என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், 12-6-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இது மட்டுமல்லாமல், இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள், அங்கு கொடிய தீவிபத்திற்கு ஆளானதுடன், உயிர்களை இழந்தும், தீக்காயங்களுக்குச் சிகிச்சைகள் பெற்றும் வரும் நிலையை எண்ணி, வேதனையில் ஆழ்ந்துள்ள என் அருமை தமிழ்நாட்டு உறவினர்களுக்கு, தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் வழங்கிடத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவிற்குள் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண். +91 1800 309 3793; அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண் +91 80 6900 9900, +91 80 6900 9901.
இந்த இரண்டு எண்கள் வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கம்.
- தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதம்.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னிடம் பேசியது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மேடையில் அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.
நேரப் பற்றாக்குறை காரணமாக அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.
விரிவாக பேச முற்பட்டதால், நேரப் பற்றாக்குறை காரணமாக பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்" என்றார்.
- 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
- உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தனது எக்ஸ் தள பதிவில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
குவைத் நாட்டின் மங்காப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் உடல்களை அவர்தம் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தூதரக உதவியுடன் துரிதமாக மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
குவைத் நாட்டின் மங்காப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 13, 2024
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் உடல்களை…
- 239 கிராம் அளவிலான டிஎம்டி, சைலோ, சைபின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல்.
- திருவண்ணாமலையில் நடக்கும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பயன்படுத்த முயற்சி.
திருவண்ணாமலையில் போதை பொருள் விவகாரத்தில் ரஷியாவை சேர்ந்த இருவரை கைது செய்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
239 கிராம் அளவிலான டிஎம்டி, சைலோ, சைபின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அமனிடா மஸ்காரியா, அயாஹூஸ்கா, கம்போ (தவளை விஷம்) ஆகியவற்றை திருவண்ணாமலையில் நடக்கும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பயன்படுத்த முயன்றது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கும் கூட்டம் ஒன்றில் இந்த போதைப் பொருளை பயன்படுத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் ரிஷிகேஷ், மணாலி உள்ளிட்ட பகுதிகளிலும் இது போன்ற அயாஹூஸ்கா செர்மனி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.
- நீட் தேர்வில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
- நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வலியுறுத்தல்.
நீட் தேர்வில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மத்திய தேர்வு முகமை (NTA) ஊழலில் ஈடுபட்டது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தேர்வு முகமை சார்பில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் இல்லாமல் தேர்வில் சரியான பதில் அளிக்கப்பட்டதற்கான மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் சமீபத்திய நீட் ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சிப்பது அவர்களின் சொந்த திறமையின்மையிக்கான மற்றொரு ஒப்புதலாகும்.
மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகள் மற்றும் துறைக்கு தொடர்பில்லாதவர்களால் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது.
அவர்களின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையில் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.
- பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு (ஒரு ஓட்டுநர் மற்றம் 48 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்கள்.
- தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த (CNG) மற்றும் (LNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்துகளை பரிச்சார்த்த முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,160 டீசல் பேருந்துகள் மூலம், தினசரி சுமார் 1.76 கோடி பொது மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் மொத்த செலவில் சுமார் 27% டீசலுக்காக செலவிடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.
அதன் அடிப்படையில், குறைந்த கார்பன் உமிழ்வு, அதிகப்படியான கிலோமீட்டர். டீசலைவிட 7% முதல் 20% வரை செலவு குறைந்த, சுற்றுச் சூழலுக்கு உகந்த, சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பேருந்துகளை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பரிச்சார்த்த அடிப்படையில் இயக்கிட. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 7 போக்குவரத்து கழகங்களில் தலா இரண்டு பேருந்துகளில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 14 பேருந்துகளை இயக்கவும், மேலும் மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகளில், திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 4 பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், முதல் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 4 திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பேருந்துகள் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பேருந்துகள் என மொத்தமாக 6 பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் இன்று தொடங்கி வைத்து, கீழ்கண்ட 6 வழித்தடங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.

மேலும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு (ஒரு ஓட்டுநர் மற்றம் 48 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்கள். ஏற்கனவே, 57 வாரிசுதாரர்களுக்கு 8 ஓட்டுநர். 48 நடத்துநர் மற்றும் ஒரு நிர்வாகப் பணியாளர் நியமன ஆணைகள் வழங்கப்பட்டு. தற்போது வரை மொத்தமாக 106 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், ராஜ்யசபா உறுப்பினர் மு.சண்முகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் நடராஜன், இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) அண்ணாதுரை, உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
- சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 12.6.2024 தலைமைச் செயலகத்தில், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
- தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் வாதம்.
- இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
அதனால், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது.
மேலும், இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை.
ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கிவிட்டார் என எக்கோ நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டுவருகின்றன.
- இதனால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் நாளைமுதல் இயக்க தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 547 பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே, முன்பதிவு செய்த பயணிகள் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. சனி, ஞாயறு உள்பட அடுத்த நான்கு நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள சுமார் 20 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை ஆணையர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இது தொடர்பாக பேச்சவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் திங்கட்கிழமை வரை பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக,
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த ஆம்னி பேருந்துகள், பயணிகளுக்கான ஆம்னி பேருந்துகள் போன்றே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீதமுள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தினார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம்.
- இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் விஜய் போட்டியிடுவார் எனவும் அறவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு திரைத்துறையில் இருந்து ஆதரவு திரண்டு வருகிறது.
இந்நிலையில், தவெக-வில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலான மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
- 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.
- மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் 'உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-
உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி..
நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம்!
இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.
மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி..
— M.K.Stalin (@mkstalin) June 13, 2024
நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம்!
இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய… pic.twitter.com/xyKmONTfw2






