என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.
- குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி:
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் உடல் கருகி பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்கள் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜு எபினேசர் (வயது 54) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இவர் அங்குள்ள பெட்ரோலியம் மற்றும் ஆயில் நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் ட்ரெய்லர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
இவர் அந்த நிறுவனம் வழங்கிய தங்குமிட தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது தீ விபத்தில் சிக்கியுள்ளார். அவர் இறந்ததாகவும், அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் வந்த முரண்பட்ட தகவல்களால் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
தனது தந்தையின் நிலை அறிய வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை அவரது மகன் குணசீலன் ஒரு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் கூறும் போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலமாக தந்தையிடம் பேசினேன். பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்து. அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.
ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அரசு கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை ஆனால் இதுவரை அவருடைய நிலையை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. இதற்கிடையே அப்பா பணியாற்றி வந்த தனியார் நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது என்னுடைய தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் தூதரக அதிகாரி இதை உறுதி செய்யவில்லை என தெரிவித்தார்.
இதற்கிடையே கலெக்டரிடம் மனு அளித்து சென்ற பின்னர் நேற்று இரவு சென்னையில் இருந்து தமிழக அரசின் அயலக தமிழர்கள் நல வாழ்வு துறை அதிகாரி ஒருவர் குணசீலனை தொடர்பு கொண்டு அவரது தந்தை எபினேசர் உயிரிழந்ததை உறுதி செய்தார்.
அப்போது தந்தையின் உடலை விமான மூலம் கொச்சிக்கு கொண்டு வந்து பின்னர் திருச்சிக்கு கொண்டு வருவதாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தரும் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு ராஜூ எபினேசரின் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.
எபினேசரின் மனைவி ராஜேஸ்வரி கூறும்போது, கடந்த 11-ந் தேதி மாலை கணவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். விசா முடிவதால் அடுத்த மாதம் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார். அவர் பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.
குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
கிருஷ்ணகிரி:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.7 கோடியே 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை ஆனது.
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை 17ம் தேதி முஸ்லீம் மக்களால் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் இன்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் விலை போகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.
குறைந்த பட்சம் ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு ஆடு 67 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. இன்று கிடா ஆடுகள் அதிகம் விற்பனை ஆனது. 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனதால், இன்று ஒரே நாளில் 7.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது.
- கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்!
சென்னை:
10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசியல் மேடைகளில் தான் ஐம்பெரும் விழாக்கள், முப்பெரும் விழாக்களை நடத்துவோம். ஆனால், இப்போது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்பு மாணவர்களுக்காக நம்முடைய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஒரு பெரிய பட்டியலே வந்தது.

அதிலும் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகிற மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது. அதுதான் "புதுமைப் பெண் திட்டம்". எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், இந்த தேர்தல் பிரசாரத்தின்போது நான் சந்தித்த மாணவிகளாக இருந்தாலும், பலரும் இந்த "புதுமைப்பெண்" திட்டத்தை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். மாணவிகள் தங்களின் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை என்றும், இந்த திட்டத்தில் மாதா மாதம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் தங்களின் தேவைக்கு உதவியாக இருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற "தமிழ்ப் புதல்வன் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகிற ஆகஸ்டு மாதத்தில் இருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற வைத்த 1,728 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சாதனையை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது. தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம் என்றால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கும் அங்கீகாரம்.
100 சதவீதம் தேர்ச்சி என்று சொல்லி பாராட்டுவது மூலமாக அந்த இலக்கை அனைவரும் அடைய வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்கு தான் இந்த விழா.
தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களை பாராட்ட விரும்புகிறேன். எந்த பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான். ஆனால், நம்முடைய தாய்மொழி தமிழ். அதுவும் உயர்தனிச் செம்மொழி என்பதால், அதில் 100 மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பான பாராட்டுக்குரியவர்கள்.

12-ம் வகுப்பில் 35 பேரும், 10-ம் வகுப்பில் 8 பேரும், தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கின்றனர். அவர்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
அடுத்ததாக, கடந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு, 95 தங்கப் பதக்கங்களையும், 112 வெள்ளிப் பதக்கங்களையும், 202 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற மாணவர்களையும் மனதார நான் பாராட்டுகிறேன்.
கடந்த 10-ந்தேதி பள்ளிகள் திறந்தபோது, நான் போட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூட மாணவர்களின் மனநலனுடன் உடல்நலனும் முக்கியம் என்று சொல்லி இருந்தேன். அதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று.
இந்த பதக்கம் பெற்றவர்கள், அடுத்து, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கவேண்டும். உங்களில் இருந்து பல ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்தி, மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பித்தல் முறைகள் அமையும் என்று நம்புகிறேன்.
அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும்.
முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை இன்றைக்கு துவக்கி வைத்திருக்கிறேன். என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு.
மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்... படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை "நீட்" போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். "நீட்" போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு.
கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்! அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். "படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்" என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., திண்டுக்கல் லியோனி, பரந்தாமன் எம்.எல்.ஏ. மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.
- சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் ஆஜராவதற்காக தெற்கு கள்ளிகுளம் முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.
அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயக்குமார், மரண வாக்குமூலம் என்ற பெயரில் எழுதி இருந்த முதல் கடிதத்தில் தனது உயிருக்கு ஆபத்து இவர்களால் நேரலாம் என்று பலரது பெயரை குறிப்பிட்டு இருந்தார்.
அதில் முதல் நபராக ஆனந்த ராஜாவின் பெயரை குறிப்பிட்டு இருந்ததார். இந்நிலையில் இன்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.
- குமரிக்கு வருகை தந்து எழுச்சிமிகு பிரசாரம் செய்ததற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
மேலும் தேர்தல் பிரசாரத்திற்காக குமரிக்கு வருகை தந்து எழுச்சிமிகு பிரசாரம் செய்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
- அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது.
- சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில், அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ரூ.5, 2 சப்பாத்தி ரூ.3 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில்பெரும் வரவேற்பை பெற்றது.
அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. பொதுமக்கள் உண்பதற்கான மேஜைகளின் கால்கள் உடைந்துள்ளன. இதனால் அங்கு உணவு அருந்த வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றையும் மாற்றி சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
அம்மா உணவகத்தால் 20 கோடி ரூபாய் வருமானம், ஆனால் குறைந்த விலையில் உணவு வழங்குவதால் ரூ.140 கோடி செலவாகிறது. ஆண்டுதோறும் ரூ.120 கோடி நஷ்டத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.
சமையலறையில் உள்ள ஃபிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பழுதடைந்த இயந்திரங்கள், சமையல் பாத்திரங்களை மாற்ற மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை விடுத்துள்ளது.
பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.
- 7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர்.
- ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் சுப்பையா வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் நடுரோட்டில் அவரை சுற்றி வளைத்து கொலையாளிகள் வெட்டிக்கொன்றனர். எதிர் திசையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகளும் வெளியானதால் டாக்டர் சுப்பையா கொலை அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. டாக்டர் சுப்பையாவுக்கும், பொன்னுசாமிக்கும் இடையில் இருந்த நிலப்பிரச்சனை, கொலை சதி திட்டம் பற்றி போலீஸ் தரப்பில் விவரிக்கப்பட்டது.
கொலை செய்ய கூலிப்படையினருக்கு கொடுப்பதற்காக ரூ.7.5 லட்சம் பரிமாற்றம் செய்தது, அப்ரூவரானவரின் சாட்சியம் ஆகியவற்றையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு கூறப்பட்டது.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர். இதனால் 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
- டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் இந்த சமோசா விற்கப்பட்டு வருகிறது.
- உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூர், அரண்மனைக்குளம் ரோடு, தெற்கு ரத வீதி, பாறைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சமோசா தயாரிக்கும் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து திண்டுக்கல் மற்றும் இதனை சுற்றியுள்ள 20 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராம பகுதிகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதிகாலை முதல் இருசக்கர வாகனத்தில் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் இந்த சமோசா விற்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் விற்கப்பட்டு வருகிறது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரமற்ற முறையில் சமோசாக்கள் தயாரிக்கப்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 27 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு ரதவீதி, நாராயணபிள்ளை தெருவில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். தங்கவேல், பரமசிவம் என்ற 2 நபர்களின் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி சாக்கடையின் அருகே காய்கறிகள் வைத்து சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தி வந்தனர். இதனை அடுத்து 2 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு திண்பண்டங்களை சுகாதார மற்ற முறையில் தயாரித்து வினியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- பிரதமராக பொறுப்பேற்றதும் பிரதமர் மோடி முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் பிரதமராக பொறுப்பேற்று நரேந்திர மோடி முதல் முறையாக சென்னை வர உள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் அரசு அமைத்துள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமராக பொறுப்பேற்றதும் பிரதமர் மோடி முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார்.
இந்நிலையில், வருகிற 20-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை இயங்க உள்ள வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி முதல் முறையாக சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர்.
- ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று ஏடிஜிபி வெங்கட்ராமன், சி.பி.சி.ஐ.டி . ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நெல்லைக்கு வருகை தந்து ஜெயக்குமார் இறந்து கிடந்த அவரது தோட்டம், அவரது வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களது மகன்கள் கருத்தையா, மார்ட்டின் மற்றும் ஜெயக்குமாரின் மனைவி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. முன்னதாக இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் 'டம்ப் டவர்' மூலமாக ஜெயக்குமார் மரணம் அடைந்த நாளன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்கள் காட்டப்பட்ட நிலையில் அதனை நேற்று கவனத்துடன் பகுப்பாய்வு செய்தனர். அதில் 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர். அந்த 25 செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அந்த நபர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த எண்கள் அனைத்தும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் மற்றும் கொலை செய்யப்பட்ட நாள் அன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த சந்தேக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அதன் உரிமையாளர்களிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரிக்கும் பட்சத்தில் இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர்.
இதனால் ஜெயக்குமார் வழக்கு சூடு பிடித்துள்ளது. இதன் மூலமாக ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று 2-வது நாளாக நெல்லையில் முகாமிட்டு இந்த விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்.
மேலும் அவர் விசாரணை குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி அதன்படி விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளார்.
- கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 2 காட்டு யானை புகுந்தது.
- பட்டாசு வெடித்தும், தீ கம்பத்தை காட்டியும் யானைகளை விரட்டினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி அருகே திகினாரை கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 2 காட்டு யானை புகுந்தது.
இதை தொடர்ந்து யானைகள் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தையும், டிரான்ஸ்பார்மர் கம்பத்தையும் உடைத்து சேதம் செய்துள்ளது. சத்தம் கேட்டு இரவு காவலில் இருந்த விவசாயிகள் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது 2 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து யானைகளை விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், தீ கம்பத்தை காட்டியும் யானைகளை விரட்டினர்.
தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த 2 காட்டு யானைகளும் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன. இதன் பிறகே விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
- பொது வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு படுதோல்விடைந்து விட்டது.
- உளுத்தம் பருப்பு மீண்டும் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது.
சென்னை:
பா.ம.கா. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெளிச்சந்தையில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும், ஏழை மக்களுக்கு அவை கட்டுபடியாகும் விலையில் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தொடங்கப்பட்டது.
பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகும் நிலையில், மக்களுக்கு அந்தப் பொருட்கள் இன்னும் வழங்கப்படாததன் மூலம் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு படுதோல்விடைந்து விட்டது என்பது உறுதியாகியிருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை உடனே வழங்க தமிழக அரசின் பொதுவழங்கல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






