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, வெற்றியின் சின்னமாம் இலைக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.
பரமக்குடி:
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சின்னம் கிடைக்காமல், கிடைத்த பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் நேற்று பரமக்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.க. தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
மீனவர்கள் அதிகம் நிறைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் களம் காணும் ஓ.பி.எஸ்.சும் தன் பங்குக்கு கச்சத்தீவை பிரதமர் மோடியுடன் இணைந்து மீட்க பாடுபடுவேன் என்று கூறி வருகிறார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்ற கருத்தையும் தொடர்ந்து பிரசாரத்தின்போது கூறிவருகிறார்.
இந்தநிலையில் பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, வெற்றியின் சின்னமாம் இலைக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.
இதைக்கேட்டு அங்கு திரண்டிருந்தவர்கள் சிரித்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் பழக்க தோஷத்தில் சொல்லி விட்டேன் என்று மழுப்பலாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இப்பகுதியில் இருக்கும் நிரந்தர குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நல்ல ஒரு பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன் என்றார்.
- தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- கொரட்டூரில் மட்டும ரூ.2½ கோடி பணம் பிடிபட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர்கள் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரியில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு, புரசைவாக்கம் கொண்டித்தோப்பு, கொரட்டூர் பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்களின் வீடுகள் என 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
நேற்று காலையில் தொடங்கிய வருமான வரி சோதனை இரவு வரை நீடித்தது.
இந்த சோதனையின்போது தொழில் அதிபர்களின் வீடுகளில் ரகசிய அறைகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தனர்.
இதில் தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரட்டூரில் மட்டும ரூ.2½ கோடி பணம் பிடிபட்டுள்ளது. வேறு ஒரு இடத்தில் 1½ கோடி சிக்கியது. இந்த பணத்தை எண்ணி எடுத்துச் சென்றுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் அதிபர்களிடம் அதற்கு உரிய கணக்கு கேட்டுள்ளனர்.
இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதற்காக தொழில் அதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட சோதனைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
தென்காசி, திருப்பூர், செய்யாறு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தென்காசி மற்றும் திருப்பூரில் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. செய்யாற்றில் துணிக்கடைகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
இதேபோன்ற சோதனைகளை அடுத்தடுத்த நாட்களிலும் தொடர வருமான வரித்துறை அதிகரிகள் முடிவு செய்துள்ளனர்.
- தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது.
- தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும், 2-ந்தேதி ரூ.51,640-க்கும், நேற்று ரூ. 51,440-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
- மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
- கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகரில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என கண்டறிந்து பணம் பறிப்பதாக, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் கண்ணகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ஐயப்பன் (வயது 29) மற்றும் அவருடைய மனைவி கங்காகவுரி (27) ஆகிய 2 பேரும் வாடகை வீட்டில், சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என பரிசோதித்து பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.
பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.
- கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான்.
கடலூர்:
கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர், பண்ருட்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.
கடலூர் தொழிற்பேட்டை ரசாயனக் கழிவு பாதிப்பு குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த நான் போராட்டம் நடத்தினேன். தி.மு.க., அ.தி.மு.க. மாறிமாறி ஆட்சியில் இருந்தும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.
தனது தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடும் தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பாருங்கள். முந்திரி விலை வீழ்ச்சிக்கு தற்போதைய தி.மு.க. எம்.பி. ரமேஷ்தான் காரணம்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிலத்தடி நீர் 800 அடிக்கும் கீழாக சென்று விட்டது. நிலக்கரி சுரங்கங்கள் கடலூர் மாவட்டத்தை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.
கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான். ஆரணி பாராளுமன்ற உறுப்பினரான அவர் ஏன் இங்கு வந்து போட்டியிடுகிறார்? அவருக்கு இங்கு என்ன வேலை? அங்கு சீட் கொடுக்காததால் இங்கு வந்துள்ளார். அவர் போட்டியிடுவதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு பா.ம.க.வும், கூட்டணியும்தான் முக்கியம்.
தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வாக இருந்த போது, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தங்கர்பச்சானை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர் மனதில் ஆழமான சமூக நீதிக் கருத்துகள் உள்ளன.
நாம் துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் உயிர் கொடுத்துள்ளோம். பா.ம.க. ஆள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி. உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து பார்ப்பதற்காக இல்லை.
இடஒதுக்கீடு, டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தோம். 2026-ல் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை அமைப்போம்.
அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆக போவதில்லை. உங்களின் எதிரி தி.மு.க.
தி.மு.க.வை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல் இது என்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், தற்போது நடக்கவிருப்பது இந்திய நாட்டின் பிரதமருக்கான தேர்தல். பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிற பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல். அதனால் நம்மை தமிழகத்தில் வாட்டி வதைக்கும் சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள். கல்வி தெய்வமாம் சரஸ்வதி வீற்றிருக்கும் தாமரை சின்னத்தில் வாக்களித்து தம்மை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதியில் பரப்புரை செய்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா காலம் தவிர்த்து மீதமிருந்த 3 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியாக அளிக்கப்பட்ட 17 கோடி ரூபாயை வகுப்பறைகள், சமூகக் கூடங்கள், நியாயவிலைக் கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கணினி வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை கட்டிக்கொடுத்து ஒரு பைசா மீதம் வைக்காமல் மக்களுக்காக செலவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
தனது சொந்த நிதியாக 118 கோடி ரூபாய் இலவச உயர்கல்வி திட்டத்திற்காக செலவு செய்துள்ளேன். இதன்மூலம் ஏழை மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என கூறினார். தனது சாதனைகளை வேறு எந்த ஒரு அரசியல் தலைவரும், வேறு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியிடாத வகையில் தான் புத்தகமாக வெளியிட்டு பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறேன் என்றார்.
பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து கை.களத்தூரில் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தர், நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த தரமான எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும். தம்மை எம்.பியாக தேர்ந்தெடுத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 1,500 குடும்பங்களுக்கு கட்டணமில்லா உயர்தர இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரிக்கவும், கை.களத்தூர் பஞ்சாயத்தை பேரூராட்சியாக மாற்றவும், தீயணைப்பு நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
- வேலூர், அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
- அப்போது பேசிய அவர், தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றார்.
வேலூர்:
வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் 'அவர்களை' தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைகிறார்கள். இன்று காலை, சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'ஒன்றிணைவோம் வா' என உங்களுக்காக பணியாற்றுவோம். ஆட்சியில் இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி 'நீங்கள் நலமா?' என உங்களிடம் கேட்போம்.
பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்ததும் அவர்கள் தமிழ்நாட்டின் பக்கமே வர மாட்டார்கள்; நிதி கேட்டா தர மாட்டார்.
பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?
இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீது, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
- விவிபாட் இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியது.
- இ.வி.எம் இயந்திர குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.
சென்னை:
விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இ.வி.எம் இயந்திரத்தில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- மிச்சாங் புயலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றது தமிழக அரசு.
- நிவாரணம் வழங்கியது தொடர்பான முழு விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றது.
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 நிவாரண தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 1,455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டு விட்டது.
நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சத்து 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்களை பரீசீலித்து சுமார் 53,000 குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை என மொத்தம் 1,487 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.






