என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
    • கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற முந்திரி பருப்பு, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது

    மதுரை:

    சந்தை நிலவரத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தினந்தோறும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். வரத்து குறைவு மற்றும் அதிகரிப்பு, மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் மார்க்கெட்டில் இன்றைய தானியங்கள் விலை நிலவரம் (கிலோவில்)

    துவரம் பருப்பு 1 கிலோ ரூ.186, பாசிப்பருப்பு-ரூ.112, பாசிப்பயறு-ரூ.110, உளுத்தம் பருப்பு-ரூ.140, பச்சை பட்டாணி-ரூ.98, வெள்ளை பட்டாணி-ரூ.49, கருப்பு சுண்டல்-ரூ.94, வறுகடலை-ரூ.98, மொச்சை-ரூ.132, சிவப்பு தட்டை பயறு-ரூ.98, மசூர் துவரை-ரூ.70, சீரகம்-ரூ.370, சோம்பு-ரூ.130, கடுகு-ரூ.70, வெந்தயம்-ரூ.78, மல்லி பெருவெட்டு-ரூ.95, மல்லி சிறியது-ரூ.90, மீல் மேக்கர்-ரூ.89, கேழ்வரகு-ரூ.42, காணப்பயறு-ரூ.76, கோதுமை-36, கம்பு-ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற முந்திரி பருப்பு, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற மிளகு இந்த வாரம் 100 ரூபாய் உயர்ந்து 750 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த வாரம் ரூ.2,400-க்கு விற்ற ஏலக்காய் 300 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.2,700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து அதிக அளவில் வரக்கூடிய முந்திரி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளதும் இந்த விலையறேற்றத்திற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.82 அடியாக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து 57 அடியை எட்டியது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 607 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.58 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.63 அடியாக உள்ளது.

    இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.82 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    • மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டு உள்ளதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
    • தமிழக சட்டசபை கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளதால் மின் கட்டணம் குறித்த அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை அப்போது அமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளது.

    சென்னை:

    அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணம் 5 சதவீதம் உயரும் என தெரிகிறது. அதாவது யூனிட்டுக்கு 23 பைசா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான மின் வினியோகம் செய்வது முதல், மின்சாரம் தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மின் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்த நிறுவனங்களின் வருவாய், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தற்போதைய நிலவரப்படி ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின் வாரியம் செயல்படுகிறது.

    இதன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மின் கட்டணம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டது.

    இது தொடர்பான ஆணையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் அதாவது அடுத்த மாதம் (ஜூலை) மின் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளன.

    அதன்படி நடப்பாண்டில் ஏப்ரல் மாத பண வீக்க அளவான 4.83 சதவீதம் அளவுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

    அதன்படி இப்போது ரூ.4.60 ஆக இருக்கும் ஒரு யூனிட் மின்சார கட்டணம் இனிமேல் ரூ.4.83 ஆக உயரும் என தெரிகிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இந்த கட்டண உயர்வு 5 சதவீதம் வரை அமல்படுத்தப்படும் என தெரிகிறது. இதன் மூலம் யூனிட்டுக்கு 23 பைசா வரை உயரும்.

    கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாநில அரசு நுகர்வோர்களுக்கான கட்டண உயர்வை மானியமாக ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை மாநில அரசு மானியம் தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.

    இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டு உள்ளதால் 2027 வரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

    வழக்கம் போல வாரியத்தின் வரவு-செலவு விவரங்கள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இதுவரை எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. எனவே மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கவில்லை.

    தமிழக சட்டசபை கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளதால் மின் கட்டணம் குறித்த அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை அப்போது அமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
    • மாணவர்களை பார்க்கும்போது எனக்கு இளமை திரும்புகிறது.

    சென்னை:

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் 22,931 வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் கூறியதாவது:-

    * காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

    * மாணவர்களை பார்க்கும்போது எனக்கு இளமை திரும்புகிறது.

    * புதுமைப் பெண் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

    * 'புதுமைப் பெண் திட்டம்' போல வரும் ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும்.

    * கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

    * பள்ளிக்கல்வித்துறை உலக தரத்தில் கொண்டு செல்ல அமைச்சர் அன்பில் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • காரில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

    காங்கயம்:

    திருப்பூரில் இருந்து ஒரு காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி செல்லப்படுவதாகவும், எனவே அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷாராக இருக்கும் படியும், சோதனை சாவடியை கடந்து செல்லும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்யுறுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும், சோதனை சாவடிகளில் பணியில் இருந்த போலீசாரும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர்.

    இந்தநிலையில் திருப்பூர்-காங்கயம் சாலையில் காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் போலீஸ் நிலைய பகுதி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் தாராபுரம் நோக்கி அதிவேகமாக சென்றது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் அந்த காரை பின்னால் விரட்டி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை கவனித்த கார் டிரைவர், காரின் வேகத்தை அதிகப்படுத்தினார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.

    இதையடுத்து கார் டிரைவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் (வயது 24) என்பதும், அவர் ஓட்டி வந்த காரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும், பெங்களூரில் இருந்து பழனிக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அருளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. சினிமா பாணியில் காரில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்த சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
    • 26-ந்தேதி மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது.

    இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும். 24-ந்தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26-ந்தேதி (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    மேலும் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


     

    • தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    • வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி (வயது 71).

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 6 மாதத்திற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.

    அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து தீவிர பணியில் இறங்கி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதன் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த சூழலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

    வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.

    இதனால் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளதோடு அங்கு போலீசார், பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.
    • தடைகாலம் நிறைவடைந்தவுடன் அனைத்து படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

    இந்த தடைகாலத்தின்போது மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வலைகள், போட் பலகை உள்ளிட்ட உபகரணங்களும் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தங்களது விசைப்படகுகளை 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை சீரமைத்து கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகி உள்ளனர். விசைப்படகுகளில் வலைகள், ஐஸ்கட்டிகள், டீசல் கேன்கள் உள்ளிட்ட பொருட்கள் இன்று காலையில் சிறிய பைபர் படகுகள் மூலம் கொண்டு சென்றனர். தடைகாலம் நிறைவடைந்தவுடன் அனைத்து படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

    தடைகாலம் நிறைவடைந்து 61 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் இறால் மீன், நண்டு, கணவாய் மற்றும் விலை உயர்ந்த மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். மீன் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து எடுப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மீனவர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். ஆர்வம் மிகுதியால் எல்லைதாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • பிரசவவலி அதிகமாகவே தனலட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    • தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    மணப்பாறை:

    மணப்பாறையை அடுத்த கே பெரியபட்டி அருகில் உள்ள தெற்கு சேர்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி தனலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியகா இருந்த தனலட்சுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனே அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மணப்பாறையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு சென்று தனலட்சுமியை ஏற்றிக் கொண்டு மணப்பாறை நோக்கி சென்றது.

    வரும் வழியில் பிரசவவலி அதிகமாகவே தனலட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனலட்சுமிக்கு 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நிபுணர் நல்லழகர், ஓட்டுனர் காளிமுத்து பணியில் இருந்தனர்.

    பின்னர் தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    • கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டது.
    • வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

    இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டது.

    இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந்தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் 4 நாளில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • காலை 9 மணிக்கு மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா மற்றும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளதால் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தி.மு.க. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 9 மணிக்கு மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா மற்றும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் காலை 11 மணிக்கு திருப்பூர் அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் முத்துகிருஷ்ணன் திருமண மண்டபத்தில் நடக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 265 ஊராட்சிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளதால் திருப்பூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக சிகிச்சை பெற்று விரைவில் குணம் பெற வழிவகை ஏற்படும்.
    • மக்களின் உயிருடன் விளையாடும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை நகரில் உள்ள மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். திடீர் உடல் நலக்குறைவோ, மாரடைப்போ, விபத்தின் காரணமாக எலும்பு முறிவு, தலைக்காயம் ஆகியவை ஏற்பட்டாலோ, 15 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

    இரண்டு மருத்துவமனைகளும் முழு வீச்சில் செயல்பட்டால்தான், நோய்களினாலும், விபத்துகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக சிகிச்சை பெற்று விரைவில் குணம் பெற வழிவகை ஏற்படும். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசு மருத்துவமனையை மூடுவது என்ற தி.மு.க. அரசின் செயல்பாடு "அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. மக்களின் உயிருடன் விளையாடும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

    நாகை நகரில் வசிக்கும் மக்களின் துன்பங்களைப் புரிந்து கொண்டும், நேரத்தின் அருமையை கருத்தில் கொண்டும், நிதியைப் பற்றி யோசிக்காமல் மக்களின் உயிரை மட்டுமே கவனத்தில் கொண்டு, 150 ஆண்டு கால பழமைவாய்ந்த நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நாகை நகரில் தொடர்ந்து முழுவீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×