என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.
- 4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
மேட்டூர் அணை 2020-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக டெல்டா பாசனத்துக்கு உரிய காலத்தில் அதாவது ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததால், அக்டோபர் 10-ந்தேதி முற்றிலுமாக மூடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய 167.25 டி.எம்.சி.யில் 78.07 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியது.
இதனால், கடந்த ஆண்டு குறுவை பருவ நெல் சாகுபடிக்கு கூட முழுமையாக காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டதால், மகசூல் இழப்பு ஏற்பட்டது. மேலும், காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது.
குறுவை சாகுபடிக்கு சுமார் 100 டி.எம்.சி.யும், சம்பா சாகுபடிக்கு 230 டி.எம்.சி.யும் என மொத்தம் 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 43.64 அடியும், நீர் இருப்பு 14.04 டி.எம்.சி.யும் மட்டுமே உள்ளது. இதை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், பாசனத்துக்கு மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆற்றுப் பாசனத்தை சார்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலையில் உள்ளதால், நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இதனால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் குறுவை சாகுபடியில் இயல்பான பரப்பளவு 3.50 லட்சம் ஏக்கராக இருந்தாலும், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால், கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கருக்குதான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.10 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 73 ஆயிரத்து 400 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கர் என்ற இலக்கில் 72 ஆயிரத்து 500 ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 92 ஆயிரம் ஏக்கரில் இதுவரை 29 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1,125 ஏக்கரிலும் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் மிக முக்கியமானதாக இருக்கிறது. தற்போது காவிரி நீருக்கு வாய்ப்பில்லாத நிலையில், தென்மேற்கு பருவமழை பெய்வதை பொருத்தே குறுவை சாகுபடியில் இலக்கை எட்ட முடியும். தொடர்ந்து பரவலாக மழை பெய்தால் மட்டுமே ஆழ்துளை குழாய் மூலம் செய்யப்படும் குறுவை சாகுபடியும் வெற்றிகரமாக அமையும் என்ற நிலை நிலவுகிறது.
கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்து, உபரிநீர் பெருக்கெடுத்து வந்தால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கமாக உள்ளது. தற்போது, அதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் ஒரு போக சாகுபடிக்காவது காவிரி நீர் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
இதனால் காவிரியில் நமக்குரிய பங்கீடு கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் மேலோங்கி உள்ளது.
- தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
- பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை:
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் போட்டியிட்ட 40 இடங்களிலும் இமாலய வெற்றியை பெற்றது.
இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா லினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகு திகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மாலை இந்த முப்பெரும் விழாவானது நடக்கிறது.
இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் கோவைக்கு வருகை தருகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை கோவைக்கு வருகிறார். அவர் முப்பெரும் விழா நடக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
அதனை தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடக்கும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று இரவு கோவையில் தங்கும் அவர் நாளை மாலை கொடிசியாவில் நடக்கும் முப்பெரும் விழாவிலும் கலந்து கொள்கிறார்.
முப்பெரும் விழாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன.

நாளை கோவையில் நடக்க உள்ள முப்பெரும் விழாவில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, ம.தி.மு.க சார்பில் கட்சியின் தலைமை செயலாளர் துரைவைகோ எம்.பி., உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இதே போல கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
முப்பெரும் விழாவையொட்டி விழா மைதானத்தில் 150 அடி நீளத்தில் 40 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று மைதானம் முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதேபோல விழாவுக்கான மேடையில் அலங்காரங்களும், மின் அலங்காரம் செய்யும் பணியும் நடக்கிறது. விழா நடைபெறும் இடம் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
- அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் உள்பட 7 பேர் சீட் கேட்கின்றனர்.
- தி.மு.க.வை எதிர்த்து பா.ம.க. சார்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிந்தாமணி புகழேந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ., வகித்த மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி. பொன். கவுதமசிகாமணி அறிவிக்கப்பட்டார். அதோடு அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் 7 அமைச்சர்களை கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பணிகளை உற்சாகமாக தொடங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் உள்பட 7 பேர் சீட் கேட்கின்றனர். இதனால் வேட்பாளரை இறுதி செய்வதில் அ.தி.மு.க. தலைமையில் இழுபறி நீடிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பா.ம.க.வின் உயர்மட்டக்குழு கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அண்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொறுளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சமூக நீதி பேரவை தலைவர் பாலு, பேராசிரியர் தீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வை எதிர்த்து பா.ம.க. சார்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிந்தாமணி புகழேந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் பேசி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே சமயம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி மறைந்தவுடன், இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு 3 தினங்களாகியும், பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை வெளியிடாமலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிட உள்ளது என்று அறிவிக்காமலும் மவுனம் காத்து வருகிறது. இதனால் அந்த கூட்டணியில் உள்ள பா.ம.க., தனது வேட்பாளரை நிறுத்த தயாராக உள்ள போதும், தேர்தல் பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகிறது.
- நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்வியை தமிழகத்தில் இருந்து படித்து முடித்து எத்தனையோ மருத்துவர்கள் இன்றைக்கு மருத்துவத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
- இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேணடும்.
சென்னை:
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்வியை தமிழகத்தில் இருந்து படித்து முடித்து எத்தனையோ மருத்துவர்கள் இன்றைக்கு மருத்துவத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். துணி துவைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தில் இருந்து வந்து நன்றாக படித்து இன்றைக்கு சென்னையிலேயே ஒரு சிறந்த இதயநோய் மருத்துவராக சேவையாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே மத்திய அரசு தமிழகத்தில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேணடும். தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
- சின்ன எலசகரி அம்பேத்கர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் அருகே மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சின்ன எலசகரி அம்பேத்கர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் குடித்த சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம்...பதறிய மக்கள்..தொற்றிய பரபரப்பு https://t.co/QD6B9qHqYA#Hosur | #water
— Thanthi TV (@ThanthiTV) June 14, 2024
- நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
- கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது.
பொள்ளாச்சி:
பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் புகழ்பெற்ற பொள்ளாச்சி சந்தை நேற்று கூடியது. இதில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்ததுடன், கூடுதல் விலையும் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே ஒரு பகுதியில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைபெறுகிறது. இங்கு பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள.
இந்த மாதத்தில் கடந்த சில வாரமாக சந்தைக்கு ஆடுகள் வரத்து ஓரளவே இருந்தாலும் நேற்று நடந்த சந்தையின் போது அதிகாலை முதலே வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர்.
நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் பல மாதத்துக்கு பிறகு மீண்டும் சந்தை களை கட்டியது.
பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகளை வாங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்புடன் இருந்ததுடன் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதிலும் எடை அதிகம் உள்ள கிடாவுக்கு கிராக்கி ஏற்பட்டது.
கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது. ஆனால் நேற்று 28 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.26 ஆயிரம் வரையிலும், சுமார் 40 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான கிடா கொண்ட பெரிய அளவிலான கிடா ரூ.37 ஆயிரம வரையிலும் என எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் விலை போனது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.1.25 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
- சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் கடத்தல் தங்கம் கடத்தப்பட்டு வருவது, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஜூஸ் மிக்சருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி (தோராயமாக) மதிப்பிலான 2.579 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மைசூருவில் இருந்து ஜூலை 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து.
- சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 2, 9 ஆகிய தேதிகளில் திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 1, 2, 8, 9 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.16021), மறுமார்க்கமாக, மைசூருவில் இருந்து ஜூலை 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16022) ரத்து செய்யப்படுகிறது.
மேலும், திருப்பதியிலிருந்து ஜூலை 2, 9 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் வரும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16204), மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 2, 9 ஆகிய தேதிகளில் திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16203) ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, பெங்களூருவில் இருந்து ஜூலை 2, 9, 30 மற்றும் ஆகஸ்டு 6, 13 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12658), மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 3, 10, 30, 31 மற்றும் ஆகஸ்டு 6, 7, 13, 14 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12657) ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன.
- மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் வரும் 15-ந்தேதி (அதாவது நாளை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். கல்வியிலும், தொழில் துறையிலும் கோலோச்சிய கோவை, தி.மு.க. ஆட்சியில் செயலிழந்து இருக்கிறது.
கடந்த 30 வருடங்களாக, மறைந்த கருணாநிதி காலத்தில் இருந்து, தி.மு.க.வின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற வரி மட்டும் தவறாமல் இடம்பெறும்.
ஆனால், திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.
சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன. ஆனால் தி.மு.க.வுக்கு அவை குறித்து கவலை இல்லை. தி.மு.க. அரசின் மின்கட்டண உயர்வால், விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கி இருக்கிறது.
கோவை மாநகருக்கு உடனடி தேவை, சாலை வசதிகளும், தண்ணீர்ப் பஞ்சத்துக்கான தீர்வுகளும்தான். அதுபோக, மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.
இதில் முப்பெரும் விழா என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து, கோவையை மேலும் குப்பைக் கிடங்காக ஆக்குவதுதான் இந்த விழாவின் விளைவாக இருக்கப் போகிறது.
உண்மையிலேயே தி.மு.க.வுக்கு, கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கோவை மக்களின் அறுபது ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். கோவை பகுதி நீர்நிலைகளை சீரமைத்து, தண்ணீர் பஞ்சத்தை தடுத்திருக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள கம்யூனிஸ்டு அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுத்திருக்க வேண்டும்.
கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு, தமிழக பா.ஜனதா சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில், பத்தில் ஒரு பங்கை தி.மு.க. அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும். ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அ.தி.மு.க. பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு இடைத்தேர்தலை எதிர்கொண்டு 11-வது தொடர் தோல்வியை வரவு வைத்துக்கொள்வதா?
- கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்கக்கூடாது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத்தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.
எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
- மாநில ஊழியருக்கான அகவிலைப்படியை 01.01.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநில ஊழியருக்கான அகவிலைப்படியை 01.01.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு சேவை மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பூமியில் ஏற்படும் காலநிலை தாக்கங்களுக்கான தரவுப் புள்ளிகளை கண்காணிக்கும்.
- நிலத்தில் இருந்து வெப்ப உமிழ்வு, மேற்பரப்பு ஆற்றல், நகர்ப்புற வெப்பத்தீவுகள் மற்றும் பிற உலகளாவிய அளவுருக்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற 'திரிஷ்ணா' திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
இது உயர்- தெளிவு இயற்கை வள மதிப்பீட்டிற்கான வெப்ப அகச்சிவப்பு - சிவப்பு 'இமேஜிங்' செயற்கைக்கோள் என்று அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை இந்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்தியா, ஐரோப்பா கடுமையான வெப்பத்தால் தாக்கப்பட்டு இருக்கும்போது, பூமியில் ஏற்படும் காலநிலை தாக்கங்களுக்கான தரவுப் புள்ளிகளை கண்காணிக்கும். அத்துடன், இது நிலத்தில் இருந்து நீர் ஆவியாதலை அளவிடுகிறது.
இந்த பணி மூலம் நீர் இருப்பு மற்றும் உருகும் பனிப்பாறைகள் உள்ளிட்ட இயக்கவியல் நடவடிக்கைகள், உயிர்க்கோளத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலத்தில் பயன்படுத்தப்படும் நீரை அளவிடுவது எப்படி என்பதை அறிய முடியும். அத்துடன், இந்த செயற்கைக்கோள் வெப்ப முரண்பாடுகள் மற்றும் கூர்முனை, நிலத்தில் இருந்து வெப்ப உமிழ்வு, மேற்பரப்பு ஆற்றல், நகர்ப்புற வெப்பத்தீவுகள் மற்றும் பிற உலகளாவிய அளவுருக்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
இந்த செயல்பாட்டில், செயற்கைக்கோள், நீராவி மற்றும் உலகம் முழுவதும் உள்ள வளிமண்டலத்தில் உள்ள மேகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்யும். இது தற்போது 2025-ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் இயங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
செயற்கைக்கோள் 2 முதன்மை ஆய்வு கருவிகள் (பேலோடுகள்) சுமந்து செல்லும். 'தெர்மல் இன்பிரா-ரெட்' (டி.ஐ.ஆர்.) ஆய்வு கருவியை பிரான்ஸ் விண்வெளி நிறுவனம் வழங்க உள்ளது. இது 4 'சேனல்' நீண்ட அலைநீள அகச்சிவப்பு 'இமேஜிங் சென்சார்' ஆகும். இது உயர்-தெளிவு மேற்பரப்பு வெப்பநிலையை அறிய முடியும். இதுதவிர வெவ்வேறு பகுதிகளில் நிலத்தில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் அளவையும் இது வரைபடமாக்கும்.
காணக்கூடிய அகச்சிவப்பு- சிவப்பு குறுகிய அலை அகச்சிவப்பு- சிவப்பு (வி.என்.ஐ.ஆர்- எஸ்.டபிள்.யூ.ஐ.ஆர்.) என்ற ஆய்வு கருவி இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு வருகிறது. பூமியின் மேற்பரப்பின் பிரதிபலிப்பு அல்லது 'ஆல்பிடோ'வை 7 பட்டைகளில் வரைபடமாக்கும். இது பூமியின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் வெப்பத்தின் அளவை அளவிடுகிறது. பல்வேறு உயிர் இயற்பியல் மற்றும் கதிர்வீச்சுகளை கணக்கிடும். இந்த பணியின் எதிர்பார்க்கப்படும் பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணியானது 'ரிமோட் சென்சிங்' தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுப்பாதையில் தொலைவில் இருந்து பூமியை கண்காணிக்கிறது. அதீத வெப்பநிலை மற்றும் வானிலை நிகழ்வுகள் பூகோளத்தை பிடித்துக் கொள்வதால் செயற்கைக்கோள் மற்றும் அது வழங்கும் தரவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நீர்நிலை, விவசாயத்தொழில்கள் மற்றும் இந்தியாவில் உள்ள விவசாய சமூகம் மத்தியில், நீரில் புதிய நிலையான கொள்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய தரவுகளை வழங்குவதன் மூலம் முக்கியமான நீர் மற்றும் உணவு பாதுகாப்பு பிரச்சனைகளை இந்த பணி தீர்க்கும்.
காலநிலை மாற்றம் தணிப்பு முயற்சிகள், காலநிலை மாற்றத்தின் மானுடவியல் அல்லது மனிதனால் தூண்டப்பட்ட தாக்கங்களை மையமாகக் கொண்டு, முக்கியமான நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு சவால்களை 'திரிஷ்ணா' பணி எதிர்கொள்ளும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






