search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 5 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.4 கோடி பணம் சிக்கியது
    X

    சென்னையில் 5 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.4 கோடி பணம் சிக்கியது

    • தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கொரட்டூரில் மட்டும ரூ.2½ கோடி பணம் பிடிபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர்கள் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரியில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு, புரசைவாக்கம் கொண்டித்தோப்பு, கொரட்டூர் பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்களின் வீடுகள் என 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    நேற்று காலையில் தொடங்கிய வருமான வரி சோதனை இரவு வரை நீடித்தது.

    இந்த சோதனையின்போது தொழில் அதிபர்களின் வீடுகளில் ரகசிய அறைகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தனர்.

    இதில் தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொரட்டூரில் மட்டும ரூ.2½ கோடி பணம் பிடிபட்டுள்ளது. வேறு ஒரு இடத்தில் 1½ கோடி சிக்கியது. இந்த பணத்தை எண்ணி எடுத்துச் சென்றுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் அதிபர்களிடம் அதற்கு உரிய கணக்கு கேட்டுள்ளனர்.

    இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதற்காக தொழில் அதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட சோதனைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    தென்காசி, திருப்பூர், செய்யாறு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தென்காசி மற்றும் திருப்பூரில் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. செய்யாற்றில் துணிக்கடைகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    இதேபோன்ற சோதனைகளை அடுத்தடுத்த நாட்களிலும் தொடர வருமான வரித்துறை அதிகரிகள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×