search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது காலை உணவு திட்டம்:  முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    X

    உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது காலை உணவு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    • வேலூர், அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
    • அப்போது பேசிய அவர், தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் 'அவர்களை' தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைகிறார்கள். இன்று காலை, சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'ஒன்றிணைவோம் வா' என உங்களுக்காக பணியாற்றுவோம். ஆட்சியில் இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி 'நீங்கள் நலமா?' என உங்களிடம் கேட்போம்.

    பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. தேர்தல் முடிந்ததும் அவர்கள் தமிழ்நாட்டின் பக்கமே வர மாட்டார்கள்; நிதி கேட்டா தர மாட்டார்.

    பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?

    இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீது, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×