என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதம் என தகவல்.
நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை.
தோல்வி குறித்து அப்போது பேசிய அண்ணாமலை மற்றும் தமிழிசை கூட்டணி குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். இதனால், முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிப்பதாக கூறப்பட்டு வந்தது.
இதைதொடர்ந்து, விழா மேடைக்கு வந்த முன்னாள் தெலுங்கானா கவர்னரும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் வகையில் பேசினார். தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை போர்ரை தவிர்க்கவே கண்டித்ததாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில், இன்று தமிழிசையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சந்திப்பின்போது, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, தமிழிசை- அண்ணாமலை இடையே கருத்து வேறுபாடு என தகவல்கள் பரவி வந்தன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழிசையை அண்ணாமலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது சந்திப்பு தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
- சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர்.
- ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அம்பத்தூர்:
அம்பத்தூரில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அயப்பாக்கம் ஏரிக்கரையோரமாக இன்று காலையில் டன் கணக்கில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்பட்டிருந்தது.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர். இவ்வளவு பழத்தை வீணாக கொட்டிவிட்டு சென்றுள்ளார்களே என்று கூறி பலரும் வேதனைப்பட்டனர்.
இந்த ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போன ஆப்பிள்களாக இருந்தன. அதில் சில ஆப்பிள் பழங்கள் நன்றாக இருந்தன. அவைகளை பொதுமக்களில் சிலர் எடுத்துசென்றதையும் காண முடிந்தது.
அப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இதைதொடர்ந்து ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டன் கணக்கிலான இந்த ஆப்பிள் பழங்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கடைகளில் கிலோ ரூ. 200 முதல் 300 வரை விற்பனையாகும் ஆப்பிள் பழங்கள் சாலையோரமாக கொட்டப்பட்டு இருந்ததை பார்த்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க. ஆட்சியில் டிரைவர் -கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வகித்து வந்த போக்குவரத்து துறையில் 81 பேருக்கு வேலை தருவதாக கூறி ரூ.1.62 கோடி பணத்தை பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 2018-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ரூ.1 கோடியே 62 லட்சம் பணம் பெற்ற விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் 2019-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். இதன் பிறகே இந்த வழக்கு வேகம் எடுத்தது.
இதை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில்பாலாஜி கோர்ட்டை நாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதைதொடர்ந்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியிரில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஜூன் 21-ந்தேதி இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் அங்கேயே நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி ஜூலை மாதம் 18-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பிறகு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டாக சிறையிலேயே இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி ஜாமின் மறு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.
- அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் மீண்டும் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வமும் குரல் எழுப்பி வருகிறார்.
- ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டிலேயே அனைத்து முக்கியமான அரசியல் முடிவுகளையும் எடுத்து வந்தார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த கட்சி பிளவுகளை சந்தித்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் எட்டிப்பிடித்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறார்.
இரட்டை தலைமையாக ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து செயல்பட்ட பழனிசாமி பின்னர் அவரையும் ஓரம் கட்டினார். இப்படி அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் வெளியேற்றப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள அனைத்து தேர்தலிலும் அந்த கட்சி தோல்வியையே தழுவியுள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் சசிகலா எனது தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்படும் என்று கூறி வருகிறார். ஆனால் அதற்கான நேரம் காலம் எதையும் அவர் குறிப்பிடவில்லை. எப்போது பேட்டி அளித்தாலும் எனது தலைமையில் நிச்சயம் அ.தி.மு.க. மீண்டும் வலிமை பெறும் என்று மட்டும் கூறி வருகிறார்.
இதனால் அ.தி.மு.க.வை மீட்க சசிகலா ரகசிய திட்டம் வைத்துள்ளாரோ என்கிற எண்ணம் அனைவரது மனதிலுமே இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் களத்தில் செயலாற்றி வரும் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் இணைந்து சசிகலாவும் செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அது போன்று அவர் யாருடனும் கைகோர்க்கவில்லை. தனியாகவே அறிக்கை வாயிலாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசிகலா தேர்தல் தோல்வி பற்றி அ.தி.மு.க.வினர் யாரும் கவலைப்பட வேண்டாம். நிச்சயம் நாம் எழுச்சி பெறுவோம் என்று ஏற்கனவே கூறியிருந்தார். அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக விண்ணப்ப படிவம் போன்ற கடிதத்தையும் அவர் அனுப்பி வைத்திருந்தார். இதனால் சசிகலா அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க ரகசிய திட்டங்களை தீட்டி செயலாற்றி வந்தார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சசிகலா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் சென்னை வர உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் மீண்டும் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வமும் குரல் எழுப்பி வருகிறார். இது போன்ற சூழலில் தான் சசிகலாவின் தொண்டர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த சந்திப்பின் போது தொண்டர்களிடம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கேட்டு அதிரடி காட்டவும் சசிகலா முடிவு செய்துள்ளார். இதனால் சசிகலாவின் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, அரசியல் களத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் சின்னம்மா கட்சிக்கு தலைமை தாங்கினால் நிச்சயம் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் இதனை அடியோடு மறுக்கிறார்கள். சசிகலாவின் சந்திப்பு தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது அவர் ஆவேசமாக பதில் அளித்தார். சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் அவருக்கு எந்தவித பலனையும் கொடுக்கப் போவதில்லை.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்று அவர் கூறி வருவது புரியாத புதிராக உள்ளது. அ.தி.மு.க. தற்போது ஒன்றுபட்டு தான் உள்ளது. எந்த பிளவுமும் இல்லை. நாங்கள் சசிகலாவிடமிருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுத்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிச்சயம் அ.தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எனவே மீண்டும் சசிகலாவை இணைக்கு நினைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை என்றார்.
இதனால் சசிகலாவின் தொண்டர்கள் சந்திப்பு அவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்பது தெரியவில்லை. அதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டிலேயே அனைத்து முக்கியமான அரசியல் முடிவுகளையும் எடுத்து வந்தார். அப்போது ஜெயலலிதாவுடன் சசிகலா உடன் இருந்தார். அந்த வீட்டுக்கு நேர் எதிரிலேயே சசிகலா புதிய வீட்டை கட்டி குடியேறி உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் இந்த வீட்டில் வசித்து வரும் அவர் இதுவரை அரசியல் சார்ந்த சந்திப்புகளை நடத்தியது இல்லை. நாளை மறுநாள்தான் அவர் தொண்டர்களை சந்தித்து அரசியல் தொடர்பான கருத்துக்களை கேட்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 21-ந் தேதி நடக்கிறது.
- தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
விக்கிராவண்டி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். ஆனால் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கபடவில்லை.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 21-ந் தேதி நடக்கிறது.
வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதை தொடர்ந்து 11.10 மணிக்கு அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவர் அக்னி ஆழ்வார் சுயேட்சையாக போட்டியிட ரூபாய் நோட்டு மாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

பின்னர் அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை ரூ.10 ஆயிரத்தை சில்லரை காசுகளை மூட்டையாக கொண்டு வந்து தேர்தல் அலுவலரிடம் வழங்கினார். அதற்கு அடுத்தபடியாக தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் நூர் முகமது, ராஜேந்திரன் ஆகியோரும் சுயேட்சையாக போட்டியிட தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
- நிலத்தடி நீர் நிறம் மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஏராளமான சாய ஆலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீர் நிறம் மாறி பெட்ரோல் நிறத்தில் நுரையுடன் வெளி வருகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் விவசாயம் மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு அப்பகுதி விவசாயிகள்- பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நிலத்தடி நீர் நிறம் மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியது:- கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது லட்சுமி நகர், அபிராமி நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான சாய ஆலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. மழை பெய்யும் போது சாய கழிவுநீரை நேரடியாக திறந்து விடுகின்றனர். இதன் காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீர் மாசடைந்து நிறம் மாறி வருகிறது. அதனை பயன்படுத்திய சிலருக்கு சரும நோய்கள் ஏற்பட்டுள்ளது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாய ஆலை கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.
- 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும்.
- 25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
சென்னை:
வேளாண் - உழவர் நலத்துறை அமைச்சசர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், உணவு உற்பத்தியை பெருக்கவும், உழவர் பெருமக்களின் வருமானத்தை அதிகமாக ஈட்டவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொலைநோக்குத் திட்டங்களை இவ்வரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை நீர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி திறந்து விடப்படுவது மரபு. எதிர்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலந்தாழ்த்தி இருப்பதால் இந்த ஆண்டு 2024 மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்து விட கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது மிகுந்த மனவேதனையை தந்தாலும் வேளாண் மக்களின் நலனை முன்நிறுத்தி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதி கீழ்க்கண்டவாறு வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
1,00,000 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூ.3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும்.
நெற்பயிர் எந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும்.
நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 லட்சம் வழங்கப்படும். அதோடு, துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, ஏக்கருக்கு ரூ. 250 வீதம், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
பயறு வகைப் பயிர்களை 10,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்கவும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியும், பயறுவகைப் பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கருக்கு நுண்ணூட்டச்சத்து வழங்கிட ரூபாய் 20 லட்சம் நிதியும் வழங்கப்படும்.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை உழுவை, களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடிக் கலப்பை, பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி, ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்கிட மானியமாக ரூ.7 கோடியே 52 லட்சம் நிதி வழங்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் வேளாண்பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேற்கண்டவாறு, அரசு நிதியிலிருந்து நிதி பெற்றும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வரும் 18-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 16, 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 18-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 19, 20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 18-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
- கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார்.
- அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இந்த கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார். அந்த தேங்காயில் 4 சில் இருந்தது.
வழக்கமாக ஒரு தேங்காய் உடைக்கும் போது அதில் 2 சில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தேங்காயில் 4 சில் இருந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இந்த அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
- மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால் தங்கள் பகுதியின் நீர் ஆதாரம் பாதிப்பதாக குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 25-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த பேட்டியின் விபரம் பின்வருமாறு:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்கக்கூடாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வரை வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆம்னி பஸ்கள் இயக்க முடியாது. இதனை மீறி இயக்கினால் அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்.
தமிழகத்திற்கு ஏற்கனவே 2000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 850 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மாதந்தோறும் 200 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 2200 புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு புதிதாக 3000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் தமிழகத்திற்கு புதிதாக 7200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநகர தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, வக்கில்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- தனித்தன்மைக் கொண்ட விளையாட்டில் சாதனை புரிந்த நபர்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாாகும்.
சென்னை:
2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அனுசுயாதேவி (பொறுப்பு) அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல்,பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த கீழ்க்காணும் தகுதிகள் உடைய தனித்தன்மைக் கொண்ட விளையாட்டில் சாதனை புரிந்த நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
பத்ம விருதிற்கு awards.gov.in, padmaawards.gov.in ஆகிய இணைய தள முகவரியில் வண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாாகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை அலுவலக நேரங்களில் 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அன்னியூர் சிவா தி.மு.க. சார்பில் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டின.
இருப்பினும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதுமே முதல் ஆளாக வேட்பாளரை தி.மு.க. அறிவித்தது. அன்னியூர் சிவா தி.மு.க. சார்பில் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அடுத்ததாக, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமைலை தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் ஒருமித்த முடிவின்படி பா.ம.க. போட்டி எனவும் பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, பா.ம.க. வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை டாக்டர் ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.






