என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணகிரி அருகே நடுரோட்டில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை ஆட்டிற்கு அணிவித்து, அந்த ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டினர்.
- கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் யார்? என்பதை கண்டறிந்து அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கிருஷ்ணகிரி அருகே நடுரோட்டில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை ஆட்டிற்கு அணிவித்து, அந்த ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டினர்.
இதற்கு நான் கண்டனம் தெரிவித்து, கடந்த 7-ந்தேதி எனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்கள் பதிவிட்டிருந்தேன்.
அதற்கு தேவராஜ் என்ற முகநூல் ஐ.டி. மூலமாக ஒரு நபர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், எனது கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
எனவே எனக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் யார்? என்பதை கண்டறிந்து அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.
- இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பல ஏக்கர் நிலப்பரப்பை பல கிலோ மீட்டர்களுக்கு துல்லியமாக ஆராய்ந்து முப்பரிமாணத்தில் படம் எடுத்துக் கொடுக்கும் திறன் கொண்ட முப்பரிமாண 3-டி லேசர் ஸ்கேனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த கேமராவை பயன்படுத்தி ஜெயக்குமார் தோட்டத்தின் 7 ஏக்கர் நிலப்பரப்பையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்.
தொடர்ந்து 'டம்ப் டவர்' மூலமாக சம்பவம் நடந்த நாளன்று ஜெயக்குமாரின் தோட்டத்தை சுற்றிலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை அறியும் சோதனை நடைபெற்றது. அதில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததாக கருதப்படும் நாளன்று 5 மணி நேரம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் விபரம் எடுக்கப்பட்டுள்ளது.
அதில் லட்சக்கணக்கான செல்போன் எண்கள் வந்திருப்பதாகவும், சந்தேகப்படும் நபர்களின் எண்களை எடுத்து அவர்களிடம் விசாரிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று நெல்லை வந்தார். அவர் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளின் விபரங்களை கேட்டறிந்துள்ளார். மேலும் அந்த விசாரணை அறிக்கையையும் அவர் படித்து அது தொடர்பான விளக்கங்களை கேட்டார்.
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு நெல்லைக்கு வர உள்ளதாகவும், அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் தியைன்விளை கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமாரின் வீடு மற்றும் தோட்டங்களில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் 17-ந்தேதி வரை 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று முதல் வரும் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-ந்தேதி மற்றும் 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி - 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளைகளில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் 17-ந்தேதி வரை 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழிபாதை போல பயணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை:
மதுரை மண்டல போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் ஏராளமான அரசு பஸ்கள் ஓட்டை உடைசலாக பராமரிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் போக்குவரத்து டெப்போவில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் டி.என்.58-என்.1542 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்தானது பின்புற கதவுகள் சேதமடைந்துள்ளது. அந்த கதவுகள் பின்புற வாசலில் சாய்த்து வைக்கப்பட்ட நிலையிலேயே இயக்கப்படுகிறது.
இதனால் பின்புற படிக்கட்டை பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை பேருந்து இயக்கப்பட்டபோது பின் வாசல் வழியாக ஏறுவதற்கு மாணவர்கள் முயற்சி செய்த போது வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
எதிர்பாராதவிதமாக அவசர காலகட்டத்தில் இது போன்ற படிக்கட்டுகளில் ஏற முற்பட்டால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
ஆனாலும் இதனை சற்றும் உணராத போக்குவரத்து துறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பேருந்தினை இயக்குவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்த நிலையிலும் மதுரை மண்டலத்தில் தொடர்ச்சியாக ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பொதுமக்களுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் உயிரோடு விளையாடும் வகையில் இதுபோன்று ஆபத்தான முறையில் பள்ளி வேளைகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இது போன்ற அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழிபாதை போல பயணிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக இயக்குவதற்கு தகுதியற்ற முறையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும்.
- கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பழவேற்காடு அடுத்த கருங்காலி பகுதியில் உள்ள பள்ளப்பாடு என்ற இடத்தில் கடல் அலைகள் கரையை தாண்டி வெளியே வந்தது. அந்த பகுதியில் கடற்கரையில் இருந்து சில அடிதூரத்திலேயே சாலை உள்ளது. மேலும் சாலையை ஒட்டி குறைந்த உயரத்திலேயே தடுப்பு சுவர் இருப்பதால் அதனை தாண்டி கடல் நீர் சாலைக்கு வந்தது.
இதன்காரணமாக கருங்காலி பகுதியில் உள்ள பழவேற்காடு சாலையில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் கடல் மணலால் மூடப்பட்டது. சாலையில் சுமார் 4 மீட்டர் உயரம் அளவிற்கு கடல்மணல் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம்,காமராஜர் துறைமுகம், மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக இதே நிலை நீடித்து வருகிறது. தற்போது கடல் அலையின் சீற்றம் குறைந்து உள்ள நிலையில் பழவேற்காடு சாலையில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதுவரை மணல் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பழவேற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் ஷேர் ஆட்டோவில் பள்ளப்பாடு பகுதி வரைக்கும் சென்று பின்னர் அங்கிருந்து மணலில் 1½ கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது.
எனவே பள்ளப்பாடு பகுதியில் கடல் நீர் சாலைக்கு வராமல் தடுக்க பெரிய கற்கள் அல்லது தடுப்பு சுவரை உயரமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்திடம் மனு அளித்து உள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வழக்கமாக மழை காலங்களில் கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும். ஆனால் இப்போது இது ஏற்பட்டு உள்ளது. வரும் மழை காலத்திலும் இதே பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே கருங்காலி பகுதியில் கடல் அலை சாலைக்கு வராத அளவில் தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும். அல்லது கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.
தற்போது சாலையில் உள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 40 கி.மீட்டர் தூரம் சுற்றி சென்று கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
- வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும்
சென்னை:
பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.
பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ஆடுகள் வரத் தொடங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ஆடுகள் வரையில் வர இருப்பதாக ஆட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் பொதுச் செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, பக்ரீத் பண்டிகைக்கு ஆந்திராவில் இருந்தே 90 சதவீத ஆடுகள் வருகை தந்துள்ளன.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் வந்துள்ளன. சென்னையில் புளியந்தோப்பு, ரெட்டேரி, வியாசர்பாடி ஆகிய 4 இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையில் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.
இந்த ஆண்டு உற்பத்தி குறைவால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஆடுகளின் விலை அதிகரித்துள்ளது. ரூ.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்றார்.
பக்ரீத் பண்டிகையை யொட்டி வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது.
- 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலேயே உள்ளது.
சென்னை:
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீத முள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தி உள்ளார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில், போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
- இளைஞர்கள் போட்டிபோட்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்துச் சென்றனர்.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குளத்துக்குள் இறங்கி மீன்களை பிடித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு சமத்துவ மீன்பிடி திருவிழா இன்று நடந்தது. ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த மீன்பிடித் திருவிழாவில் திண்டுக்கல், வடமதுரை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, சீலப்பாடி, ம.மு. கோவிலூர், வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குளத்துக்குள் இறங்கி மீன்களை பிடித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக சிறிய வலைகள் மற்றும் கூடைகளை பயன்படுத்தி மீன்பிடித்தனர்.
இதில் ஜிலேபி, கட்லா, ரோகு, மீசை விறா, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு மீன்கள் பிடிபட்டது. ஒரு கிலோ முதல் 20 கிலோ வரையிலான மீன்கள் வலையில் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் 1½ டன் வரை மீன்கள் பிடிக்கப் பட்டதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டிபோட்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்துச் சென்று தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
- நேர பற்றாக்குறை என்பது நீட் தேர்வுக்கு எப்படி பொருந்தும்?
- ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறி கொண்டிருக்கிறது.
சென்னை:
நீட் தேர்வு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை.
* எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது.
* கடந்த மே மாதம் 5 -ந்தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
* நீட் தேர்தவில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை.
* கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கி குளறுபடி நடைபெற்றுள்ளது.
* கடும் எதிர்ப்பை அடுத்து 1563 பேருக்கு கருணை மதிப்பெண்ணை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.
* ஒரு கேள்வி விட்டிருந்தால் 716 மதிப்பெண் கிடைத்திருக்கும், ஒரு கேள்வியை தவறாக எழுதியிருந்தால் 715 மதிப்பெண் கிடைக்கும்.
* உச்சநீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தரவில்லை.
* சட்டப்படிப்புக்கான ஆன்லைன் தேர்வையும், மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதுவதையும் எப்படி ஒப்பிட முடியும்?
* சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான தீர்ப்பை நீட் தேர்வுக்கு பொருத்திப்பார்ப்பது சரியல்ல.
* நேர பற்றாக்குறைக்கு கருணை மதிப்பெண் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
* நேர பற்றாக்குறை என்பது நீட் தேர்வுக்கு எப்படி பொருந்தும்?
* ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறி கொண்டிருக்கிறது.
* அரியானாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இருந்து 6 பேர் 720 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
* 2024-ல் மட்டும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
* கருணை மதிப்பெண் என முடிவெடுத்த போது தேசிய தேர்வு முகமை யாரிடம் அதனை தெரிவித்தது?
* நீட் குளறுபடிகளால் மாணவர்களிடையே அச்சம் எற்பட்டுள்ளது.
* நீட் விலக்கு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
* நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தி.மு.க. அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
- யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
கட்சியில் யாரை வேட்பாளராக அறிவிப்பது, கூட்டணி கட்சியான பா.ஜ.க. ஆதரவை பெறுவது போன்ற விவகாரங்களை கட்சியின் நிர்வாக குழுவினருடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசித்தார்.
தைலாபுரம் தோட்டத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் தீரன், வடிவேல் ராவணன், பு.த.அருள்மொழி, தர்மபுரி எம்.எல்.ஏ.வெங்கடேஷ், திருக்கச்சூர் ஆறுமுகம், ஜெய பாஸ்கர், வக்கீல் பானு, டாக்டர் செந்தில் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை டாக்டர் ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.
- நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது.
- புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது..
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது..
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
தற்போது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.
புஷ்பா-2 வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் தயாராக உள்ள மற்ற சினிமா படங்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
- தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதை 21 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்வதற்கான மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.
திம்பம் மலைப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. விபத்து ஏற்படும் நேரங்களில் தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.
இந்நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு காய்கறி லோடுகளை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று திம்பம் மலைப்பகுதியில் உள்ள 7-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினர். 7-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்ததால் தமிழக-கர்நாடக இடையேயான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பிறகு பண்ணாரியில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேன் மீட்கப்பட்டது. அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.






